ஐபிஎல் போட்டி இப்போதுதான் சூடுபிடிக்கிறது. அன்று 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகரமாக விரட்டி வரலாறு படைத்தது, நேற்று துபாயில் ஆர்சிபி அணியின் 201 ரன்கள் இலக்கை விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது.
கிரன் பொலார்ட் 24 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும், இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் உடன் 99 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதம் எடுக்காமல் அவுட் ஆனார். ஆடம் ஸாம்ப்பா, சாஹல் ஆகியோரது 2 ஓவர்களில் 49 ரன்கள் விளாசப்பட்டது. இஷான் கிஷன் 99-ல் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவை, அப்போது பொலார்ட் ஷாட் நான்குக்குச் சென்றது இதனையடுத்து ஆட்டம் டை ஆனது. கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி 79 ரன்களை விட்டுக் கொடுத்தது.
ஆர்ச்பியின் பீல்டிங் மீண்டும் படுசொதப்பல் முக்கிய கட்டத்தில் பொலார்டுக்கு கேட்சை விட்டனர், இதனால் தோல்வி ஏற்பட்டது, நெகி கேட்சை விட்டதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 22 ரன்கள் கூடுதல் பலன் பெற்றது, இஷான் கிஷனுக்கும் கேட்ச் விடப்பட்டது, கோலியே ஆர்சிபி பீல்டிங் மேம்பட வேண்டும் என்றார். இவரே அன்று 2 கேட்ச்களை ராகுலுக்கு விட்டது வேறுகதை!
சூப்பர் ஓவரில் ஆர்சிபியின் நவ்தீப் சைனி அபாரமாக வீசி 1 விக்கெட்டுக்கு 7 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இத்தனைக்கும் இவர் வீசியது பொலார்ட், ஹர்திக், ரோஹித் சர்மாவுக்கு. 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட் கோலியும், ஏ.பி.டிவில்லியர்ஸும் இறங்கினர், ரெகுலர் ஆட்டத்தில் 4 ஓவர்களில் விக்கெட்டே இல்லாமல் 42 ரன்கள் கொடுத்த பும்ரா சூப்பர் ஓவரை வீசினார்.
» முருகன் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் சரியாகப் பயன்படுத்தவில்லை: சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்
» ‘ஹீரோ’ ராகுல் திவேஷியா போல 2020 மாறட்டும்: ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டர்
ஃபைன்லெக் பீல்டரை அருகே நிறுத்தி ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு பவுன்சர் வீசும் உத்தியை பும்ரா கடைப்பிடிக்க பந்து முறையாக பவுண்டரிக்கு அனுப்பப்பட்டது. கடைசியில் விராட் கோலி வின்னிங் ஷாட் அடிக்க ஆர்சிபிக்கு 2வது வெற்றி கிடைத்தது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் ஆர்சிபி அணியை பேட் செய்ய அழைத்தது. ஆர்சிபி அணியில் ஆடம் ஸாம்ப்பா, இசுரு உதனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பிஞ்ச், படிக்கால் நல்ல அடித்தளம் அமைக்க, டிவில்லியர்ஸ் மீண்டும் விளாசல்:
படிக்கால் நிதானம் கடைப்பிடிக்க இந்த முறை ஏரோன் பிஞ்ச் வெளுத்து வாங்கினார். ஒரு பந்து இவரைத் தாக்கினாலும் ட்ரெண்ட் போல்ட்டை மிகப்பெரிய சிக்ஸ் அடித்து அடுத்த 2 ஓவர்களில் பிஞ்ச் 4 பவுண்டரிகளை விளாசினார். பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ஆர்சிபி 50 ரன்களைக் கடக்கும் போது பிஞ்ச் 40 ரன்களிலும் படிக்கால் 14 ரன்களிலும் இருந்தனர். ராஹுல் சாஹரை ஒரு அபார ஸ்வீப் மூலம் ஏரோன் பிஞ்ச் அரைசதம் கண்டார். 9வது ஓவரில் ட்ரெண்ட் போல்ட்டின் ஸ்லோ பந்துக்கு பொலார்டிடம் கேட்ச் ஆகி பிஞ்ச் 35 பந்துகளில் 52 ரன்களில் வெளியேறினார், இதில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸ் அடங்கும்.
அடுத்த 2 ஓவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் சற்றே இறுக்கியது. விராட் கோலி மீண்டும் பேட்டிங்கில் ஒரு சொதப்பல் இன்னிங்ஸ். 3 ரன்களுக்கு 11 பந்துகள் எடுத்துக் கொண்டு மிகவும் சாதாரண சாஹர் பந்தில் மிகவும் சாதாரணமாக எக்ஸ்ட்ரா கவரில் தூக்கிக் கையில் கொடுத்து விட்டுப் போனார். 13வது ஓவரில் ஸ்கோர் 92/2 என்று இருந்தது.
ஆனால் படிக்கால் உள்ளே புகுந்தார், மிக அபாரமான பேட்டிங்கில் 14வது ஓவரில் ஜேம்ஸ் பேட்டின்சனை 2 சிக்சர்கள் விளாசினார். ஆர்சிபி 110 ரன்களுக்கு வந்தது. தேவ்தத் படிக்கால் தன் 2வது அரைசதத்தை எடுத்தார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் இறங்கினார், தன் பாணிக்கு எந்த ஒரு தயக்கமும் தடையும் இல்லாமல் திரும்பி இறங்கியவுடனேயே 2 பவுண்டரிகள் பிறகு பும்ரா ஓவரில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசினார். இதன் மூலம் ஆர்சிபி 150 ரன்களைக் கடந்தது. படிக்காலும் டிவிலியர்ஸும் இணைந்து 29 பந்துகளில் 62 ரன்களைச் சேர்த்தனர், அப்போது படிக்கால் 40 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 54 ரன்களில் போல்ட் பந்தில் அபார பீல்டர் பொலார்டிடம் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பும்ரா மீது டிவில்லியர்ஸுக்கு என்ன காட்டம் என்று தெரியவில்லை, 19வது ஓவரில் மீண்டும் டிவில்லியர்ஸ் 17 ரன்களை விளாசினார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சரில் அரைசதம் கடந்தார் ஏபிடிவில்லியர்ஸ். ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடிக்க ஸ்கோர் 180 ரன்களைக் கடந்தது. கடைசி ஓவரில் ஷிவம் துபே பேட்டின்சனை 3 அரக்க சிக்சர்களை விளாச ஸ்கோர் 200 ரன்களைக் கடந்து 201/3 என்று பெரிய இலக்கானது. 24 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் டிவில்லியர்ஸ் 55 ரன்களுடனும் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ஷிவம் துபே 10 பந்துகளில் 27 ரன்களுடனும் நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பும்ரா மீண்டும் சொதப்பலாகி 4 ஒவர் 42 ரன்களையும் ஆஸி.யின் பேட்டின்சன் 4 ஓவர் 51 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். ராகுல் சாஹர் மிக அருமை 4 ஓவர் 31 ரன் ஒரு விக்கெட்.
மும்பை இந்தியன்ஸ் 39/3லிருந்து பொலார்ட், இஷான் கிஷன் அதிரடியில் ‘டை’:
202 ரன்கள் இலக்கை விரட்ட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவின் மட்டையிலிருந்து ரன்கள் தேவை, ஆர்சிபிக்கு இவரது விக்கெட் தேவை. ஆர்சிபியின் இந்தத் தேவையை வாஷிங்டன் சுந்தர் பூர்த்தி செய்தார், ரோஹித் சர்மாவை 8 ரன்களில் சுந்தர் வெளியேற்றினார். ஏற்கெனவே ஒரு சிக்சரை அடித்திருந்த ரோஹித் சர்மாவை பதிலி வீரர் பவன் நெகி கேட்ச் ஆகி வெளியேற்றினார்.
இசுரு உதனா, மும்பை பார்ம் வீரர் சூர்ய குமார் யாதவ்வை டக் அவுட் ஆக்கினார், ஏபிடி கேட்ச் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் மிகப்பிரமாதமாக வீசி டைட் ஆக்கினார். மும்பை திணறியது. ஆஃப் ஸ்பின்னர் சுந்தர் 3 ஓவர்களில் 7 ரன்களையே கொடுத்தார்.
7வது ஓவரில் சாஹல் கொண்டு வரப்பட்டார். முதல் ஒவரிலேயே அதிரடி வீரர் டீ காக் (14 ரன் 15 பந்து) விக்கெட்டை சாஹல் காலி செய்தார். பிறகு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா (15 ரன்கள், 13 பந்து ஒரு சிக்ஸ்) இஷன கிஷன் 39 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஆடம் ஸாம்ப்பா, ஹர்திக் பாண்டியாவை 12வது ஓவரில் வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் 78/4 என்று ஆனது.
இஷான் கிஷன் 4 சிக்சர்களை விளாசி 39 பந்துகளில் அரைசதம் கண்டார். 16 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 122/4 என்று கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 80 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டது.
அப்போதுதான், பொலார்ட், ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்.. என்று நான் நினைத்தால் எப்போது வேண்டுமானலும் சிக்ஸ் அடிப்பேன் என்றவாறு ஆடம் ஸாம்ப்பா (4 ஒவர் 53 ரன்)வீசிய 17வது ஓவரில் 27 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடங்கும்.
3 ஒவர்களில் 53 ரன்கள் தேவை. 20 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்த பொலார்ட் 2 சிக்சர்களை விளாசினார். சாஹலில் கடைசி ஓவரில் இஷன கிஷன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 22 ரன்கள் வந்தது. இதனையடுத்து கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் மும்பை இந்தியன்ஸுக்குத் தேவைப்பட்டது.
நவ்தீப் சைனி அப்போது முதல் 4 பந்துகளில் 5 ரன்களையே கொடுத்தார். ஆனால் 5வது பந்தை இஷான் கிஷன் சிக்ஸ் அடிக்க கடைசி பந்தில் சிங்கிள் எடுத்தார்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. இசுரு உதனா வீசினார். முதல் 2 பந்தில் 2 ரன்கள்தான். அடுத்த பந்தில் லாங் ஆஃபில் குர்கீரத் சிங் மான் கேட்சை விட இஷான் கிஷன் ஷாட் சிக்ஸ் ஆனது. மீண்டும் இஷான் கிஷன் ஒரு சிக்சரை அடித்து 99 ரன்களுக்கு வந்தார். கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை, கிஷன் 1 ரன் எடுத்தால் சதம். ஆனால் அவர் ஆடிய பிக் ஹிட் கேட்ச் ஆக 99-ல் வெளியேறினார். பொலார்ட் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்தார். ஒரு பந்தில் 5 ரன்கள் தேவை, பொலார்ட் பவுண்டரிதான் அடிக்க முடிந்தது ஸ்கோர் 201/5 என்று டை ஆனது. ஆர்சிபி தரப்பில் உதனால் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் அதியற்புதமாக வீசி 4 ஓவர் 12 ரன்கள் 1 விக்கெட் என்றும், சாஹல், சாம்ப்பா 8 ஒவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்து முறையே ஒரு விக்கெட்டையும் கைப்பற்ரினர்.
சூப்பர் ஓவரில் மீண்டும் சைனி அபாரமாக வீசினார், 7 ரன்களையே விட்டுக் கொடுத்து பொலார்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் சர்மா பும்ராவிடம் பந்தைக் கொடுத்து தவறு செய்தார், ட்ரெண்ட் போல்ட்டிடம் கொடுத்திருக்க வேண்டும். பும்ரா முதல் 2 பந்துகளில் 2 ரன்களையே கொடுத்தார். அப்போதுதான் பைன்லெக்கை அருகே நிற்க வைத்துக் கொண்டு ஏபிடிக்கு பவுன்சரை வீசலாமா, வீசினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது, பிறகு விராட் கோலி வின்னிங் பவுண்டரி அடிக்க ஆர்சிபிக்கு அபாரமான வெற்றி கிட்டியது. ஆட்ட நாயகனாக ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் உண்மையில் வாஷிங்டன் சுந்தருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago