ராஜஸ்தான் ராயல்ஸ் வரலாற்று வெற்றி:11 பந்துகள் 8 சிக்ஸர்கள்: ஆட்டத்தை மாற்றிய ராகுல் திவேஷியா;சாம்ஸன், ஸ்மித் காட்டடி ஆட்டம்

By க.போத்திராஜ்

ராகுல் திவேஷியாவின் கடைசிநேர சிக்ஸர்கள், சஞ்சுசாம்ஸன், ஸ்மித்தின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சரின் சிக்ஸர்கள் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்ெகட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. இமாலய இலக்கான 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் என வரலாற்று சேஸிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நேற்று சேஸிங் செய்த ஸ்கோர்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங்காகும். இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 215 ரன்களை ராஜஸ்தான் அணி சேஸிங் செய்திருந்திருந்தது. இப்போது தனது சாதனையை தானே முறியடித்தது.

இந்த ஆட்டத்தை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ராஜஸ்தான் அணி சேஸிங் செய்ய வந்தபின் ஒவ்வொரு ஓவரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. டி20 போட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று 15 ஓவர்களுக்கு மேல் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்தது.

ரசிகர்கள் மட்டும் இந்த போட்டியை நேரில் காண நேர்ந்திருந்தால் சிக்ஸர் மழையை பார்த்திருப்பார்கள். இரு அணிகளும் சேர்ந்து 29 சிக்ஸர்களை விளாசின. இதில் ராஜஸ்தான் அணி 18 சிக்ஸர்களும், பஞ்சாப் அணி 11 சிக்ஸர்களும் விளாசின.

மும்மூர்த்திகள்...

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே கேப்டன் ஸ்மித், சஞ்சு சாம்ஸன், ராகுல் திவேஷியா, ஆர்ச்சர் ஆகியோரைத்தான் கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தின் போக்கை கடைசி 3-வது ஓவரிலிருந்து திவேஷியாவும், ஆர்ச்சரும் மாற்றிவிட்டனர்.

தொடர்ந்து 2-வது ஆட்டநாயகன் விருது

களத்தில் இறங்கியது முதல் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, 42 பந்துகளில் 85 ரன்கள்(7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சேர்த்த சஞ்சு சாம்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக பெறும் 2-வது ஆட்டநாயகன் விருதாகும். சிஎஸ்கே அணியை நொறுக்கி அள்ளியபோட்டியிலும் சாம்ஸன் ஆட்டநாயன் விருது பெற்றார்.

ஆட்டத்தை மாற்றிய திவேஷியா

அதிலும் ராகுல் திவேஷியாவுக்கு சிக்ஸர்கள் அடிக்கும் திறமை உண்டு என்பதாலும், களத்தில் உள்ள வலதுகை பேட்ஸ்மேன் சாம்ஸனுக்குஜோடியாக இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதாலும் திவேஷியா களமிறக்கப்பட்டார்.

ஆனால், திவேஷியா தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான பந்துகளை எடுத்துக்கொண்டார். 19 பந்துகளில் 8ரன்கள் மட்டுேம சேர்த்தால் ஆட்டத்தில் அழுத்தம் கூடியது.

ஒருபுறம் சாம்ஸனுக்கு வாய்ப்பு தராமல் பந்துகளை வீணடித்தார் திவேஷியா. இவரை யார் களமிறக்கியது, ஆட்டமிழந்து செல்ல வேண்டியதுதானே என்று வர்ணனையாளர்களே பேசும் அளவுக்கு திவேஷியா பொறுமையைச் சோதித்தார்.

ஆனால், சாம்ஸன் ஆட்டமிழந்தபின் ராஜஸ்தான் ஆட்டம் முடிந்துவிட்டதாகவே பெரும்பாலும் எண்ணினர்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 18 பந்துகளில் 51 ரன்கள் தேவைப்பட்டது. காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் திவேஷியா ருத்தரதாண்டவம் ஆடினார்.

லாங்கான் லெக்கில் ஒரு சிக்ஸர், ஃபுல்டாஸில் ஒரு சிக்ஸர், வைட் லாங்ஆனில் ஒருசி்க்ஸர், மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸர் என 4 சிக்ஸர்கள், 5-வது பந்து டாட் பால், 6-வது பந்தில் மறுபடியும் மிட் விக்கெட்டில் ஒருசிக்ஸர் என ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி 30 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே திவேஷியா மாற்றினார். அதிரடியாக ஆடிய திவேஷியா 31 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

ஒட்டுமொத்தத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிரூபித்துவிட்டது.

வரலாற்றுக் கூட்டணி

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியிலும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்து முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக முதல் விக்கெட்டுக்கு ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி எனப் பெயர் பெற்றனர்.

இதற்கு முன் கடந்த 2017-ல் உத்தப்பா, கம்பீர் ஜோடி 158 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 45 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் எனும் பெருமையை அகர்வால் பெற்றார். இதற்கு முந் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது.

இவ்வளவு சாதனைகள் புரிந்தும், அகர்வால் சதம் அடித்தும் அனைத்தையும் ராஜஸ்தான் அணியின் மூன்று வீரர்கள் சேர்ந்து சிதைத்துவிட்டனர். அகர்வாலின் சதம் அடங்கிப்போனது.

இமாலய இலக்கு

224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஸ்மித், பட்லர் களமிறங்கினர். ரன் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் ஸ்மித் அடித்து ஆடினார். ஆனால் பட்லர் அடித்து ஆட முற்பட்டு காட்ரெல் வீசிய 3-வது ஓவரில் ஸ்குயர் லெக் திசையில் சர்பிராஸ் கானிடம்கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சாம்ஸன் வந்து ஸ்மித்துடன் சேர்ந்தார். தான் சந்தித்த 2-வது பந்திலேயே சிக்ஸர் விளாசி ரன் கணக்கை தொடங்கினார். சாம்ஸன் வந்தபின், ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஸ்மித், சாம்ஸன் இருவரும் சிக்ஸர், பவுண்டரி என விளாசி தள்ளினர். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது.

பூரனின் அபாரமான கேட்ச் முயற்சி

அஸ்வின் வீசிய 8-வது ஓவரின் 3-வது பந்தில் சாம்ஸ்ன் அடித்த பந்து சிக்ஸருக்கு செல்ல முயன்றதை பூரன் கேட்சாகப்பிடித்தார். ஆனால், எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்துவிட முயன்றபோது பந்தை தூக்கிவீசிவிட்டார். இதனால் சாம்ஸன் விக்கெட்டும் தப்பித்தது, சிக்ஸரும் தடுக்கப்பட்டது. பூரனின் பீல்டிங் அற்புதமாக இருந்தது.

நீசம் வீசிய 9வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார். 27 பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்மித் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்தனர்.

9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எட்டியது.

ஆட்டம் மந்தம்

ராகுல் திவேஷியா 3-வது விக்கெட்டுக்கு வந்தார். பேட்ஸ்மேன் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்பதால், திடீரென திவேஷியாவை களமிறக்கினர்.

10-வது ஓவரிலிருந்து 15-வது ஓவர் வரை மேக்ஸ்வெல், பிஷ்னோய் ஓவரில் ரன் சேர்க்க, சாம்ஸனும், திவேஷியாவும் திணறினர். இதில் திவேஷியா ஏராளமான பந்துகளை வீணடித்தார். அதிரடியாக பேட் செய்த சாம்ஸன் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது அரைசதமாகும்.

சாம்ஸன் அதிரடி

கடைசி 6ஓவர்களில் வெற்றிக்கு 92 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின் கியரை மாற்றினார் சாம்ஸன். மேக்ஸ்வெல் வீசிய 16வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்களை சாம்ஸன் சேர்த்தார்.

4 ஓவர்களுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய 17-வது ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 42 பந்துகளில் 85ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். 3-வது விக்்கெட்டுக்கு திவேஷியா, சாம்ஸன் ஜோடி 61 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து உத்தப்பா களமிறங்கினார். ஷமி ஓவரில்இரு பவுண்டரிகளை உத்தப்பா விளாசினார்.

திவேஷியா அரைசதம்

18 பந்துகளில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியொரு சம்பவம் நடக்கப்போகிறது என யாரும் நினைக்கவேயில்லை. காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் திவேஷியா தொடர்ந்து 4 சிக்ஸர்கள், 5வது பந்தை வி்ட்டு மீண்டும் ஒரு சிக்ஸ் என 30 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஷமி வீசிய 19-வது ஓவரில் உத்தப்பா 9ரன்கள் சேர்த்த நிலையில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பா, திவேஷியா ஜோடி 43 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.

அடுத்துவந்த ஆர்ச்சர் அதிரடியாக இரு சிக்ஸர்களையும், திவேஷியா ஒரு சிஸ்கரும் என ஷமி ஓவரை பொளந்துகட்டினர்.

பேட்டிங்கில் மிரட்டிய திவேஷியா 31 பந்துகளில் முதல் அரைசதத்தை அடித்தார். ஷமியின் அந்த ஓவரின் கடைப்பந்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். திவேஷியா 31 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

டாம் கரன் முடித்தார்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. முருகன் அஸ்வின் கடைசி ஓவரை வீசினார். ரியான் பராக் தேவையில்லாமல் ஸ்வீப்ஷாட் ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டாம்கரன் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.

ஆர்ச்சர் 13ரன்களிலும், டாம்கரன்4 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து226 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அருமையான தொடக்கம்

முன்னதாக கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்தது.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 183ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் அடங்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த அகர்வால் அடுத்த 24 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டினார். கே.எல்.ராகுல் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் 13 ரன்களிலும், பூரன் 3 சிக்ஸர் உள்ளிட்ட 25 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்