கில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்; தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி: வார்னரின் முடிவைத் தவறாக்கிய கேகேஆர் 

By க.போத்திராஜ்

சுப்மான் கில், மோர்கனின் அருமையான கூட்டணி, கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சுப்மான் கில், இங்கிலாந்தின் மோர்கன் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்றது சன்ரைசர்ஸ் அணிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்தது. இருவரும் சேரந்து 92 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். அபாரமாக ஆடிய சுப்மான் கில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். முதல் போட்டியில் சொதப்பிய மோர்கன் இந்த ஆட்டத்தில் பொறுப்பாக பேட் செய்து 42 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளதில், முதலில் பேட் செய்த அணியே 7 முறை வென்றுள்ளது. முதல் முறையாக சேஸிங் செய்து ஒரு அணி வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை டாஸ் வென்ற அனைத்து கேப்டன்களும் சேஸிங் செய்யவே விரும்பிய நிலையில், முதல் முறையாக வார்னர் பேட்டிங் செய்ய முயன்று தனது முடிவு தவறானது என்று நிரூபித்துள்ளார்.

இதன் மூலம் 7-வது முறையாக டாஸ் வென்ற அணி, தோல்வி அடைந்துள்ளது. அதாவது டாஸ் வெல்லும் அணி தோற்கும் என்ற ஃபார்முலா தொடர்ந்து வருகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடி வரும் நிலையில், ஒரு போட்டியில் கூட வெற்றி இல்லாத அணியாக சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது. எந்தப் பந்துவீச்சாளரை எந்த நேரத்தில், எந்த வீரருக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அனுபவத்தின் மூலம் கச்சிதமாகப் பயன்படுத்தினார்.

சுனில் நரேன், கம்மின்ஸ் இருவரும் தங்கள் முதல் போட்டியில் 49 ரன்கள் அளித்த நிலையில், நேற்று சன்ரைசர்ஸ் வீரர்களைத் திணறடிக்கும் விதத்தில் மிகத்துல்லியமாகப் பந்துவீசினர். சர்வதேச தரமான பந்துவீச்சாளர் என்பதை கம்மின்ஸ் நிரூபித்துவிட்டார். நரேன் 4 ஓவர்கள் வீசி 31 ரன்களும், கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து முக்கியமான பேர்ஸ்டோ விக்கெட்டையும் பறித்தார்.

தமிழக அணியைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தார் தினேஷ் கார்த்திக். அவரி்ன் நம்பிக்கையைப் பெற்று, சிறப்பாகப் பந்துவீசிய வருண், 4 ஓவர்கள் வீசி முக்கியமான வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே வருண், விக்கெட்டை வீழ்த்தினார்.

கடந்த போட்டியில் மோசமாகப் பந்துவீசிய குல்தீப் யாதவுக்கு இந்த முறை 2 ஓவர்கள் தரப்பட்டன. ஆன்ட்ரூ ரஸல் இரு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் தனது அனுபவத்தால், நிலைத்து ஆடி வந்த மணிஷ் பாண்டேவை ஆட்டமிழக்கச் செய்தார்.

சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த நேற்று தினேஷ் கார்த்திக் 7 பந்துவீச்சாளர்களைப் பிரித்துப் பிரித்துப் பயன்படுத்தினார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சன்ரைசர்ஸ் அணி வீரர்களால் பலதரப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது தெரிந்தது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இன்னும் சுனில் நரேனைத் தொடக்கவரிசையில் இறக்கி தினேஷ் கார்த்திக் தொடர்ந்து தவறு செய்கிறார். நரேன் தொழில்ரீதியாக தொடக்க ஆட்டக்காரர் அல்ல. அதிர்ஷ்டத்தால் மட்டுமே ஏதோ ஒருபோட்டியில் அடித்து ஆடுகறார். நரேனுக்குப் பதிலாக ராணாவையும், சுப்மான் கில்லையும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கினால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் நரேன் சொதப்பிவிட்டார்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை நடுவரிசை பேட்டிங் பலவீனமாகவே இருக்கிறது. பந்துவீச்சில் ரஷித் கான், முகமது நபி மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் அதன்பின் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறியது ஏன் எனத் தெரியவில்லை. வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட கேகேஆர் அணியை வீழ்த்தப் போதுமான வலுவான பந்துவீச்சாளர்கள் இல்லை.

143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கேகேஆர் அணி களமிறங்கியது. நரேன் இந்த முறையும் சொதப்பி டக்அவுட்டில் வெளியேறினார். நடராஜன் பந்துவீச்சில் ராணா (26), ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி தினேஷ் கார்த்திக் (0) ஆட்டமிழந்தனர். 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.

ஆனால், 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், மோர்கன் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். பவர்ப்ளேயில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது.

சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து வீரர்களின் பந்துவீச்சையும் இருவரும் அடித்து துவம்சம் செய்தனர். இருவரின் விக்கெட்டையும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை.

அதிரடியாக ஆடிய கில் 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். துணையாக ஆடிய மோர்கன், தனது அனுபவத்தால், ஸ்கோரை மெதுவாக உயர்த்தி வெற்றிக்குத் துணையாகஇருந்தார்.

மோர்கன் 42, கில் 62 பந்துகளில் 70 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர். இருவரும் சேர்ந்து 92 ரன்கள் சேர்த்தனர்.

சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித்கான், நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினர்.

ஆபத்தான ஜோடியை விரைவாகப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி நரேன், கம்மின்ஸைப் பயன்படுத்தினார் தினேஷ் கார்த்திக். நரேன், கம்மின்ஸ் இருவரும் மிகவும் நெருக்கடி தரும்வகையில் துல்லியமாகப் பந்துவீசினர். ரன் சேர்க்க வார்னர், பேர்ஸ்டோ திணறினர்.

பேர்ஸ்டோ 5 ரன்களில் கம்மின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து மணிஷ் பாண்டே வந்து, வார்னருடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தது.

வருண் வீசிய 10-வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் அவரிடமே கேட்ச் கொடுத்து, 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நீண்ட நாட்களுக்குப் பின் களமிறங்கிய விரிதுமான் சாஹா, மணிஷ் பாண்டே கூட்டணி ஓரளவுக்கு நிலைத்தனர்.

நிதானமாக ஆடிய பாண்டே, அரை சதம் அடித்தார். ரஸல் வீசிய ஃபுல்டாஸ் பந்தை அடிக்க முற்பட்டு ரஸலிடேமே கேட்ச் கொடுத்து 38 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து பாண்டே ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். சாஹா 30 ரன்களில் ரன் அவுட் ஆனார். முகமது நபி 11 ரன்களிலும், சர்மா 2 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்