ரோஹித் சர்மாவின் அற்புதமான அரைசதம், ஃபார்முக்கு வந்த பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
54 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 80 ரன்கள் சேர்த்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா தனது 200-வது சிக்ஸரை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிகமான சிக்ஸர்களை அடித்த கேப்டன்களில் தோனியைப் பிடிக்க இன்னும் 12 சிக்ஸர்கள்தான் தேவைப்படுகிறது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான தோல்வியால் நெருக்கடிக்கு ஆளாகி இருந்த ரோஹித் சர்மா இந்த வெற்றி மூலம் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்திருந்தது. அந்த தோல்விகளுக்கு இந்தப் போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை அணி.
தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 18 ஓவர்கள் வரை நின்று அணிக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்தார். கேகேஆர் அணி வீரர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை எல்லாம் ரோஹித் சர்மா வெளுத்து சிக்ஸர்களாக விளாசினார். கேகேஆர் அணியின் மோசமான பந்துவீச்சு மும்பையின் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.
தொடக்கத்திலேயே டீக்காக் வி்க்கெட்டை இழந்தாலும், 2-வதுவிக்கெட்டுக்கு வந்த சூர்யகுமார் யாதவ்(47), ரோஹித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதன்பின்பு வந்த சவுரவ் திவாரி(21), ஹர்திக் பாண்டியா(18) பொலார்ட்(13) ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை என்றாலும், கடைசி 8 ஓவர்களில் 90 ரன்களைச் சேர்த்து ஆறுதல் அடைந்தது மும்பைஅணி.
இதில் கேகேஆர் வீரர் நிதின் ராணாவின் விக்கெட்டை பொலார்ட் வீழ்த்தியதன் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குப்பின் இப்போதுதான் முதல் விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சி அடைந்தார்.
மும்பை அணி பந்துவீச்சில் திட்டமிட்டு செயல்பட்டது. கேகேஆர் அணியின் பேட்ஸ்மேன்கள் யார் இறங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து பந்துவீச்சை மாற்றினார் ரோஹித் சர்்மா. குறிப்பாக பும்ராவுக்கு தொடக்கத்தில் ஒரு ஓவர் கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார். 16வது ஓவர் வீசிய பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சில் ரஸல், மோர்கன் விக்கெட்டை காலி செய்தார்.
கம்மின்ஸுக்கு பந்துவீசும்வரை பும்ரா 3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையான பந்துவீ்ச்சை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் பும்ராஓவரில் 4 சிக்ஸர்களை விளாசியதால் பும்ரா கணக்கில் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் ஏறியது.
பொலார்ட், பட்டின்ஸன், போல்ட் மூவரும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். ராகுல் சாஹரும் ஓவருக்கு 6 ரன்கள் வீதமே கொடுத்திருந்தார். ஒட்டுமொத்ததில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டு தங்கள் யார்கர்களையும், ஷார்ட் பந்துகளையும், ஸ்லோபால்களையும் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தாற்போல் பந்துவீசியதால், கேகேஆர் அணியின் விக்கெட்டுகளும் விரைவாக விழுந்தன, ரன்களையும் கட்டுப்படுத்தினர்.
மும்பை அணியில் போல்ட், பட்டின்ஸன், பும்ரா, சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், பொலார்ட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கேகேஆர் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எவ்வாறு பீல்டிங்கை மற்றி வைக்க வேண்டும் எனும் பணியை நேற்று பொலார்ட் கச்சிதமாகச் செய்ததால், ரன்கள் எடுப்பதற்கு கேகேஆர் அணி திணறினார்கள்.
கேகேஆர் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது.
அதிலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் வெளுத்து வாங்குகிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஷார்ட் பிட்சாக வீசியதை என்னவென்று சொல்வது. தேர்ந்த சர்வதேச பந்துவீச்சாளர்களைப் போல் அல்லாமல் அனுபவமற்ற பந்துவீச்சு போல் இருந்தது.
ஏலத்தில் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் பந்துவீச்சும் நேற்று எடுபடவில்லை. தனிமைப்படுத்துதலில் இருந்துவிட்டு நேரடியாக போட்டிக்கு வந்ததால், வெப்பம் உடலுக்குஒத்துழைக்கவில்லை என்று கேப்டன் கார்த்திக் கூறினார். 49 ரன்களை கம்மின்ஸ் வாரி வழங்கினாலும், பேட்டிங்கில் பும்ரா ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி வியப்பை ஏற்படுத்தினார்.
கொல்கத்தா அணியில் சுனில்நரேன் ஒருவர் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் கொடுத்தனர். மோசமான பந்துவீச்சு தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும். உதிரிகள் வீதத்தில் 14 ரன்களை கேகேஆர் பந்துவீ்ச்சாளர்கள் வழங்கி பொறுப்பற்ற பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
பேட்டிங்கிலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. தினேஷ் கார்த்திக்(30),ராணா(24), கம்மின்ஸ்(33) ஆகியோர் மட்டுமே ரன்கள் சேர்த்தனர். ஆனால், இவை வெற்றிக்கு போதுமான ரன்கள் இல்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில்(7), நரேன்(9) ரஸல்(11),மோர்கன்(16) ஆகியோர் விரைவாக வெளியேறியது கேகேஆர் அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்தது.
கேகேஆர் அணியில் எந்த வீரருக்கும் சிறந்த பாட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்க்கவில்லை. விக்கெட்டுகள் சரியத் தொடங்கியவுடன், ரன்ரேட் அழுத்தம் வீரர்களைத் தொற்றிக்கொண்டது. இதனால் பதற்றத்தில் அடிக்க முற்பட்டு மோர்கன், ரஸல் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். மொத்தத்தில் கேகேஆர் அணியின் அனுபவமற்ற மோசமான பந்துவீச்சு, பொறுப்பற்ற பேட்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago