துபாயில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை எதிர்த்து மோதுகிறது கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
அடுத்தடுத்து வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனும் வேட்கையில் கோலி அணி இருக்கிறது.
அதேசமயம், நடுவரின் தவறான தீர்ப்பால் முதல் வெற்றியை இழந்துவிட்ட ஆதங்கத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் வெற்றிக்காக மோதுகிறது. இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங்கில் சமபலம் கொண்ட அணிகளாக இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஜோர்டான் 2 ரன்கள் ஓடி எடுத்தபோது, அவர் கிரீஸை பேட்டால் சரியாகத் தொடவில்லை எனக் கூறி லெக் அம்பயர் ஒரு ரன்னை ரத்து செய்தார்.
இதனால் ஆட்டம் கடைசியில் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்று, அதில் பஞ்சாப் அணி தோற்றது.
ஆனால், டிவி ரீப்ளேயில் பார்த்தபோது ஜோர்டான் கிரீஸில் சரியாகத் தொட்டுச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, நடுவரின் தவறான தீர்ப்பு குறித்து பஞ்சாப் அணி நிர்வாகமும், கேப்டன் ராகுலும் ஐபிஎல் போட்டி நடுவர் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
இந்தக் கசப்பான சம்பவத்தை மறப்பதற்கு பஞ்சாப் அணிக்கு ஒரு வெற்றி அவசியம். கிங்ஸ் லெவன் அணி 12 சீசன்களில் இதுவரை 11 கேப்டன்களை மாற்றியுள்ளது. ஒருவர் மீதும் திருப்தி அடையவில்லை. 12-வது கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள கே.எல்.ராகுலுக்கு வெற்றி எனும் பெரும் அழுத்தம் விழுந்துள்ளது.
கடந்த போட்டியில் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை ராகுல் அளித்தாலும், மோகித் சர்மா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஆனால், இந்த ஆட்டத்தில் நிலையாக ஆட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
ஏலத்தில் மிக அதிகமான விலைக்கு வாங்கப்பட்ட ஆஸி. வீரர் மேக்ஸ்வெலும் கடந்த ஆட்டத்தில் ஜொலிக்கவில்லை. இந்தப் போட்டியில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து தொடரின்போது விளாசலில் ஈடுபட்ட மேக்ஸ்வெல், காட்டுத்தனமான ஃபார்மில் இருப்பதால், இந்தப் போட்டியில் விளாசலை எதிர்பார்க்கலாம்.
வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட ஆர்சிபி அணிக்கு எதிராக மோதுவதால், கெயில் களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் பூரனும் சொதப்பிவிட்டார். சூப்பர் ஓவரில் களமிறங்கி போல்டாகி ஏமாற்றிவிட்டார். ஆதலால், இன்றைய ஆட்டத்தில் பூரனும் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
கடந்த போட்டியில் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி இறுதிவரை போராடினார். ஆனால், அவருக்குத் துணையாக எந்த பேட்ஸ்மேனும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆதலால், இந்த ஆட்டத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடுவது அவசியம்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் முகமது ஷமி, பிஸ்னோய் இருவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். காட்ரெல், ஜோர்டானும் ரன்களை வாரி வழங்கினர். இந்த ஆட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசுவது அவசியம். காட்ரெலுக்குப் பதிலாக நியூஸி வீரர் ஜிம்மி நீஷத்துக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பெங்களூரு அணியைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் 2-வது ஆட்டத்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து அசத்திவிட்டார். ஆர்சிபி அணிக்கு தேவ்தத் இருப்பது கூடுதல் நம்பிக்கை அளிக்கும்.
கேப்டன் கோலி கடந்த ஆட்டத்தில் அவசரப்பட்டு தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். அவரின் அசுரத்தனமான பேட்டிங் நாளையும் இருக்கும் என நம்பலாம்.
கோலியைப் போன்ற ஜொலிக்க மறந்த வீரர் ஆரோன் பிஞ்ச். நாளைய ஆட்டத்தில் ஆரோன் நிலைத்துவிட்டால், ஆர்சிபி ஸ்கோர் உச்சத்துக்குச் சென்றுவிடும். கோலி, டிவில்லியர்ஸ், பிஞ்ச் ஆகிய 3 பேட்ஸ்மேன்களுமே மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நடுவரிசையில் இறங்கினால் விக்கெட் இன்னும் பலப்படும்.
பந்துவீச்சில் ஆர்சிபி நம்பிக்கை நாயகன் சாஹல் கடந்த ஆட்டத்தில் கலக்கிவிட்டார். பஞ்சாப் அணியின் திடீர் விக்கெட் சரிவுக்கு சாஹலின் பந்துவீ்ச்சு முக்கியக் காரணம். ஆதலால், சாஹலின் சிறப்பு பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும்.
தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் மோரிஸுக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ளதால், நாளை போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது கடைசி நேரத்தில்தான் முடிவாகும். ஒருவேளை அணிக்குள் வந்தால், கூடுதல் பலமாக அமையும்.
கடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ரன்களை வாரி வழங்கியதால், இந்தப் போட்டியில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. மேலும் நடுவரிசையைப் பலப்படுத்தி மொயின் அலியையும் களமிறக்கி ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்க கோலி பரிசீலிக்கலாம்.
ஜோஸ் பிலிப் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், பர்தீவ் படேலுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு இருக்காது.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் 24 முறை மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 12 முறையும், ஆர்சிபி அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆதலால், சமபலம் கொண்ட அணிகள் மோதுவதால், ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago