சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நொறுக்கி விட்டது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வென்ற சிஎஸ்கே, சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் அதிரடியில் 2வது போட்டியில் மண்ணைக் கவ்வியது.
லுங்கி இங்கிடி கடைசி ஓவரில் 2 நோபால்கள், ஒரு வைடு ஆகியவற்றுடன் ஆர்ச்சருக்கு 4 சிக்சர்களை தொடர்ச்சியாக வழங்கி 30 ரன்களைக் கொடுத்ததுதான் சிஎஸ்கேவின் தோல்விக்குப் பிரதான காரணம் என்றால் மிகையாகாது. தோனி இங்கிடி ஓவரைக் குறிப்பிட்டுத்தான், நோபால்களைக் கட்டுப்படுத்த வேண்டும், நோ-பால்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் 200 ரன்கள்தான் இலக்கு வென்றிருப்போம் என்ற தொனியில் தோனி ஆட்டம் முடிந்த பிறகு கூறினார்.
217 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய சிஎஸ்கே அணி பவர் ப்ளேவுக்குப் பிறகே ஆட்டத்தில் இல்லை என்றே கூற வேண்டும். காரணம் அடுத்த 21 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் 216 ரன்களை விரட்டும் போது ‘அனுபவம் கைகொடுக்கிறது’ என்று கூறும் தோனி முன்னதாக இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அவரோ சாம் கரண் (17), ருதுராஜ் கெய்க்வாட் (0), கேதார் ஜாதவ் (22) ஆகியோரையெல்லாம் இறக்கி விட்டு 14வது ஓவரில் இறங்கினார். அப்போது ஏறக்குறைய ஆட்டம் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட 6 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இறங்கினார். கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில் 3 சிக்சர்களை அடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கலாமே தவிர அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால் இந்த 3 சிக்சர்களும் மைதானத்துக்கு வெளியே சென்றது வேறு கதை.
அவர் இறங்கும் போது டுபிளெசிஸும் (37 பந்தில் 1 பவுண்டரி 7 சிக்சருடன் 72) கொஞ்சம் திணறியபடியே 18 பந்துகளில் 17 ரன்களைத்தான் எடுத்திருந்தார். பிறகுதான் டுபிளெசி ஆட்டம் வேகம் எடுத்தது, ஆனால் தோனி நெட் ரன் ரேட்டுக்கு ஆட ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது. உனாட்கட்டை டுபிளெசிஸ் 3 சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்த போதும் கடைசி 3 ஓவர்கள்ல் 58 ரன்கள் என்பது இமாலய இலக்கு. இந்த ஸ்கோரை அடிப்பதற்கு சஞ்சு சாம்சனுக்கு ஜடேஜாவும், பியூஷ் சாவ்லாவும் வாகாக ஃபுல் லெந்த்தில் நெட் பவுலிங் போட்டது போல் வீசியிருந்தால்தான் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமாகியிருந்திருக்கும்.
இந்நிலையில் 200 ரன்களில் சிஎஸ்கே முடிந்து தோல்வியடைந்தது பற்றி தோனி ஆட்டம் முடிந்து கூறியதாவது:
"நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தலும் உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டிருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
இத்தகைய பரிசோதனை முயற்சிகளை நாங்கள் நீண்ட காலமாக செய்து பார்க்கவில்லை. தொடரின் ஆரம்பத்தில்தான் சோதனைகள் செய்ய முடியும், தொடர் செல்லச்செல்ல மூத்த வீரர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஒரே பாணியை மீண்டும் மீண்டும் கடைப்பிடிக்கும் அணியாக முடிந்து விடுவோம். இங்கு சில வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க வாய்ப்பு உள்ளது, அதாவது அது பயனளித்தால் செய்து பார்க்கலாம். பயனளிக்கவில்லையா நாம் நம் பழைய பலங்களுக்கு திரும்பப் போகிறோம்.
217 ரன்கள் இலக்கு, நல்ல தொடக்கம் வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஸ்டீவ், சஞ்சு அபாரமாக ஆடினார்கள். ராஜஸ்தான் பவுலர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். நிறையப் பனிப்பொழிவிலும் எந்த லெந்தில் வீசுவது என்பதை அறிந்து வீசினர். ஸ்கோர் உள்ளது என்றால், எந்த லெந்தில் வீசுவது என்பதை நடந்து முடிந்த முதல் இன்னிங்ஸைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் ஸ்பின்னர்கள் பலதரப்பட்டதை முயற்சி செய்யாமல் இதைத்தான் செய்தனர் . மாறாக எங்கள் ஸ்பின்னர்கள் தவறிழைத்தனர்.
இந்தப் பிட்சில் விஷயம் என்னவெனில் பந்தை பேட்ஸ்மெனிடமிருந்து தள்ளி வீச வேண்டும். ஆம், அவர்கள் அடிக்கத்தான் செய்வார்கள், ஆனால் நாம் குழப்பமடையாமல் வீசலாமே. சிறிய மைதானம் ஷார்ட் பிட்ச் போட்டாலும் அடி வாங்குவோம், அதற்காக ஃபுல் லெந்தில் வீசினாலும் ஷாட்களை ஆடுவார்கள். தொடக்கத்தில் அதிகம் ஃபுல் லெந்தில் வீசி தவறிழைத்தனர், ஆனால் பிறகு நல்ல ஆட்டத்துக்கு திரும்பினோம்.
கட்டுப்படுத்தக் கூடியது என்னவெனில் நோ-பால்கள், அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இக்கட்டான நேரத்தில் வீசினாலும் நோபால்கள் வீசக்கூடாது. ஏனெனில் இதைத்தான் நாம் கட்டுப்படுத்த முடியும், எதிரணி பேட்ஸ்மென் எப்படி ஆடுகிறார் என்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது. நோ-பால்கள் வீசியிருக்காவிட்டால் 200 ரன்களைத்தான் விரட்டியிருப்போம். நல்ல ஆட்டமாகவும் இது அமைந்திருக்கும். டுபிளெசிஸ் அருமை. ஸ்பின்னர்கள் ஷார்ட் பிட்ச் வீசும் போது மிட் ஆன் மேல் தூக்கி அடிக்க வேண்டும், ஸ்கொயர் லெக் திசையில் அடிப்பது அவ்வளவு உசிதமல்ல. ஏனெனில் பந்து இங்கு தாழ்வாக வருகிறது. இந்த யோசனையில்தான் டுபிளெசிஸ் அருமையாக ஆடினார்”
இவ்வாறு கூறினார் தோனி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago