பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜொலித்த ஸ்டாய்னிஷ், ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யரின் பாட்னர்ஷிப், சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடாவின் பந்துவீச்சு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த 13-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.
திக் திக் ஆட்டம்
ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டமே ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் ஆட்டமாக நேற்று இருந்தது. ஆட்டத்தின் கடைசியில் 3 பந்துகளுக்கு முன்பு வரை அதாவது மயங்க் அகர்வால் களத்தில் இருக்கும் வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வென்றுவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி 3 பந்துகள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டன.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் டை ஆனது.
சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடா
இதையடுத்து, வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட் செய்தது. பூரன், கேஎல் ராகுல் களமிறங்கினர். சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடா வீசிய முதல் பந்தில் ராகுல் 2 ரன்கள் எடுத்தார்.
2-வது பந்து பவுன்ஸராக வர அதை தூக்கி அடிக்க முற்பட்டு ராகுல் ஆட்டமிழந்தார். 3-வது பந்தை பூரன் எதிர்கொண்டார். ரபாடாவின் துல்லியமான இன்ஸ்விங்கில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
சூப்பர் ஓவரில் 3 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் களமிறங்கினர். ஷமி வீசிய ஒருபந்து வைடாகச் சென்றதில் ஒரு ரன் கிடைத்தது. அடுத்து எளிதாக 2 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றனர்.
ஆட்டநாயகன் ஸ்டாய்னிஷ்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நேற்று பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஹீரோவாக ஒளிர்ந்தவர் மார்கஸ் ஸ்டானிஸ்தான். டெல்லி அணி 120 ரன்களைத் தாண்டுவது சந்தேகம் என்ற நிலையில், கடைசி 3 ஓவர்களில் ஸ்டாய்னிஷ் அதிரடியாக ஆடி 49 ரன்களைச் சேர்த்தார். 21 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆகினார். இதில் 3 சி்ஸ்கர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
பந்துவீச்சில் கலக்கிய ஸ்டாய்னிஷ் கடைசி 3 பந்துகளில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தை திசை திருப்பினார். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தை டாட் பந்தாகவும், 5-வது பந்தில் அகர்வால் விக்கெட்டையும், கடைசிப்பந்தில் ஜோர்டான் விக்கெட்டையும் சாய்த்து ஆட்டத்தை சமன் செய்ய ஸ்டாய்னிஷ் பங்கு முக்கியமானது.
பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஜொலித்த ஸ்டாய்னிஷ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அகர்வால் போராட்டத்துக்கு பாராட்டு
அதேசமயம், தொடக்க வீரராக களமிறங்கி, 55 ரன்களுக்கு 5 விக்கெட் என தடுமாறிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வெற்றியைத் தொடும் தொலைவு வரை கொண்டுவந்த மயங்க் அகர்வாலின் போராட்டமும் பாராட்டுக்குரியது.
அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகல் அடங்கும். மயங்க் அகர்வாலின் போராட்டத்துக்கு நேற்று சூப்பர் ஓவரிலாவது பலன் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ராகுல், பூரனும் சொதப்பிவிட்டனர்.
அஸ்வின் காயம்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், தன்னை அணியிலிருந்து கழற்றிவிட்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே பாடம் புகட்டினார். தன்னுடைய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கருண் நாயர் விக்கெட்டை சாய்த்த அஸ்வின், அதே ஓவரின் 5வது பந்தில் பூரன் விக்கெட்டை தனது கேரம் பாலில் போல்டாக்கி அனுப்பினார்.
ஆனால், கடைசிப்பந்தைத் தடுக்க முற்பட்டு தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்தார் அஸ்வின். இதனால் அடுத்த பல போட்டிகளுக்கு அஸ்வின் விளையாடுவது சந்தேகம்தான்.
ஷமி அபாரப் பந்துவீச்சு
டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. துபாய் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை முகமது ஷமி நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஷிகர் தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்திலிருந்தே பதற்றத்துடன் காணப்பட்ட தவண், 2 ஓவரிலேயே டக்அவுட்டில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹெட் மயர்(7), பிரித்வி ஷா(5) இருவரையும் ஷமி தனது அனுபமான பந்துவீச்சி்ல் எளிதாக வெளியேற்றினார்.
சரிவிலிருந்து மீட்ட ஜோடி
13 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் டெல்லி அணி திணறியது. ஆனால், 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சேர்ந்து அணியை மீட்டனர். அடுத்த 10 ஓவர்கள் வரை விக்கெட் ஏதும் விழாமல் தடுப்பாட்டத்தைக் கையாண்டதால் 12 ஓவர்கள் வரை டெல்லி அணி 6 ரன் ரேட்டுக்கும் கீழாகவே இருந்தது.
கிங்ஸ் லெவன் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் 20 வயதான ரவி பிஸ்னாய் அற்புதமான பந்துவீச்சை நேற்று வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்து ரிஷப் பந்த்(31) விக்கெட்டையும் வீழ்த்தினார்.
திருப்பிப் பார்கக் வைத்த பிஸ்னோய்
19 வயதுக்குட்ட வீரர்களுக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் கலக்கிய பிஸ்னோய் தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 4-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி 75ரன்கள் சேர்த்தனர்.
ஸ்டாய்னிஸ், ஸ்ரேயாஸ் கூட்டணியும் நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன்களில் முகமது ஷமி பந்துவீச்சில் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் கணக்கில் 3 சிக்ஸர் அடங்கும்.
அடுத்தடுத்து வந்த அக்ஸர் படேல்(6), அஸ்வின்(4) என வெளியேறினாலும், ஒருபுறம் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் கடைசிவரை நின்று தன்னை நிரூபித்தார்.
ஸ்டாய்னிஷ் அதிரடி
17-வது ஓவரில் 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியதால், 130 ரன்களை தொடுவதே கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 3 ஓவர்களில் பட்டைய கிளப்பிய ஸ்டாய்னிஸ், காட்ரெல், ஜோர்டான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பந்தை பறக்கவிட்டு, அதிரடியாக 3 ஓவர்களில் 49 ரன்களைச் சேர்த்தார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் 21 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தார். நார்ஜே 3 ரன்னிலும், ரபாடா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து. பஞ்சாப் அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும், பிஸ்னோய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
விக்கெட் சரிவு
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராகுல், அகர்வால் ஆட்டத்தைத் அதிரடியாகத் தொடங்கினர். ராகுல் ஒருசிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
புதிய பந்து, வேகப்பந்துவீச்சுக்கான ஆடுகளத்தை பயன்படுத்திக்கொண்ட மோகித் சர்மா, 5-வது ஓவரில் ராகுலை(21) க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அதன்பின் அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரிலேயே கருண் நாயர்(1), பூரன்(0) இருவரையும் பெவிலியன் அனுப்பி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
மிகவும எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்(1), சர்பிராஸ்கான்(12) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தோல்வி நோக்கி சென்றது. 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
அதிரடி ஆட்டம்
அகர்வால் 20 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் அகர்வால் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். அகர்வால், கவுதம் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தது. கவுதம் ஒத்துழைத்து ஆட அகர்வால் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்களை விளாசத் தொடங்கினார்.
கடைசி 6 ஓவர்களுகக்ு 74 ரன்கள் தேவைப்பட்டது. மோகித் சர்மாவின் 15-வது ஓவரில் சிக்ஸர்,பவுண்டரியை கவுதம் விளாசினார். ரபாடா வீசிய 16-வது ஓவரில் கவுதம் 20 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கவுதம், அகர்வால் ஜோடி இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
7-வது விக்கெட்டுக்கு ஜோர்டன் களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். நார்ஜே வீசிய 17-வது ஓவரில் இரு பவுண்டரிகள் உள்பட 11ரன்களை விளாசினார் அகர்வால்.
மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் உள்பட17 ரன்களை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரிலும் பவுண்டரிகளை அனாசயமாக அடித்த அகர்வால் 12 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பின் எல்லைக்கு கொண்டு சென்றார்.
கடைசி ஓவர் பரபரப்பு
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13ரன்கள் தேவை. ஸ்டாய்னிஷ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட அகர்வால் லாங்ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கினார். வெற்றி பஞ்சாப் பக்கம் செல்லத் தொடங்கியது. 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் அகர்வால்.
இதனால் கடைசி 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 3 பந்தில் பவுண்டரி அடிக்க அதை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் அய்யர் தவறவிட்டால் பவுண்டரி சென்றது. ஆட்டம் சமனிற்கு வந்தது.
த்ரில் 3 பந்துகள்
கடைசி 3 பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை. 4-வது பந்தை ஸ்டாய்னிஷ் டாட் பந்தாக வீசியதால் ரன் எடுக்கவில்லை. 5-வது பந்தை ஸ்வீப்பர் கவர் திசையில் அடிக்க அகர்வால் முயன்றார், ஆனால், ஹெட்மயர் கேட்ச் பிடிக்க 89 ரன்னில் அகர்வால் வெளியேறினார்.
கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவை, ஷமி களமிறங்கினார். பீல்டிங் செட் அப்பை மாற்றி அனைத்து வீரர்கலும் நெருக்கமாக வந்தனர். கடைசிப்பந்தை ஜோர்டான் எதிர்கொண்டார். ஸ்டானிஸ் லெக்சைடில் வீசிய அதை ஸ்குயர் லெக்திசையில் ஜோர்டான் அடித்தார். ஆனால், சரியான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரபாடா கையில் பந்து அடைக்கலம் சேர்ந்தது.
கடைசி 3 பந்துகளை பதற்றமின்றி வீசிய ஸாட்ானிஷ் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப் ஆட்டம் சமனில் முடிந்தது.
டெல்லி அணித் தரப்பில் ஸ்டாய்னிஷ், அஸ்வின், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago