ஐபிஎல்2020: இந்த முறையும் 'காகித கப்பல்' கேப்டனா கோலி? வார்னரின் சன்ரைசர்ஸை தாக்குப்பிடிக்குமா ஆர்சிபி அணி ? துபாய் அரங்கில் நாளை ஆட்டம்

By க.போத்திராஜ்


துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நாளை நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் வலுவில்லாத பந்துவீச்சைக் கொண்ட கோலியின் ஆர்சிபி அணி, கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படும் டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள ஒளிவிளக்குகள் "ரிங் ஆஃப் ஃபயர்" எனும் வடிவத்தில் மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும். எந்த மின்விளக்கு கோபுரமும் இருக்காது. இதனால் வீரர்கள் விளையாடும்போது, தங்களின் நிழல் தரையில் விழாதவாறு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் எனச் சொல்ல முடியாது. இரு அணிகளிலும் ஆபத்தான, எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பந்துவீச்சளவில் ஒப்பிட்டால் ஆர்சிபி அணியைவிட சன்ரைசர்ஸ் அணி வலுவாகத் திகழ்கிறது. அதேசமயம், பேட்டிங்கில் கோலியின் ஆர்சிபி அணி, சன் ரைசர்ஸ் அணிக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கிறது.

கடந்த ஆண்டு சீசனில் ஹைதராபாத்தில் ஆர்சிபி அணியை வார்னரும், பேர்ஸ்டோவும் புரட்டிப், புரட்டி எடுத்ததை நிச்சயம் கோலி மறந்திருக்கமாட்டார். இருவரின் அதிரடியையும் கட்டுப்படுத்த முடியாமல், கோலி திணறிய அந்த காட்சி இப்போது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது. நாளை அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் கோலி நாளைய ஆட்டத்தில் தடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு வார்னரும்,பேர்ஸ்டோவும் ஆர்சிபி அணிக்கு எதிராக அடித்த ஸ்கோர்தான், இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்க விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகபட்சமாகும்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை வார்னர், பேர்ஸ்டோவை நங்கூரம் பாய்ச்சவிடாமல் தொடக்கத்திலேயே கழற்றிவிட்டால் ஆர்சிபி தப்பிக்கும் இல்லாவிட்டால், ஸ்கோர் எங்குபோய் நிற்கும் எனக் கணிப்பது கடினம். வார்னர் தலைமையில் கடந்த 2016ம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதுவரை 3 முறை அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்று ஆரஞ்சு தொப்பியையும் வார்னர் பெற்றுள்ளார், கடந்த சீசனிலும் ஆரஞ்சு தொப்பி வார்னருக்கே சொந்தமானது. ஆதலால், இருவருமே ஆபத்தானவர்கள். ஆஸிக்கு எதிராக சமீபத்தில் நடந்த 3-வது ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்து பேர்ஸ்டோவும் காட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறார்.

நடுவரிசையில் மணிஷ் பாண்டே, வில்லியம்ஸன், விஜய் சங்கர், பில்லி ஸ்டேன் லேக், முகமது நபி என உள்நாட்டு, வெளிநாட்டு சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், நாளை பேர்ஸ்டோ, ரஷித்கான், வில்லியம்ஸன், மிட்ஷெல் மார்ஷ் அல்லது முகமது நபி ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

நடுவரிசைக்கு பலம் சேர்க்க மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், வில்லியம்ஸன் இருப்பது பலமாகும். இந்த முறை ஏலத்தில் சன்ரைசர்ஸ அணி அதிகமாக இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளது. விராட் சிங், அபிஷேக் சர்மா, பிரியம் கார்க், அப்துல் சமது என ஆல்ரவுண்டர்களையும்,பேட்ஸ்மேன்களையும் வாங்கியுள்ளதால், இதில் யாரை வார்னர் களமிறக்குவார் எனத் தெரியவில்லை.

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை நடுவரிசை மட்டுமே சற்று பலவீனமாக இருக்கிறது. இதில் அனுபவமிக்க வீரர் ஒருவரை நடுவரிசையில் இறக்கினால் இன்னும் வலுப்பெறும்.

துபாய் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால், நாளை வேகப்பந்து, மிதவேகப்பந்துவீச்சுக்கு வார்னர் முக்கியத்துவம் அளிப்பார் என நம்பலாம்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், விஜய் சங்கர், கலீல் அகமது, நடராஜன், சித்தார்த் கவுல், பாசில் தம்பி என வேகப்பந்துவீச்சுக்கு குறைவில்லாமல் உள்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களில் மிட்ஷெல் மார்ஷ், பில்லி ஸ்டேன்லேக் இருக்கின்றனர். இருவரில் ஆல்ரவுண்டரான மார்ஷுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது

சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை ரஷித் கான் இருப்து அணிக்கு மிகப்பெரிய பலம். முகமது நபி, ஷான்பாஸ் நதீம் ஆகியோர் இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை நம்பியிருக்கும் அளவு ரஷித்கான் பந்துவீச்சையும் நம்பியுள்ளது. ஆட்டத்தின் போக்கை எப்படி வேண்டுமானும் திருப்பும் திறமை படைத்தவர் ரஷித்கான்.

ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணிக்கு கடும் சவால் விடுக்கும் வகையில்தான் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

விராட் கோலியின் ஆர்சிபி அணி இதுவரை பல சீசன்களில் முயன்றும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் பெற முடியவில்லை. இந்த முறை அணியில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் பேட்டிங்கில் பலம்பொருந்திய அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.

குறிப்பாக ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் வருகை, கிறிஸ் மோரிஸ் போன்றவர்களால் ஆர்சிபி மீது நம்பிக்கை ஒளி வீசுகிறது. ஆர்சிபி அணியில் கோலி, பிஞ்ச், டிவில்லியர்ஸ் ஆகிய மூவருமே ஆபத்தான பேட்ஸ்மேன்கள் மூவரில் ஒருவரை நிலைக்கவி்ட்டாலே ஆட்டம் திசை திரும்பிவிடும். இவர்களை ஆட்டமிழக்கச் செய்தவது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய சவாலாகஇருக்கும்.

இந்த முறை நடுவரிசையில் தேவ்தத் படிக்கல் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர அதிரடியாக அவ்வப்போது ஆடக்கூடிய மொயின் அலி பர்தீப் படேல் இருப்பதும் நடுவரிசைக்கு ஓரளவுக்கு பலமாகும்.
வேகப்பந்துவீச்சில் ஸ்டெயின், உமேஷ் யாதவ், மோரிஸ், ஷைனி, இசுரு உதானா,முகமகு சிராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் மோரிஸ் மட்டுமே டெத் ஓவர் வீசக்கூடிய நிலையில் இப்போது இருக்கிறார்.

ஸ்டெயின் மீதான நம்பிக்கையெல்லாம் முடிந்துவிட்டது. ஆதலால் வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை மோரிஸ், ஷைனி, உமேஷ் யாதவ், ஸ்டெயின் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

சுழற்பந்துவீச்சில் யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, ஆடம் ஸம்பா, மொயின் அலி இருப்பது பலமாகும். நாளை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருப்பதால், சழற்பந்துவீச்சில் நிச்சயம், சாஹல் இருப்பார், அடுத்ததாக மொயின் அலி அல்லது சுந்தர் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் ஆர்சிபி அணியைவிட சன்ரைசர்ஸ் சற்று பலம் மிக்கதாகவும், அனுபவம் நிறைந்த வீரர்களையும் தன்னதகத்தை வைத்துள்ளது.

ஆதலால், நாளைய ஆட்டம் ஆர்சிபிக்கு நல்ல தொடக்கமாக இருக்குமா அல்லது வழக்கம் போல் காகித கப்பல் கேப்டனாகவே கோலி இருப்பாரா என்று மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்