வரலாறு படைத்தார் தோனி: ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் கேப்டன்

By க.போத்திராஜ்


மகேந்திர சிங் தோனி… இது கிரிக்கெட் உலகில் மந்திரச் சொல்.

இன்றைய இளைய தலைமுறையின் ஹீரோ, அனைத்து கிரிக்கெட் ரசிர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த கேப்டன் தோனி என்றால் மிகையில்லை.

இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று தனது முத்திரையைப் பதித்த தோனி, ஐபிஎல் தொடரிலும் தனது தடத்தை பதிக்கத் தவறவில்லை. ஐசிசி நடத்தும் 3 கோப்பைகளையும் இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் தோனி எனும் பெருமையும் தோனிக்கு உண்டு. இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற சிறப்பு பெயருக்கும் தோனியைச் சார்ந்ததே.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று தோனி செயல்பட்டு வருகிறார். கூல் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி களத்தில் கேப்டன்ஷிப் செய்யவதே தனித்துவமானது.

பேட்ஸ்மேன்களின் பலம், பலவீனம், சூழலுக்கு ஏற்ப ப ந்துவீச்சை மாற்றுதல், பீல்டிங் செட் செய்தல், இக்கட்டானநேரத்தில் யாரைப் பந்துவீசச்செய்தல் என்று முடிவு எடுப்பது, குறிப்பாக முகத்தில் பதற்றமே இல்லாமல் செயல்படுவது போன்றவை தோனியின் கேப்டன்ஷிப் திறமையை உச்சத்துக்கு கொண்டு சென்றன.

தனது கேப்டன்ஷிப்பால் சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளையும், கோப்பைகளையும் தோனி பெற்றுக்கொடுத்துள்ளார். தனி ஒருவனாக தோனி இருந்து அணியை இக்கட்டான நேரத்தில் மீட்டு வெற்றிக்கு பல போட்டிகளில் வழிகாட்டி சிறந்த ஃபினிஷராக வலம் வருகிறார்.

தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் தனது வெற்றி சதவீதத்தை 50 சதவீதத்துக்கு குறைவாக வைத்தது இல்லை. இதுவரை 166 போட்டிகளில் தோனி சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்று அதில் 100 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் தோனியின் வெற்றி சதவீதம் 60.24 சதவீதமாக இருக்கிறது.

இதில் அபுதாபியில் நேற்று நடந்த 13-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி பெற்ற வெற்றிதான் சிஎஸ்கே அணியின், தோனி தலைமையில் பெற்ற 100-வது வெற்றியாகும்.

படம் உதவி சிஎஸ்கே ட்விட்டர்

ஐபிஎல் தொடரில் இதுநாள்வரை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து, 100 வெற்றிகளை எந்த கேப்டனும் பெற்றதில்லை. ஆனால், தோனி சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருநது 100 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை 11 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட லீக் சுற்றோடு வெளியேறியது இல்லை. 3 முறை சாம்பியன் பட்டம், 5 முறை 2-வது இடம், 2 முறை ப்ளேஆப்சுற்று என தோனி தலைமையில் சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.

சூதாட்ட சர்ச்சையில் சிஎஸ்கே அணிக்கு இரு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட நிலையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் தோனி கேப்டனாக இருந்தார். அதில் பெற்ற வெற்றிகளையம் சேர்த்தால் தோனி இதுவரை 104 வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே, புனேசூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு சேர்த்து 174 போட்டிகளில் தோனி கேப்டன்ஷிப் செய்துள்ளார், அதில் 104 வெற்றிகளும், 69 தோல்விகளும் அடைந்துள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்கு மட்டும் 100 வெற்றிகளை தோனி பெற்றுக்கொடுத்துள்ளார். தோனியின் கேப்டன்ஷிப் வெற்றியின் சதவீதம் 60.24 சதவீதமாக இருக்கிறது.

படம் உதவி சிஎஸ்கே ட்விட்டர்

உண்மையில், மும்பை அணிக்கு எதிராக நேற்று கிடைத்த வெற்றி சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், கடந்த 2018-ம் ஆண்டு கடைசி லீக் போட்டியிலிருந்து, கடந்த ஆண்டு ஐபிஎல் லீக்கின் 4 போட்டிகள் என தொடர்ந்து 5 போட்டிகளிலும் மும்பை அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருந்தது.

சிஎஸ்கே அணி பேட்டிங், பந்துவீச்சு, தோனி ஆகிய 3 காரணங்களால் வலிமையானது என்று கூறப்பட்டாலும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டும் தோற்றுவிடுகிறது என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி சதவீதத்தை 60 சதவீதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், மும்பை அணிக்கு எதிராக 40 சதவீதத்துக்கும் கீழாகவே சிஎஸ்கே வைத்திருந்தது.

இவை அனைத்தும் சிஎஸ்கே அணிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அதாவது 436 நாட்களாக எந்தவிதமான சர்வதேச போட்டியிலும் விளையாடாமல், பயிற்சியில் ஈடுபடாமல் தோனி இருந்தார். ஓர் ஆண்டுக்குப்பின் நேற்று முதல் முறையாக சர்வதேச வீரர்களுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி களமிறங்கினார்.

தோனி எவ்வாறு கீப்பிங் செய்வார், எவ்வாறு பேட் செய்யப் போகிறார், கேப்டன்ஷிப் எவ்வாறு இருக்கும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் கரோனா சூழல், ரசிகர்கள் இல்லாத காலியான இருக்கை, உற்சாகப்படுத்த யாருமில்லை என்ற வித்தியாசமான சூழலையும் எதிர்கொண்டு அனைத்துக்கும் தனது வெற்றியின் மூலம் தோனி பதில் அளித்துள்ளார்.

தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த வெற்றி, சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்லாமல், தோனிக்கும் தார்மீக ரீதியாகவே பெரும் ஊக்கத்தையும், பலத்தையும் தரும். அடுத்தடுத்தப் போட்டிகளில் சிஎஸ்கே அணியும், தோனியும் வீர நடைபோட ஏணியாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய வெற்றி மூலம் ஹாட்ரிக் வெற்றியை சிஎஸ்கே பதிவு செய்தது.

436 நாட்களாக ஒருவீரர் பயிற்சியில் ஈடுபடாமல், சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து போர்க்களமாக இருக்கும் போட்டிக் களத்துக்கு நேரடியாக வருவது என்பது எந்த வீரராலும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், இது தன்னால்மட்டும்தான் சாத்தியம் என்று தோனி நிரூபித்துவிட்டார்.

436 நாட்களுக்குப்பின் தல தோனியை மஞ்சள்நிற ஆடையில் பார்க்கவும், அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் பார்க்க ரசிகர்கள் இரவுவரை காத்திருந்தார்கள். ஆனால், கடைசிவரை தோனியின் பேட்டில் பந்து படவில்லை.

அதனால்என்ன…. தல தோனியை களத்தில் பார்த்ததே சந்தோஷம்தான்…..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்