நாளை ஐபிஎல் திருவிழா தொடக்கம்: தோனி படைக்கு ஹாட்ரிக் வெற்றியா, அல்லது 6-வது தொடர் தோல்வியா? நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே

By க.போத்திராஜ்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 13-வது ஐபிஎல்டி20 திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் உள்ள ஷேக் ஜயித் அரங்கில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் 4 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்துக் களம் காண்கிறது 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால், ஐபிஎல் டி20 தொடர் நடத்த வழி பிறந்தது. இனிமேல், 53 நாட்கள் இடைவிடாத கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறது.

ஐபிஎல் திருவிழாவுக்காக 8 அணிகளும் கடந்த மாதம் 20-ம் தேதி முதலே ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களுக்கு வந்துவிட்டன. கடும் மருத்துவ முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் இருந்து, அதன்பின் பயிற்சியில் ஈடுபட்டு வீரர்கள் தயாராகியுள்ளனர்.

16 மாதங்களுக்கு முன்...

கடந்த 16 மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இதே தோனி படையும், ரோஹித் படையும் மோதிக்கொண்டன. இப்போது மீண்டும் களம் காண்கின்றன.

தோனி தலைமையும், ரோஹித் சர்மா தலைமையும் எந்த அளவுக்கு களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்களோ அதேபோன்று, இரு அணிகளின் தீவிர ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இனிமேல் கிரிக்கெட் களமும், சமூக வலைதளமும் சூடுபறக்கப்போகிறது.

தொடர் தோல்வியில் சிஎஸ்கே

கடந்த முறை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய 4 போட்டிகளிலும் தோனி படை தோல்வி அடைந்திருந்தது.

ஐபிஎல் வரலாற்றின் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலும் இதே நிலைதான். இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 11 வெற்றிகளும், மும்பை இந்தியன்ஸ் அணி 17 வெற்றிகளும் பெற்றுள்ளன.

ஆதலால், வெற்றி, தோல்வி அடிப்படையில் பார்த்தாலும் சிஎஸ்கே அணியைவிட, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுடனும் வெற்றி சதவீதத்தை 50 சதவீதத்துக்கு மேல் வைத்துள்ளது சிஎஸ்கே அணி. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மட்டும் வெற்றி சதவீதம் சிஎஸ்கே அணிக்கு 40 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடிக்க முடியாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இதுவரை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோனி அணி 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. நாளை நடக்கும் போட்டியில் 6-வது தோல்வியா, தோல்விக்கு முற்றுப்புள்ளியா என்பது தெரியவரும்

ஹாட்ரிக் வெற்றி கிட்டுமா?

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், சூதாட்டச் சர்ச்சைக்குப் பின் ஐபிஎல் களம் கண்ட சிஎஸ்கே அணி, 2018, 2019-ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடியுள்ளது.

2018-ல் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்தது. 2019-ம் ஆண்டில் ஆர்சிபி அணியை வென்றது. ஆதலால், இந்த முறையும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோனி படை மோதுவதால், ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தடைகளைத் தகர்க்குமா சிஎஸ்கே?

சிஎஸ்கே அணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் வந்ததிலிருந்தே சோதனைக்கு மேல் சோதனை வந்தது. தனிப்பட்ட காரணங்களால் முக்கிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து விலகினார், அதைத் தொடர்ந்து அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்தார். இது தவிர 2 வீரர்கள் உள்பட 13 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

இதில் தீபக் சாஹர் உள்பட 12 சிஎஸ்கே ஊழியர்கள் உடல்நலம் தேறிவிட்டனர். ருதுராஜ் கெய்க்வாட் கரோனாவிலிருந்து குணமடைந்தாலும், சில பரிசோதனைகள் இருப்பதால், நாளை களமிறங்கமாட்டார் எனத் தெரிகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்ட விமர்சனம் “டாடிஸ் ஆர்மி”, பெரும்பாலான வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு முறையும் அனைத்து விமர்சனங்களையும் உடைத்தெறிந்து 2018-ல் சாம்பியனாகவும், கடந்த முறை ஒரு ரன்னில் சாம்பியன் பட்டத்தையும் பறிகொடுத்து ஜொலித்தது தோனி படை.

தோனி மீது எதிர்பார்ப்பு

ஆதலால், அனுபவம் மிகுந்த வீரர்களே சிஎஸ்கேவுக்குப் பலம், சொத்து. ஆதலால், இந்த முறையும் சிஎஸ்கே அணியை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

இதில் முக்கியமானது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த ஓராண்டாக சர்வதேசப் போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை, ஓய்வும் அறிவித்துவிட்டார். வலைப் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்ட தோனியின் ஆட்டம் களத்தில் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ரெய்னா வெற்றிடம்

அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். இருப்பினும், அதைச் சரிக்கட்டும் வகையில் பியூஷ் சாவ்லா, டூப்பிளஸ் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

நடுவரிசையில் ரெய்னாவின் இடத்தை ஐபிஎல் அனுபவம் மிகுந்த அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஷேன் வாட்ஸன் மற்றும் டூப்பிளசிஸ் தொடங்குவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணி வலிமையானது. ஹர்பஜன் இல்லாத குறையை புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட அனுபவம் மிகுந்த பியூஷ் சாவ்லா நிரப்பலாம். இது தவிர அனுபவம் மிகுந்த ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர், கரன் சர்மா, மிட்ஷெல் சான்ட்னர் இருப்பது பலமாகும்.

அபுதாபி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால், நாளை கூடுதலாக சுழற்பந்து வீச்சாளருக்கு தோனி வாய்ப்பளிப்பார் என்று நம்பலாம்.

வேகப்பந்துவீச்சில் ஆஸி. இடதுகை பந்துவீச்சாளர் ஹேசல்வுட், டெத்பவுலர் பிராவோ, நம்பிக்கை வீரர் தீபக் சாஹர், சர்துல் தாக்கூர் இருக்கின்றனர்.

மும்பை அணியின் ஒட்டுமொத்தத்தில் கடந்த தொடரில் களமிறங்கிய அதே சிஎஸ்கே அணி சில மாற்றங்களுடன் மட்டுமே களமிறங்கலாம்.

மிரட்டும் மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை நிச்சயம் சிஎஸ்கே அணிக்குப் பெரும் சவாலாக நாளை இருக்கும். குறிப்பாக பொலார்ட் சிஎஸ்கே அணிக்கு எதிராக 449 ரன்கள் குவித்து 173 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். நிச்சயம் நாளை பொலார்ட் பெரும் அச்சுறுத்தலாக சிஎஸ்கே அணிக்கு திகழ்வார்.

பேட்டிங்கில் அசுரத்தனம்

இது தவிர புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட அதிரடி வீரர் கிறிஸ் லின் வந்துள்ளது பேட்டிங்கிற்கு கூடுதல் வலிமை சேர்க்கும். ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், டி காக், இசான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா என பேட்டிங்கிற்கு பெரிய படையே காத்திருக்கிறது. மும்பை அணியின் ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நிச்சயம் சிஎஸ்கே அணி கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியது இருக்கும்.

மலிங்கா இல்லாத பலவீனம்

சுழற்பந்துவீச்சில் மும்பை அணியும் பலமாகவே இருக்கிறது. குர்னல் பாண்டியா, ராகுல் சாஹர் என இருவர் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் அனுபவ வீரர் மலிங்கா தொடரிலிருந்து விலகியிருப்பது மும்பை அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பின் பும்ரா, நாதன் கூல்டர் நீல், பட்டின்ஸன், ஹர்திக் பாண்டியா, டிரன்ட் போல்ட் என வலிமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

ஆதலால், சிஎஸ்கே அணிக்கு இந்த முறையும் கடும் போட்டியளிக்கும் அணியாகவே மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்குத் தொடர்ந்து 6-வது தோல்வியை மும்பை இந்தியன்ஸ் பரிசளிக்குமா அல்லது தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது நாளை களத்தில் தெரியும்.

இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் (உத்தேச அணி)

ரோஹித் சர்மா (கேப்டன்), டீகாக், சூர்ய குமார் யாதவ், இசான் கிஷன், கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, டிரன்ட் போல்ட், நாதன் கூல்டர் நீல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (உத்தேச அணி)

எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷேன் வாட்ஸன், டூப்பிளசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கரன், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், சர்துல் தாக்கூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்