13-வது ஐபிஎல் சீசன் தொடர் நெருங்கிவிட்டது. இன்னும் 2 நாட்களில் ஐபிஎல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள மைதானங்கள் பற்றியும், ஆடுகளங்கள் பற்றியும் நமக்கு நன்கு தெரிந்திருக்கும்.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக 13-வது ஐபிஎல் சீசன் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடக்க இருக்கிறது. அதிலும் ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே அனைத்து ஆட்டங்களும் நடக்கின்றன.
இந்த 3 நகரங்களில் உள்ள ஆடுகளங்கள் எப்படி, அதன் தன்மை என்ன, எந்த பந்துவீச்சுக்கு சாதகம் அல்லது பேட்ஸ்மேன்களுக்குச் சொர்க்கபுரியா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து பல்வேறு கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்தாய்வுகள் செய்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
» 63 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் சரிந்து ‘சோக்கர்ஸ்’ ஆன ஆஸ்திரேலியா: இங்கிலாந்தின் விடாமுயற்சி வெற்றி
» பார்த்தாலே பரவசம்: விராட் கோலி பேட்டிங் பற்றி ஆடம் ஸாம்ப்பா புகழாரம்
கிரிக்கெட்டில் ஓர் அணியின் வெற்றிக்குத் திறமையான பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஆடுகளங்களின் பங்களிப்பும் இருக்கின்றன. ஆடுகளத்தின் தன்மையை வைத்தே போட்டியின் போக்கையும் நாம் தீர்மானிக்க முடியும்.
உதாரணமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஓர் அணி வேகப் பந்துவீச்சாளர்களை அதிகமாகக் களமிறக்கி விளையாடினால், வெற்றி பெறுவது கடினம்.
அதேபோல முதலில் பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமான மைதானத்தில் ஓர் அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் செய்யாமல் சேஸிங் செய்தாலும் அது தவறான முடிவில் அமையும்.
சேஸிங்கிற்கு சாதகமான மைதானத்தில் என்ன செய்யவேண்டும், எந்தப் பந்துவீச்சை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு முடிவுகள் மைதானத்தின் போக்கை வைத்துதான் எடுக்கப்படுகின்றன.
இந்த முறை துபாயில் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயித் மைதானத்தில்தான் போட்டிகள் நடக்கின்றன. இந்த மைதானத்தைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 25 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து பார்க்க முடியும்.
கடந்த 11 ஆண்டுகளாக துபாய் மைதானத்தில் 62 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அபுதாபியில் உள்ள ஆடுகளத்தைப் போல் அல்லாமல் இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும், பேட்ஸ்மேனுக்கும் நன்கு ஒத்துழைக்கும்.
முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 200 ரன்கள் வரை சேர்க்க முடியும். இந்த முறை ஐபிஎல் தொடரில் 24 போட்டிகள் துபாய் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. இதில் 4 போட்டிகள் பிற்பகலில் தொடங்குகின்றன.
மொத்தம் நடந்துள்ள 62 டி20 போட்டிகளில் 34 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 26 போட்டிகளில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 150 முதல் 155 ரன்களுக்குக் குறைவில்லாமல் எடுக்க முடியும். 2-வது பேட்டிங் செய்யும் அணி 120 முதல் 130 ரன்களைத் தாண்டுவது கடினமாகும்.
இங்கு அதிகபட்சமாக அடிக்கப்பட்ட டி20 ஸ்கோர் 211 ரன்களாகும். 2013 டிசம்பர் 13-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்த ஸ்கோரை அடித்தது. மிகக்குறைவான ஸ்கோர் 71 ரன்களாகும். கென்யா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இந்த ஸ்கோர் அடிக்கப்பட்டது.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக சேஸிங் செய்யப்பட்ட ஸ்கோர் என்பது 183 ரன்களாகும் குறைந்தபட்சமாக 134 ரன்கள் சேர்க்கப்பட்டு அதற்கு எதிரணி சுருட்டப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள ஒளிவிளக்குகள் "ரிங் ஆஃப் ஃபயர்" எனும் வடிவத்தில் மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும். எந்த மின்விளக்கு கோபுரமும் இருக்காது. இதனால் வீரர்கள் விளையாடும்போது, தங்களின் நிழல் தரையில் விழாதவாறு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி, ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம்
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் கடந்த 2004-ம் ஆண்டு கட்டப்பட்டது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் 2 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இந்த முறை ரசிகர்களுக்கு வாய்ப்பு இருக்காது.
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் வரும் சனிக்கிழமை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த மைதானத்தில்தான் நடக்கிறது.
ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக முதல் ஆட்டத்தில் அதாவது போட்டி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொண்டு வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது. இந்த முறை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பது களத்தில்தான் தெரியும்.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 44 டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன. இந்த முறை ஐபிஎல் தொடரில் 20 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சம பங்கு ஒத்துழைக்கும். இந்த மைதானம் பெரும்பாலும் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்துள்ளது என்று கடந்த கால புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானம் ஏற்றதாகும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 225 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 87 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 166 ரன்களாகும். 129 ரன்கள் சேர்க்கப்பட்டு அதற்குள் எதிரணி சுருட்டப்பட்டுள்ளதுதான் குறைந்தபட்சத்தில் வெற்றி பெற்ற ஸ்கோராகும்.
இந்த மைதானத்தில் இதுவரை 44 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 25 போட்டிகள் 2-வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் பழமையான மைதானமாகும். கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 16 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானத்தில் அதிகமாக ஒருநாள் போட்டிகள்தான் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை 13 டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடத்தப்பட்டுள்ளன. இந்த முறை இங்கு 13 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 22-ம் தேதி சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டம் இங்குதான் நடக்கிறது.
இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 215 ரன்களாகும். குறைந்தபட்சம் 90 ரன்களாகும். இங்கு ஓர் அணி அதிகபட்சமாக 140 ரன்களைச் சேஸிங் செய்துள்ளது. ஓர் அணி குறைந்தபட்சமாக 154 ரன்கள் சேர்த்து எதிரிணியை வீழ்த்தியுள்ளது.
இந்த மைதானத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் தாங்கள் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கண்டன.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளால் ஒரு போட்டியில்கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்கு சராசரியாக 150 முதல் 160 ரன்கள் வரை ஓர் அணியால் சேர்க்க முடியும். பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதுதான் சிறந்தது. ஏனென்றால், இங்கு நடந்த 14 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 4 ஆட்டங்களில் மட்டுமே சேஸிங் செய்த அணி வென்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago
விளையாட்டு
6 days ago