இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முடிகிறது: உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம்

By பிடிஐ

ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் இன்றுடன் முடிகிறது.

இதன்பின் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வமாகவும், விருப்பமாகவும் இருப்பதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்க கூறி டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, இந்த 3 வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ ஒழுங்கு முறைக்குழு உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி விடுவித்தது. தன்னுடைய கருத்தையும், விசாரணையை அறிக்கையையும் கேட்காமல், பிசிசிஐ தடை விதித்துவிட்டது என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டினார்.

இந்தத் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் ஒருநீதிபதி அமர்வு, ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் அமர்வில் பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் பின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம். ஜோஸப் அமர்வு, "ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி பிசிசிஐ அமைப்புக்கு உத்தரவிட்டனர்.

3 மாத காலத்துக்குள் ஸ்ரீ சாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்யவும், தண்டனையை குறைக்குமாறு முறையிட ஸ்ரீசாந்துக்கு உரிமை இருக்கிறது எனவும் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, பிசிசிஐ விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின் ஸ்ரீசாந்த்துக்கு 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டார். ஏற்கெனவே ஸ்ரீசாந்துக்கு 6 ஆண்டுகள் தடை முடிந்த நிலையில் ஓர் ஆண்டு மட்டும் நிலுவையில் இருந்தது. அந்தத் தடையும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தடை முடிவதற்கு இரு நாட்களுக்கு முன் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ என் மீதான எந்த குற்றச்சாட்டும் இல்லை. இனிமேல் நான் அன்புடன் நேசிக்கும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம்.

பயிற்சிக்குப்பின் நான் வீசும் ஒவ்வொரு பந்திலும் எனது சிறப்பான பங்களிப்பை அளிப்பேன். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை கொடுத்தால், எந்த அணிக்கும் என்னால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் தொடங்க வேண்டிய உள்நாட்டு கிரிக்ெகட் போட்டி சீசன் இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. ஒருவேளை ஸ்ரீசாந்துக்கு வாய்ப்புக் கிடைத்தால் கேரள அணியின் சார்பில் அவர் பங்கேற்று விளையாடக் கூடும்.

இதுவரை ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 10 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

களத்தில் மிகவும் ஆர்ப்பரிப்பரிப்பாகச் செயல்படக்கூடிய ஸ்ரீசாந்த், விக்கெட் எடுத்துவிட்டால் உற்சாக்ததில் துள்ளிக்குதிப்பார். ஆனால், ஸ்பாட் பிக்ஸிங் புகாருக்கு பின் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போனது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்