118, 84, 23.. மூன்று வீரர்கள் தவிர இங்கி. சொதப்பல்; மார்ஷ், மேக்ஸ்வெல் அதிரடி; ஸாம்ப்பா, ஹேசில்வுட் அபாரம்: உலக சாம்பியனுக்கு பாடம் புகட்டிய ஆஸ்திரேலியா 

By இரா.முத்துக்குமார்

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு பாடம் புகட்டியது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

இதன் மூலம் உலகக்கோப்பை சூப்பர் லீகில் ஆஸ்திரேலியாவுக்கு 10 புள்ளிகள் இங்கிலாந்து 0.

இத்தனை மாதங்கள் கிரிக்கெட் பக்கம் தலைவைத்துப் படுக்காவிட்டாலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பீல்டிங் என்பது ரத்தத்தில் ஊறியது என்பதற்கு உதாரணமாக இந்தப் போட்டி அமைந்தது.

மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் சதக்கூட்டணி அமைக்க ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது, இதில் மிட்செல் ஸ்டார்க் கடைசி பந்தில் மிட் விக்கெட் மீது கிறிஸ் வோக்ஸை அடித்த சிக்ஸ், இந்த வெற்றியின் பங்களிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் பிரமாதமாக ஆடி 118 ரன்களையும் ஜானி பேர்ஸ்டோ அதிரடி முறையில் எடுத்த 84 ரன்களையும் தவிர மற்றவர்கள் ஸாம்ப்பா மற்றும் ஹேசில்வுட்டிடம் மடிய இங்கிலாந்து 50 ஒவர்களில் 275/9 என்று தோல்வி தழுவியது.

ஹேசில்வுட் மிகப்பிரமாதமான தொடக்க ஓவர்களை வீசி ஜேசன் ராய், ஜோ ரூட்டை வீழ்த்தினார், பிறகு மொயின் அலி விக்கெட்டைக் கைப்பற்றி 10 ஓவர் 3 மெய்டன் 26 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்தை ரன் ரீதியாகவும் விக்கெட் ரீதியாகவும் முடக்கிப் போட்டது. இதோடு மட்டுமல்லாமல் ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்த லாங் ஆனில் ஹேசில்வுட் பிடித்த கேட்சின் தரமும் கடைசி பந்தில் சாம் பில்லிங்ஸுக்கு டேவிட் வார்னர் லாங் ஆனில் ஓடி வந்து பிடித்த கேட்சும், கடைசி பந்து வரை பீல்டிங்கில் எந்த சமரசமும் கிடையாது என்ற ஆஸ்திரேலிய தரத்தை எடுத்துக் காட்டியது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இல்லை, தலையில் அடிபட்டு கன்கஷன் எச்சரிக்கைக்காக ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆர்ச்சர், மார்க் உட் அபாரம், ஸ்டாய்னிஸ் மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் அதிரடி:

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பிஞ்ச் அருமையான கவர் ட்ரைவ் மூலம் தொடங்கினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வார்னரை பவுல்டு செய்தார், அந்த பந்து விளையாட முடியாத ஒரு பந்து என்ன ஆச்சு என்பது வார்னருக்கு புரிய சற்று நேரம் அகியிருக்கும் 144 கிமீ வேகத்தில் ஒரு லேட் ஸ்விங் பந்து, இன்னமும் கூட வார்னருக்கு என்ன ஆனது எப்படி உள்ளே புகுந்தது என்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை. திகைப்பூட்டும் ஒரு பந்தில் 6 ரன்களில் வார்னர் பவுல்டு ஆனார்.

ஸ்டாய்னிஸ் இறங்கி ஒரு குறு அதிரடி இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய போது 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த ஏரோன் பிஞ்ச், மார்க் உட் பந்தை ட்ரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் 46/2.

ஸ்டாய்னிஸ் மிகப்பிரமாதமாக ஆடினார், மார்க் உட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார், முன்னதாக ஆர்ச்சரை முன்னால் வந்து ஒரு கவர் ட்ரைவ் 3 ரன்கள், பிறகு வோக்ஸ் கொஞ்சம் ஓவர் பிட்ச் செய்ய பிளிக் மூலம் லெக் திசையில் 4 ரன்கள். பிறகு வோக்ஸ் ஓவரில் கொஞ்சம் ஷார்ட் பிட்ச் பந்தை பின்னல் சென்று கவரில் ஒரு பஞ்ச் பவுண்டரி அவர் ஒரு சிறந்த பேக்ஃபுட் வீரர் என்பதைக் காட்டியது.

மார்க் உட் ஓவரில் மீண்டும் ஒரு ஆஃப் திசை பேக் ஃபுட் பஞ்ச், ஒரு எட்ஜ் பவுண்டரி, பிறகு ஒரு அபாரமான ஹூக் ஷாட் பவுண்டரி, மொயின் அலியை கவருக்கு மேல் ஒரு பவுண்டரி என்று 34 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் சற்றும் அடித்த சுவடு தெரியாமல் 43 ரன்கள் வந்து விட்டார். ஆனால் மார்க் உட் ஒரு வேகமான அவுட்ஸ்விங்கரை வீச எட்ஜ் ஆக, ஸ்டாய்னிஸ் கொடுத்த கேட்சை பட்லர் வலது புறம் டைவ் அடித்துப் பிடிக்க சிறு -அதிரடி முடிவுக்கு வந்தது. 82/3.

லபுஷேன் 29 பந்துகளில் 21 ரன்களுக்கு தனது ‘கிளாஸை’ காட்டினார், ஆனால் ரஷீத் கூக்ளியில் அவரை எல்.பி. செய்து வீட்டுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா 103/4. ஆனால் அதிரடி வீரர் அலெக்ஸ் கேரியையும் ஆதில் ரஷீத் வீழ்த்த ஆஸ்திரேலியா 123/5 என்று சரிந்தது, இந்த இடத்திலிருந்து இங்கிலாந்து கோட்டை விட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஏதோ அவசர வேலை இருக்கிறது நாலு சாத்து சாத்திவிட்டு போய் விட வேண்டியது தான் என்பது போல் மேக்ஸ்வெல் இறங்கியது முதல் தன் வாணவேடிக்கைகளைக் காட்டத் தொடங்கினார். ஆனால் மேக்ஸ்வெலுக்கு அதிர்ஷ்டம் இருந்தது, ஏனெனில் முதல் பவுண்டரியே ஓவர் த்ரோவில் 5 ரன்களாக அவருக்குக் கிடைத்தது. 10 ரன்களில் ஆதில் ரஷீத் பந்தை தூக்கி மிட் விக்கெட் மேல் அடிக்க பவுண்டரியில் டாம் பேண்ட்டன் கேட்சை பவுண்டரிக்கு மேல் தட்டி விட முதல் சிக்ஸ் ஆனது. ரிவர்ஸ் ஸ்வீப், மொயின் அலி ஓவரில் சிக்சர், ரஷீத் பந்தில் மிட் விக்கெட் மீது ஒரு பெரிய சிக்ஸ் அடித்து 49 ரன்களுக்கு வந்த மேக்ஸ்வெல் 43 பந்துகளில் அரைசதம் கண்டார். 111 போட்டிகளில் 20வது அரைசதமாகும் இது மேக்ஸ்வெலுக்கு. மிட்செல் மார்ஷ் 58வது போட்டியில் தனது 12வது ஒருநாள் அரைசதத்தை 75 பந்துகளில் எடுத்தார்.

அரைசதம் எடுத்தும் மேக்ஸ்வெல் ஆட்டம் நிற்கவில்லை, ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங்குக்கு வர ஸ்டாண்ட் அண்ட் டெலிவர் என்பார்களே அதே போல் நின்ற நிலையிலிருந்து ஒரே தூக்கு லாங் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே பந்து ஸ்டாண்டில் சிலபல வரிசைகள் த்ள்ளிப் போய் விழுந்தது. அடுத்த பந்து யார்க்கர் முயற்சி புல்டாஸ் ஆக இம்முறை ஸ்கொயர் லெக் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தார் மேக்ஸ்வெல். ஆனால் அடுத்த பந்து ஒன்றுமில்லாத, சாதுவான ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து இதனை லெக்திசையில் விளாச முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு மேக்ஸ்வெல் பவுல்டு ஆனார். 59 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். மார்ஷ் , மேக்ஸ்வெல் இடையே 20 ஓவர்களில் 126 ரன்கள் கூட்டணி.

மிட்செல் மார்ஷ் 100 பந்துகளி 73 ரன்களில் மார்க் உட்டிடம் வெளியேறினார், ஸ்டார்க் கடைசியில் வோக்ஸ் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியா 294/9 என்று முடிந்தது, ஸ்டார்க் 19 நாட் அவுட். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், மார்க் உட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற ரஷீத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜோஷ் ஹேசில்வுட், ஸாம்ப்பா அபாரம், சாம் பில்லிங்ஸ் சதம் வீண்:

இங்கிலாந்தின் அதிரடி வரிசைக்கு 295 ரன்கள் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஆஸ்திரேலியாவின் வலுவான பந்து வீச்சுடன் அவர்களின் அயராத பீல்டிங்கையும் எதிர்கொள்ள வேண்டும், இந்நிலையில்தான் ஜேசன் ராய் 3 ரன்களில் ஹேசில்வுட் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுக்க, ஜோ ரூட் (1) எட்ஜ் ஆகி வெளியேற ஹேசில்வுட் 2 ஒவர் 3 ரன்கல் 2 விக்கெட் என்ற நிலையில் இருந்தார்.

டைட்டானா பீல்டிங் பவுலிங்கில் இங்கிலாந்து திணற 10 ஓவர்களில் 22/2 என்று திண்டாடியது. ஆனால் மோர்கன் இதனை மாற்றி அமைக்க நினைத்தார். 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்டை லாங் ஆஃப் மீது ஒரு ஸ்டன்னிங் சிக்ஸ் மூலம் 23 ரன்கள் எடுத்து அச்சுறுத்தினார். ஆனால் அவரை ஸாம்ப்பா வெளியேற்றினார். ஃபார்மில் உள்ள ஜோஸ் பட்லர் 1 ரன்னில் ஸாம்பா பந்தை தூக்கி அடிக்க லாங் ஆஃபில் லபுஷேன் முன்னால் டைவ் அடித்து அபார கேட்ச் ஆக்கினார்.

பேர்ஸ்டோ முதலில் தடவல்தான். 71 பந்துகளில் 33 ரன்களைத்தான் எடுத்தார். பிறகு வெறி கொண்டு ஸாம்ப்பா ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார், 78 பந்துகளில் தனது மெதுவான 13வது அரைசதத்தை எடுத்தார். பில்லிங்ஸுடன் இணைந்து இங்கிலாந்து 35 ஓவர்களில் 169/4 என்ற நிலைக்கு வர பேர்ஸ்டோ உதவினார். 84 ரன்களில் அடிக்க வேண்டிய நேரத்தில் ஸாம்ப்பா பந்தை தூக்கி அடித்து ஹேசில்வுட்டின் அபார கேட்சுக்கு வெளியேறினார்.

சாம் பில்லிங்ஸ் தனது 4வது ஒருநாள் அரைசதத்தை ஸாம்ப்பா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மூலம் எடுத்தார். 66 பந்துகளில் இவர் அரைசதம் எடுத்தார், ஆனால் மொயின் அலி (6), கிறிஸ் வோக்ஸ் (10) ஆட்டமிழந்தனர். சாம் பில்லிங்ஸ் 110 பந்துகளில் 118 ரன்களை 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்து கடைசி பந்தில் மார்ஷிடம் வார்னரின் அபார கேட்சுக்கு ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 275 ரன்களில் முடிந்தது. ஆச்சரியம் என்னவெனில் பாட் கமின்ஸ் 10 ஓவர்களில் 74 ரன்களை விட்டுக் கொடுத்ததே. சாம்ப்பா 4 விக்கெட், ஹேசில்வுட் 3 விக்கெட். ஆட்ட நாயகன் ஹேசில்வுட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்