தொடர்ந்து 2-வது முறையாக ஐபிஎல் சாம்பியனாகுமா மும்பை இந்தியன்ஸ்? 2014-ம் ஆண்டு யுஏஇ ஐபில் தொடர் துர்க்கனவு திரும்புமா? ஓர் அலசல்

By க.போத்திராஜ்


வலுவான பேட்டிங் வரிசையை மட்டுமே நம்பி, 13-வது ஐபிஎல்டி20 கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியனாகும் ஆசையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஓட்டைகள் இல்லாத வலுவான கோட்டையாகத்தான் ரசிகர்களுக்குத் தெரியும்.

ஆனால், அசுரத்தனமான பேட்டிங் வரிசையைத் தவிர மற்ற துறைகளில் பலவீனமாகவே இருக்ிகறது. அனுபவமற்ற வேகப்பந்துவீச்சு, வலுவில்லாத சுழற்பந்துவீச்சை வைத்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க முடியுமா எனத் தெரியவில்லை.

யுஏஇ சென்டிமென்ட் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ராசியில்லாத நாடு. எனென்றால், கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் இங்கு நடத்தப்பட்டபோது, மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ‘சென்டிமென்ட்’ விஷயங்கள் எல்லாம் இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேலை செய்யாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும்பாலான வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டது. கிறிஸ் லின்(ரூ.2கோடி), நாதன் கூல்டர் நீல்(ரூ.8 கோடி), பிரின்ஸ் பல்வந்த்ராய்சிங், திக்விஜய் தேஷ்முக், மோசின்கான் ஆகியோரை தலா ரூ.20லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.

இதில் கிறிஸ் லின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர், நாதன் கூல்டர் நீல், மெக்லனகன் ஆகியோர் திறமையான வேகப்பந்துவீச்சாளர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றும் சரியாக விளையாடவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் புதுமுக வீரர்கள்.
இந்த முறை முக்கிய பந்துவீச்சாளர் லசித் மலிங்கா பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதால், அவருக்குப் பதிலாக பேட்டின்ஸன் களமிறங்குகிறார்.

எது பலம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே அதன் பேட்டிங் வரிசைதான். தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டீக், கிறிஸ் லின், இசான் கிஷன், என 3 வீரர்கள் இருக்கிறார்கள்.

இதில் சூர்யகுமார் யாதவ் 2-வது வீரராகவும், நடுவரிசையிலும் நன்று விளையாடக்கூடிய அனுபவமானவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட லின், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பலாம்.

அச்சுறுத்தும் தொடக்க வரிசை

தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், டீ காக் ஜோடியே எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும், அடுத்ததாக களமிறங்கும் ரோஹித் சர்மா ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை படைத்தவர். இவர்கள் 3 பேரும் 10 ஓவர்கள் வரை நின்றுவிட்டால் எதிரணி நிலைகுலைந்துவிடும், எளிதாக ஸ்கோரை உயர்த்திக் கொடுத்துவிடுவார்கள். ஆதலால், டாப் ஆர்டர் பேட்டிங் மும்பை இந்தியன்ஸ்க்கு அசுரபலமாகவே இருக்கிறது.

4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன் இருக்கிறார்கள். இருவருமே ஐபிஎல் தொடரில் அனுபவமம் பெற்று உள்ளனர். இதில் டீ காக் அணியில் இடம் பெற்றால் கிஷனுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது.

கடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இசான் கிஷன் 110 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் இந்த முறை தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஆல்ரவுண்டர்கள் அதி்கம்

அது தவிர கிரன் போலார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோர் இருப்பது பேட்டிங்கில் 7-வது இடம் வரை வலுவாக இருப்பதைத்தான் காட்டுகிறது.
கடைசி வரிசையில் களமிறங்கும் வீரர்களில் நாதன் கூல்டர் நீல், மெக்லினகன் போன்ற அணியில் இருந்தால் அவர்களும் கிடைக்கும் வாய்ப்பை வெளுத்து வாங்கும் திறமை கொண்டவர்கள். ஆதலால், பேட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாகவும், எதிரணிக்கு பெரும் மிரட்டல் விடுக்கும் வகையில் இருக்கிறது.

வலுவில்லாத வேகப்பந்துவீச்சு

ஆனால், வேகப்பந்துவீச்சை எடுத்துக்கொண்டால், கூல்டர் நீல், மெக்லினகன், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரி்த் பும்ரா, பேட்டின்ஸன் ஆகியோர் உள்ளனர். இதில் டி20 போட்டிகளில் பும்ரா, டிரன்ட் போல்ட் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் குறைந்த அளவு ரன்கள் கொடுத்து, நிலைத்தன்மையுடன் பந்துவீசக்கூடியவர்கள்.

மும்பை அணிக்கும் ஐபிஎல் தொடருக்கும் பேட்டின்ஸன் முதல்முறையாக வருவதால், அவரின் திறமையும், டி20 போட்டிகளுக்கு ஏற்றார்போல் எவ்வாறு பந்துவீசுவார் என்பதையும் கணிப்பதும் கடினம்.
கூல்டர் நீல், மெக்லினாகன் இருவரும் கடந்த இரு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பும்ரா மீது சுமைகள்

ஆதலால் அனைத்து சுமைகளும், பந்துவீச்சை வழிநடத்திச் செல்லும் பொறுப்பும் பும்ரா தலையில்தான் விழும். அடுத்துவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ரா இந்திய அணிக்கு அவசியம் தேவை என்பதால், அவருக்கு அதிகமான சுமை கொடுக்காமல் இருக்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு வீரர்கள் இருந்தாலும் கணிக்க முடியாத, நிலைத்தன்மையில்லாத பந்துவீச்சாளர்கள்தான் இருக்கின்றார்கள்.
யார் இருக்கா சுழற்பந்துவீச்சுக்கு

ஐக்கியஅரபு அமீரகம் ஆடுகளங்கள் மூன்றுமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆதலால், வேகப்பந்துவீச்சு அங்கு எவ்வாறு எடுபடும் என்பது தெரியவில்லை. அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு என்பதால், பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது கடைசிவரை சஸ்பென்ஸ்தான்.

கிறிஸ் லின், டீ காக், போலார்ட், மூவருமே அணிக்குள் தவிர்க்க முடியாதவர்கள். பந்துவீச்சில் போல்ட், பேட்டின்ஸன் என தேர்வு செய்வதில் சிக்கலான நிலையே நீடிக்கிறது.

உள்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் ஹர்திக் பாண்டியா, தவல் குல்கர்னி மட்டுமே நம்பகத்தன்மையான பந்துவீச்சை உடையவர்கள். மற்றவகையில் மோசின் கான், ஜெயந்த் யாதவ் முற்றிலும் அனுபவமற்றவர்கள்.

பேக்-அப் வீரர்கள் வலுவில்லை

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், முக்கியமான வீரர்கள் அனைவரும் களமிறங்கும்போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களுக்கு தகுதியான வீரர்கள் வெளியே இருப்பது அவசியம் . அந்த வகையில் வேகப்பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் அளவைவிட, உள்நாட்டு வீரர்கள் இல்லை.

பேட்டிங்கிலும், சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா ஆகியோரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்கள் இவர்களுக்கு ஈடாக யாரும் இல்லை. இது அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்.

எந்த அணைியைக் காட்டிலும், சமமான கலவையுள்ள, அதிகமான ஆல்ரவுண்டர்கள் உள்ள அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தாலும் மாற்றுவீரர்கள் விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிலை கவலைக்கிடம்தான்.

12 ஓவர்களை என்ன செய்வது

ஐக்கிய அரபு அமீரகம் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில், மும்பை அணியில் ராகுல்சாஹர், குருணால் பாண்டியாவைத் தவிர அனுபவமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை.

இவர்கள் இருவரையும் வைத்து 8 ஓவர்கள் வீசிவிட்டால், மீதமுள்ள வீரர்களால் ரன்களைக் கட்டுப்படுத்துவதும், விக்கெட் வீழத்துவதும் கடினம்தான். திறமையான, லெக்ஸ்பின், ஆஃஸ்பின், இடது, வலதுகை, ரிஸ்ட் ஸ்பின்னர்கள் போதுமான அளவு இல்லாதது பெரும் பின்னடைவுதான்.

மாற்றுவீரர்கள் தேவை

அணியில் அசைக்க முடியாத பலமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது ரோஹித் சர்மா, பாண்டியா சகோதரர்கள், பொலார்ட் ஆகியோர்தான். இவர்கள் களத்தில் நிலைத்துவிட்டால் வெற்றி உறுதிதான். ஆனால், இவர்களையும் அதிகமாக நம்பியிருக்காமல் மாற்று வீரர்களும் சூழலுக்கு தகுந்தார்போல் கொண்டுவர வேண்டும்.

இதில் ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக பொலார்ட் பந்துவீசுவதை நிறுத்திவிட்டார், பேட்டிங்கில் மட்டுேம தனி ஆளாக ஆவர்த்தனம் செய்யும் திறமை கொண்டவர். மற்றொரு மே.இ.தீவுகள் வீரரான ரூதர்போர்ட் இதுவரை ஐபிஎல் போட்டியில் அதிகமாக விளையாடியது இல்லை என்பதால் பேட்டிங் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கையில்லை. ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் மட்டுமே அசுரத்தனமான பலத்துடன் இருக்கிறது.

வேகப்பந்துவீச்சில் வீரர்கள் இருந்தாலும், நம்பகத்தன்மையும், நிலைத்தன்மையும் எதிரணிக்கு குடைச்சல் அளிக்கும் அளவுக்கு பும்ரா, போல்ட் தவிர வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை. சுழற்பந்துவீச்சிலும் இரு வீரர்களைத் தவிர அனுபவம் மிகுந்த வீரர்கள் இல்லாதது பெரும் பின்னடைவு.

புதுமுக வீரர்கள்

அனுபவம் இல்லாத, அனுபவம் குறைந்த வீரர்களாக மோசின்கான், பிரின்ஸ் பல்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக், அன்மோல் ப்ரீத் சிங், ஆதித்யா தாரே, சவுரவ் திவாரி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் விளையாடும் விதமும் தெரியாது. முக்கிய வீரர்கள் யாரேனும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களுக்கு இவர்கள் தகுதியானவர்ளாக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்களுடனும், சில புதிய வீரர்களுடனும் மும்பை அணி களம் காண்கிறது.

பேட்டிங்கை மட்டுமே அதிகமாக நம்பி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை தக்கவைக்க முயற்சிக்கிறது, பார்க்கலாம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்