பயிற்சி டி20: தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இலக்கை துரத்தி இந்தியா ஏ அதிரடி வெற்றி

By இரா.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்கா ஏ அணி நிர்ணயித்த மிகப்பெரிய 190 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக ஊதித் தள்ளியது இளம் இந்தியா ஏ அணி.

டெல்லியில் நடைபெற்ற பயிற்சி டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் 190 ரன்கள் வெற்றி இலக்கை இளம் இந்தியா ஏ அணி அபாரமாக விரட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

டெல்லி பாலம் மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க டி20 கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி டிவில்லியர்ஸ், டுமினி, டுபிளெஸ்ஸிஸ் ஆகியோரது அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களை விளாசியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 193/2 என்று அதிரடி வெற்றியை பெற்றுள்ளது.

சோபிக்காத இளம் இந்தியா ஏ அணியின் பந்து வீச்சு:

டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 2 ரன்களில் கேப்டன் மந்தீப் சிங்கின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால் இந்தியா ஏ-வின் இந்த தொடக்கத்தை டிவில்லியர்ஸ், டுபிளேஸ்ஸிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நாசம் செய்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து ஸ்கோரை 10 ஓவர்களில் 90 ரன்களாக உயர்த்தினர். முதலில் டு பிளெஸ்ஸிஸ் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். யஜுவேந்திர சாஹல் பந்தை மேலேறி வந்து டிவில்லியர்ஸ் மிட் ஆனில் விளாசினார். ரிஷி தவணின் பூப்பந்து வீச்சு டிவில்லியர்ஸை கிரீஸில் நிற்க அனுமதிக்கவில்லை மேலேறி வந்து கவர் மற்றும் எஸ்க்ட்ரா கவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார் அவர்.

பிறகு ஐபிஎல் கண்டுபிடிப்பான இடது கை குல்தீப் யாதவ்வை இன்சைடு அவுட் முறையில் எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியையும் பிறகு பவன் நெகியையும் இதே முறையில் ஒரு பவுண்டரியையும் அடித்து 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசி குல்தீப் யாதவ்வை மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க முயன்று தோல்வி அடைந்தார், அவர் அடித்த பந்து கொடியேற ஷார்ட் பைன்லெக்கில் பவன் நெகி கேட்சைப் பிடித்தார்.

டுபிளெஸ்ஸிஸ் தாறுமாறாக 7 பவுண்டரிகளை அடித்து 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அடுத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ரிட்டையர்டு அவுட் ஆனார்.

டுமினி களமிறங்கி 120 கிமீ வேகம் இல்லாத இந்திய ஏ அணியின் மிதவேகப்பந்து வீச்சையும் ஸ்பின்னர்களையும் அடித்து நொறுக்கினார், அவர் ஆடிய தாண்டவத்தில் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஒரு முறை ஹர்திக் பாண்டியாவை அவர் அடித்த சிக்சர் மைதானத்துக்கு வெளியே சாலையில் போய் விழுந்தது. அனுரீத் சிங்கை இரண்டு மிகப்பெரிய சிக்சர்களுடன் அவர் இன்னிங்ஸை முடித்து வைத்தார். பெஹார்டியன் 17 ரன்கள் நாட் அவுட். இருவரும் இணைந்து 46 பந்துகளில் 83 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக விளாசினர். மில்லர் 10 ரன்களில் பாண்டியாவின் பந்தில் பவுல்டு ஆகி சோபிக்காமல் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்கா 189 ரன்களை எடுத்தது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் மட்டுமே 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து பரிசு விக்கெட்டாக டிவில்லியர்ஸை வீழ்த்தினார். மற்ற அனைவரும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் சராசரியாக விட்டுக் கொடுத்தனர். அனுரீத் சிங் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மனன் வோரா, மயங்க் அகர்வால் அதிரடி சதக்கூட்டணி

190 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் ஐபிஎல் புகழ் தொடக்க வீரர்களான மனன் வோரா மற்றும் மயங்க் அகர்வால் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர்.

குறிப்பாக புதிய கண்டுபிடிப்பான வேகப்பந்து வீச்சாளர் ரபாதாவை 2 ஓவர்களில் 17 ரன்கள் விளாசினர். கைல் அபாட்டும் நன்றாக வாங்கினார். முதல் 5 ஓவர்களில் 45 ரன்கள் வர பவர் பிளே முடியும் போது இந்தியா ஏ அரைசதம் கண்டது.

இருவரும் இணைந்து 12.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 119 ரன்களைச் சேர்த்தனர். அதிரடி வீரர் மனன் வோரா 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிச்கருடன் 56 ரன்கள் எடுத்து முதலில் பெஹார்டியனிடம் கேட்ச் கொடுத்து டுமினி பந்தில் வீழ்ந்தார்.

மயங்க் அகர்வாலுடன், அடுத்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் இணைந்தார். மயங்க் அகர்வால் சடுதியில் அரைசதம் கண்டு பிறகு தொடர்ந்து சில அபாரமான ஷாட்களை ஆடிய மயங்க் அகர்வால் 2 மிகப்பெரிய சிக்சர்களையும் அடித்து 49 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசினார். சஞ்சுவும் இவரும் இணைந்து 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தனர். ஸ்கோர் 18-வது ஓவரில் 171 ரன்களை எட்டியது. அப்போது மயங்க் அகர்வால் மெர்சண்ட் டி லாங்கே பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ, கேப்டன் மந்தீப் சிங் 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 19.4 ஓவர்களில் இந்தியா ஏ 193/2 என்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு நிச்சயம் நிறைய உழைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கைல் அபாட் 43 ரன்களையும், ரபாதா 3 ஓவர்களில் 33 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர், தென் ஆப்பிரிக்காவின் துருப்புச் சீட்டு இம்ரான் தாஹீரும் 3 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எடுக்காமல் போனார். டி லாங்கே, லீயி, டுமினி அகியோரும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் மேல் விளாசல் வாங்கினர். ரபாதா, அபாட், கிறிஸ் மாரிஸ் ஆகியோர் சரியான அளவில் வீசவில்லை. இம்ரான் தாஹீர், லீயி ஆகிய லெக்ஸ்பின்னர்களை மயங்க் அகர்வால் அவ்வப்போது பவுண்டரிக்கு அடித்தார்.

முதலில் டி20 தொடர் நடைபெறும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய இளம் டி20 அணி சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்