“இந்த முறை பாருங்க…ஆர்சிபி அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லப்போகுது’’ - ஒவ்வொரு ஐபிஎல் தொடர் தொடங்கும்போதும் ரசிகர்களால் நம்பிக்கையுடன் உச்சரிக்கப்படும் வார்த்தை இதுதான்.
கடந்த 2011-ம் ஆண்டில் விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறுகிறது ஆர்சிபி அணி.
இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்த விராட் கோலியால், திறமையான சர்வதேச வீரர்களை அணியில் வைத்திருந்தும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய அணியை சாம்பியனாக்க முடியவில்லை.
விராட் கோலி தலைைமயில் இருமுறை 2011, 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை ஆர்சிபி அணி முன்னேறியது. ஆனால், கோப்பையைக் கோட்டைவிட்டது.
» ஐபிஎல் 2020 அட்டவணை வெளியானது: முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே மோதல்
அதுமட்டுமல்லாமல் 2017, 2019 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கடைசி இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும், 2014-ம் ஆண்டில் 7-வது இடத்தையும் பிடித்தது.
திறமையான வீரர்கள் அமைந்திருந்தபோதிலும் களத்தில் சரியான திட்டமிடல், வீரர்கள் தேர்வில் குளறுபடி, குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே அணி சார்ந்திருத்தல் போன்றவற்றால் ஆர்சிபி அணியால் கடந்த 12 தொடரில் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
அதிலும் விராட் கோலி தலைமையில் இதுவரை 9 தொடர்களில் விளையாடியபோதிலும் ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்க முடியாத கேப்டனாகவே கோலி பரிதாபத்துடன் பார்க்கப்படுகிறார்.
அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், கிறிஸ் மோரிஸ், கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்த காலத்திலும், இருக்கும் காலத்திலும் கூட கோப்பையை ஆர்சிபி அணி வெல்ல முடியாதது அதிர்ச்சிக்குரிய கேள்வியாகவே தொடர்கிறது. அதிலும் 2016-ம் ஆண்டு சீசனில் விராட் கோலி அசுரத்தனமான ஃபார்மில் இருந்தார்.
4 சதங்கள் அடித்து அணியை தனிநபராக இருந்து ஆர்சிபி அணியை இறுதிப்போட்டிக்கு கோலி கொண்டு சென்றார். ஆனால், ஃபைனலில் பதற்றப்பட்டு கோப்பையை ஆர்சிபி அணி கோட்டைவிட்டது.
ஆனால், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் 13 வீரர்களை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டு, 8 வீரர்களைப் புதிதாக ஏலத்தில் எடுத்துள்ளது. இளமையும், அனுபவ வீரர்கள் சேர்ந்த கலவை இந்த முறையாவாது ஆர்சிபி அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தருமா என எதிர்பார்க்கலாம்.
எது பலம்?
ஆர்சிபி அணியின் மிகப்பெரிய பலமே அதன் பேட்டிங் வரிசைதான். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள்,டி20 போட்டிகளில் தனி முத்திரை பதித்துள்ளார். கோலி ஃபார்ம் ஆகிவிட்டால் ஆர்சிபி அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். கடந்த 2016-ம் ஆண்டில் கோலி ஃபார்மில் இருந்ததைப் போன்று இந்தத் தொடரில் கோலி ஃபார்மாகிவிட்டால் ஆர்சிபி அணிக்கு ஏறுமுகம்தான்.
ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் ‘360 டிகிரி பேட்ஸ்மேன்’ ஏபி டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், பர்தீப் படேல், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இருப்பது மிகப்பெரிய பலம்.
இது தவிர தேவ்தத் படிகல், குர்கீரத் சிங் ஆகிய இரு இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள். இருவரும் தொடக்க வீரர்கள் என்பதால், பர்தீப் படேல், அல்லது ஆரோன்பிஞ்சுடன் ஆட்டத்தை இருவரில் ஒருவர் தொடர வாய்ப்புள்ளது.
அணியின் பேட்டிங் வரிசை குறிப்பாக டிவில்லியர்ஸ், கோலி, ஆரோன் பிஞ்ச் ஆகியோரை பெரும்பாலும் நம்பி இருக்கிறது. இவர்கள் மூவருக்கும் ஆட்டம் சூடுபிடித்துவிட்டால், ஆர்சிபி அணியின் வெற்றி உறுதி என்பதில் சந்தேகமில்லை.
இவர்கள் 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல வீரர்களைச் சரியாகத் தேர்வு செய்வதும், மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்வதும் அவசியமாகும்.
தொடக்க வீரர் குழப்பம்
ஆர்சிபி அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக யாரை இறக்குவது என்பது பலமுறை குழப்பத்தில் முடிந்துள்ளது. ஆனால், இந்த முறை நடுவரிசையிலும், தொடக்கத்திலும் அதிரடியாக அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஆரோன்பிஞ்ச் இருப்பது அந்த அணிக்குப் பெரும்பலம்.
ஏலத்தில் ரூ.4.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் எந்த நிலையிலும் அடித்து ஆடக்கூடியவர். கடந்த ஓராண்டாகவே நல்ல ஃபார்மில் பிஞ்ச் இருப்பதால், ஆர்சிபி அணிக்கு ஆரோன் பிஞ்ச் வருகை பெரும் பலமாக இருக்கும்.
19 வயதான தேவ்தத் படிக்கல் இந்த முறை ஏலத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடியாக பேட் செய்து அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார் என்பதால், ஆரோன் பிஞ்ச்சுக்கு தொடக்க வரிசையில் இறங்க வாய்ப்புள்ளவராகக் கருதப்படுகிறார்.
இதுதவிர விக்கெட் கீப்பருக்கு பர்தீப் படேல் இருந்தாலும், கூடுதலாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ்வா பிலிப் இந்த முறை ஏலத்தில் ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக்கில் சிறப்பான ஆடியவர் என்பதால், அவரை ஆர்சிபி அணி வாங்கியுள்ளது.
ஆதலால், அணியில் பர்தீவ் படேலுக்கு பதிலாக ஜோஷ்வா இடம்பெறுவாரா அல்லது அனுபவம் மிகுந்த பர்தீப் படேலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், பர்தீப் படேலைப் பொறுத்தவரை தொடக்க வீரராகவும் களமிறங்கும் திறமை படைத்தவர். நடுவரிசையிலும் ஆட்டத்தை ஃபினிஷ்செய்வதிலும் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவலையளிக்கும் நடுவரிசை
ஆர்சிபி அணியின் மிகப்பெரிய கவலையாக இருப்பது நடுவரிசைக்குச் சரியான வீரர்கள் இல்லாததுதான். விராட் கோலி, டிவில்லியர்ஸ், பிஞ்ச் ஆட்டமிழந்தபின் நடுவரிசையில் விக்கெட்டைத் தக்கவைத்து விளையாடி, கடைசி நேரத்தில் அடித்து ஆடக்கூடியவீரர்களைத் தேடினால் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரிஸ் இருக்கிறார் என்றாலும் அனைத்து நேரங்களிலும் இவரின் பேட்டிங் எடுபடுவதில்லை. அனுபவ வீரர் குர்கீரத் சிங், மொயின் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
ஒரேநேரத்தில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் விளையாட முடியும் என்பதால், டிவில்லியர்ஸ், ஆரோன்பிஞ்ச், மொயின் அலி, மோரிஸ் ஆகியோருக்கு வாய்ப்பளித்துவிட்டால் பந்துவீச்சில் பெரும் பள்ளம் ஏற்படும். எப்படிப் பார்த்தாலும் நடுவரிசைக்குச் சரியான வீரர்கள் அமையாதது அந்த அணிக்குச் சற்று பின்னடைவுதான்.
உள்நாட்டு வீர்கள் பவன் நெகி, ஷிவம் துபே போன்ற ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும், நிலைத்து ஆடுவதில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. பர்தீவ் படேல் நடுவரிசையில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்றாலும், நடுவரிசையைவிடத் தொடக்க வீரராக பவர்ப்ளேயில் ரன்களை விரைவாகச் சேர்த்துவிடுவார்.
ஆதலால், பர்தீவ் படேலை நடுவரிசையில் தேர்வு செய்வதைவிட தொடக்கவீரராக வருவதே சிறந்ததாக இருக்கும். ஆதலால், நடுவரிசையில் கவனம் செலுத்தி ஆர்சிபி அணி மாற்றிக்கொள்வது வெற்றியை எளிதாக்கும்.
வலுவில்லாத வேகப்பந்துவீச்சு
பந்துவீச்சில் முகமது சிராஜ், உமேஷ் யாதவ், டேல் ஸ்டெயின், மோரிஸ், ஷைனி, கேன் ரிச்சார்ட்ஸன் இருக்கிறார்கள். இதில் ரிச்சார்ட்ஸன் இந்தத் தொடரில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்ததால் அவருக்குப் பதிலாக ஆடம் ஸம்பா வந்துள்ளார். காயத்தால் அடிக்கடி அவதிப்படும் ஸ்டெயின் இந்தத் தொடரில் எத்தனை ஆட்டங்களுக்கு விளையாடுவார் எனச் சொல்லவது கடினம்.
உமேஷ் யாதவ், முகமது சிராஜ் போன்றவர்கள் ரன்களை வாரிக்கொடுப்பவர்கள், குறிப்பாக டெத் ஓவர்கள் வீசுவதில் தள்ளாடுவார்கள். வேகப்பந்துவீச்சில் ஸ்டெயின், மோரிஸ் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யவேண்டிய நிலையில் ஆர்சிபி அணி இருக்கிறது.
இதுதவிர அதிவேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அணியில் இருப்பது கூடுதல் பலம். மொத்தத்தில் வேகப்பந்துவீச்சில் ஆர்சிபி அணி எதிர்பார்த்த அளவுக்குப் பலமாக இருக்கிறது எனச் சொல்வது கடினம்தான்.
நம்பிக்கை சுழற்பந்துவீச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள். இங்கு பந்துகள் தாழ்வாக, மெதுவாக வரும் என்பதால், வேகப்பந்துவீச்சு வீரர்களுக்கு முக்கியத்துவத்தைக் குறைத்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
சுழற்பந்துவீச்சில் யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் இருவருமே சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள். ஆட்டத்தின் நடுப்பகுதியில் 10 ஓவர்களுக்கு மேல் வித்தியாசமான கோணத்தைப் பந்துவீச்சில் காட்டி ரன் வேகத்தை சுந்தரும், சாஹலும் கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.
குறிப்பாக விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர்கள். இவர்களோடு ஆடம் ஸம்பா, மொயின் அலி, பவன் நெகி ஆகியோர் பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருப்பதும் கூடுதல் பலமாகும். வேகப்பந்துவீச்சை நம்பி களமிறங்குவதைவிட சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கலாம்.
யார் அந்த 4 பேர்?
4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் வைக்கலாம் என்பதால், பேட்டிங்கில் டிவில்லியர்ஸ், பிஞ்ச் இருவரும் தவிர்க்க முடியாதவர்கள். பந்துவீச்சில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் மோரிஸ், டெத் ஓவரை வீச ஸ்டெயினுக்கு வாய்ப்பளிக்கலாம். இல்லாவிட்டால் மொயின் அலிக்கு வாய்ப்பளிக்கலாம்.
வேகப்பந்துவீச்சில் இந்திய வீரர்களான நவ்தீப் ஷைனி, உமேஷ், துபே ஆகியோருக்கு வாய்ப்பளிப்பது சரியாக இருக்கும். இதில் பந்துவீச்சாளர்களைச் சரியாகத் தேர்வு செய்து விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கிவிட்டால், ஆர்சிபி அணி வெற்றிபெறுவதும், கோப்பை வெல்வதும் சாத்தியமாகும்.
விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரையும் அதிகம் பேட்டிங்கில் அணி சார்ந்திருக்காமல் அனைவரின் பங்களிப்பும் இருப்பதும் அணியை வெற்றியை நோக்கித் தள்ளும்.
கோலியின் கேப்டன்ஷிப் தோல்விக்குக் காரணமென்ன?
இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு வெற்றி கேப்டனாக மாற முடியவில்லை என்பது நிதர்சனம். கோலி தலைமையில் ஆர்சிபி அணி சிறப்பாகவும் செயல்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக, சரியான வீரர்களை அணியில் தேர்வு செய்யாததுதான் தோல்விக்கு மிகப்பெரிய பிரதான காரணமாகும். கடந்த தொடர்களில் அணித் தேர்வை ஆய்வு செய்தால், வலிமையற்றதாகவும், குளறுபடிகள் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். அணித் தேர்விலும் ஏராளமான ஓட்டைகள் இருந்திருக்கும்.
சொல்லிக்கொள்ளும் வகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை, டெத்ஓவர்களை வீசுவதற்கான தனிப் பந்துவீச்சாளர்கள் இல்லை. நடுவரிசையில் குறிப்பாக 5 மற்றும் 6-ம் இடத்தில் விளையாட சரியான பேட்ஸ்மேன்கள் இருந்ததில்லை. இதுபோன்ற குறைபாடுகளைக் கோலி ஒருபோதும் கலைந்ததும் இல்லை.
அசுரத்தனமான பேட்டிங் வரிசை, பலமிழந்த பந்துவீச்சு வரிசை ஆகியவைதான் ஆர்சிபி அணியின் அடையாளம். வழக்கம்போல் யஜுவேந்திர சாஹல், வழக்கமான வேகப்பந்துவீச்சுதான் இருந்தது. சரியான வீரர்களைத் தேர்வு செய்யாவிட்டால், கேப்டனிடமிருந்து எந்தவிதமான மாயாஜாலத்தையும் எதிர்பார்க்க முடியாது.
தோனியைப் போன்று கோலி ஆகிவிடமுடியாது. அணியில் தேர்வு செய்யும் அனைத்து வீர்களின் திறமையை உணர்ந்து, அவர்களிடமிருந்து 100 சதவீத உழைப்பைப் பெறக்கூடிய புத்திசாலியான, திறமைமிகுந்த கேப்டன் தோனி என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமல்லாமல் அணித் தேர்வு சரியாக அமையாததற்கு கோலிக்கும், அணி நிர்வாகத்துக்கும் இடையே முறையான தகவல் தொடர்பு இல்லாமையும், பெரிய இடைவெளி இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் கோலி, ஆர்சிபிக்கு கேப்டனாக வந்துவிட்டால், அவரிடம் இருந்தும் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எந்தவிதமான திறமையயும் எதிர்பார்க்க முடியாது.
அணித்தேர்வில் குறிப்பிட்ட அளவுதான் கோலி ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.
சரியான கலவையில் வீரர்களைக் கோலி தேர்வு செய்வதும், அந்த வீரர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து களத்தில் செயல்படுவதும் அவசியம். ஆனால், வீரர்கள் தேர்வும், அவர்கள் களத்தில் சிறப்பாகச் செயல்படுவதும் பல நேரங்களில் காணப்படவில்லை. விராட் கோலி சிறப்பாக விளையாடியபோதிலும், அவரால் வெற்றிகரமான கேப்டனாக வரமுடியாததற்கு இதுதான் முக்கியக் காரணம்.
இந்த முறையாவது ஆர்சிபி சாம்பியனாகுமா? பார்க்கலாம்….
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்) டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், மொயின் அலி, முகமது சிராஜ், நவ்தீப் ஷைனி, பர்தீப் படேல், பவன் நெகி, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல், ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஜோஸ் பிலிப், தேவன் தேஷ்பாண்டே, டேல் ஸ்டெயின், ஷான்பாஸ் அகமது, இசுரு உதானா, ஆடம் ஸம்பா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago