மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்களில் வெற்றி பெற்று, இங்கிலாந்து தொடரின் முதல் வெற்றியை ஈட்டியதோடு டி20 தொடரை இழக்காமல் 1-1 என்று சமன் செய்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார், பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி (54), மொகமது ஹபீஸ் (86) இணைந்து வெளுத்து வாங்கியதில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 190/4 என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் டாம் பேண்ட்டன் (46), மொயின் அலி (61), சாம் பில்லிங்ஸ் (26) ஆடியும் வெற்றி பெற முடியாமல் 185/8 என்று தோல்வி அடைந்தது. அப்ரீடி, வஹாப் ரியாஸ் சிக்கனமாக வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
கடைசி பந்து வரை த்ரில்லாக அமைந்த போட்டியில் கடைசி பந்துக்கு முதல் பந்தில் டாம் கரண் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃபை எக்ஸ்ட்ரா கவர் மீது அபாரமான ஒரு சிக்சரை அடிக்க, மீதமிருக்கும் ஒரு பந்தில் இன்னொரு ஷாட் போதும் பாகிஸ்தானின் தலைவிதியை முடிக்க.
கேப்டன் பாபர் ஆஸம் பதற்றமடைந்தார், பவுலர் ஹாரிஸ் ராஃபிற்கு அனைவரும் அட்வைஸ் செய்யக் குழுமினர். இதற்கு முதல் பந்தில்தான் மிகப்பெரிய சிக்சரை அடித்திருந்தார் டாம் கரன், இன்னொரு ஷாட் போதும்.. இந்நிலையில் ராஃப் ஓடி வந்து 90 மைல்கள் வேகத்தில் வைடு யார்க்கர் ஒன்றை வீசினார் டாம் கரனால் மட்டையால் தொட முடியவில்லை. 5 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
முதலில் பாகிஸ்தான் பேட் செய்த போது ஃபகார் ஜமானை தொடக்கத்திலேயே மொயின் அலி வீழ்த்தினார், பாபர் ஆஸம் (21), கரன் பந்தில் பவுல்டு ஆனார். 4.2 ஓவர்களில் 32/2 என்று இருந்தது.
அப்போது இளம் வீரர் ஹைதரும், மூத்த வீரர் ஹபீசும் இணைந்து டி20 கிரிக்கெட் வயது பற்றியதல்ல என்று கூறுமாறு ஆடினர். ஹைதர் அலி 19 வயது அறிமுக வீரர், ஹபீஸ் ஓய்வுபெறும் 39 வயதில் உள்ளவர். இருவரும் சேர்ந்து ஆடுவது டி20 கிரிக்கெட் வயது பற்றியதல்ல என்பதற்கான உருவகமாக அமைந்தது. இருவரும் அவ்வப்போது எளிதாக பவுண்டரிகளை அடித்தனர்.
முதல் 2 போட்டிகளில் தன்னை எடுக்காததை கேலி செய்யும் விதமாக ஹைதர் அலி 28 பந்துகளில் அரைசதம் கண்டார், இவரிடம் பவரும் உள்ளது நல்ல டைமிங்கும் உள்ளது. இதில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார்.
முகமது ஹபீஸ், இங்கிலாந்தின் ஸ்ட்ரைக் பவுலர் ஆதில் ரஷீத்தை அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து பாகிஸ்தானின் 100 ரன்களைக் கொண்டு வந்தார். ஆதில் ரஷீத் 3 ஓவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டார். 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த ஹைதர் அலி அபார இன்னிங்சுக்குப் பிறகு அபாரமான யார்க்கரை ஜோர்டான் வீச பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் ஹைதரும் ஹபீசும் சேர்ந்து 61 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்து நிமிர்த்தி விட்டனர்.
இளம் கூட்டாளி யார்க்கரில் காலியானாலும் தளராத ஹபீஸ் மேலும் 2 சிக்சர்களை அடித்து தன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 79 ரன்களில் ஹபீஸ் ஒரு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் கடினமான வாய்ப்பு, அது பவுண்டரி பந்து அதை மோர்கன் கேட்ச் முயற்சியில் தடுத்தார். ஷதாப் கான், ஜோர்டான் பந்தில் வெளியேறினார். ஹபீஸ் 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 அபாரமான சிக்சர்களுடன் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோர்டானும், மஹ்மூதும் கடைசி 2 ஓவர்களில் கட்டுப்படுத்தி பாகிஸ்தான் 200 ரன்கள் மைல்கல்லை எட்டாமல் பார்த்துக் கொண்டனர்.
ஷாஹின் அஃப்ரீடியின் அபார யார்க்கர்:
இங்கிலாந்து விரட்டலை தொடங்கும் போது ஜானி பேர்ஸ்டோ 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஷாஹின் ஷா அஃப்ரீடியின் சூப்பர்ப் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார். இமாத் வாசிம் பந்தில் கடந்த போட்டியின் அரைசத நாயகன் மலான் ஆட்டமிழக்க இங்கிலாந்து 26/2 என்று இருந்தது. மோர்கன் இறங்கி ஒரு சிக்ஸ் அடிக்க, டாம் பேண்ட்டன் ஒரு முனையில் நன்றாக ஆட அடுத்த 3 ஒவர்களில் 39 ரன்கள் சேர்க்கப்பட்டது, அப்போதுதான் அபாய வீரர் மோர்கன் 10 ரன்களில் ரன் அவுட் ஆனார். 7 ஓவர்களில் 65/3.
டாம் பேண்ட்டனும் ராஃப் வீசிய ஃபுல்லெந்த் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், அவர் 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 69/4 என்று திணறிய நிலையில் மொயின் அலி, சாம் பில்லிங்ஸ் சேர்ந்தனர். 57 அதிரடி ரன்களை இருவரும் சேர்த்தனர். 26 ரன்களில் அப்போது பில்லிங்ஸ் வெளியேறினார்.
ஆனால் மொயின் அலி 4 சிக்சர்களை விளாசினார். ஷதாப் கானை ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். லூயிஸ் கிரிகரி 17வது ஓவரில் ராஃபை 2 பவுண்டரிகள் விளாச இங்கிலாந்துக்கு ஒரு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஷாஹின் ஷா அப்ரீடியை மொயின் அலி 2 பவுண்டரிகள் அடிக்க, பாகிஸ்தான் கையிலிருந்து வெற்றி நழுவும் வாய்ப்பு ஏற்பட்டது, ஆனால் ஷாஹின் அப்ரீடி அப்போது கிரிகரியை லெக்கட்டரில் பவுல்டு செய்தார்.
19வது ஓவரில் வஹாப் ரியாஸ் வீச கிறிஸ் ஜோர்டான் ரன் அவுட் ஆனார், அதே ஓவரில் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்த மொயின் அலியை அபாரமான பவுன்சரில் தானே கேட்ச் பிடித்து வெளியேற்ற ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமானது, அதாவது கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் என்ற நிலையில் வஹாப் ரியாஸ் 3 ரன்களை மட்டுமே கொடுக்க கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், ராஃப் வீச டாம் கரன் கடைசி பந்துக்கு முதல் பந்தில் சிக்ஸ் விளாசினார், கடைசி பந்து மிக அபாரமான வைடு யார்க்கர். கரனால் தொட முடியவில்லை பாகிஸ்தான் 5 ரன்களில் வென்றது.
பாகிஸ்தான் தொடர் முடிந்த நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து -ஆஸ்திரேலிய அணிகள் டி20 போட்டியில் வரும் வெள்ளிக்கிழமையன்று மோதுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago