ஆஸம், ஹபீஸ் ஆட்டம் வீண்; நடுவர் கொடுத்த ‘வாழ்வு’க்குப் பிறகு வெளுத்து வாங்கிய மோர்கன்: இங்கிலாந்து வெற்றி 

By இரா.முத்துக்குமார்

முதல் டி20 போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸுடன் முடிந்து முடிவு இல்லாத போட்டியாக, 2வது ஒருநாள் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக மான்செஸ்டரில் நடந்தது, இதில் இங்கிலாந்து, பாகிஸ்தானின் 195 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 195/4 என்று முடிக்க, இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 199/5 என்று வெற்றி பெற்று 3 டி20 போட்டிகளுக்கான தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து கேப்டன் என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 திகைப்பூட்டும் சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இவருடன் டேவிட் மலான் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 112 ரன்களை 3வது விக்கெட்டுக்காக விளாசியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

ஜானி பேர்ஸ்டோ (24 பந்துகளில் 44), டாம் பேண்ட்டன் (16 பந்துகளில் 20) தொடக்க வீரர்கள் இங்கிலாந்துக்கு விளாசல் தொடக்கத்தை அளித்து பவர் ப்ளேயில் 66 ரன்களைச் சேர்த்தனர். அதுவும் டாம் பேண்ட்டன் ரிவர்ஸ் ஸ்வீப்பில் இமாத் வாசிம் பந்தில் பாயிண்டில் அடித்த சிக்ஸ் அபாரம், அற்புதம், இடது கை வீரர் போல் மட்டையை மாற்றிக் கொண்டு அடிக்கும் கெவின் பீட்டர்சன் ரக ஸ்விட்ச் ஹிட் அல்ல இது, ஒரு கிளாசிக் ரிவர்ஸ் ஸ்வீப் அதில் சிக்ஸ்.

பேர்ஸ்டோ 2வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். மொகமது ஆமீர் சரியாக வீசவில்லை, இலவச பவுண்டரி பந்துகளை வாரி வழங்கினார், அவரை அபாரமான ஒரு சிக்சரை அடித்தார் பேர்ஸ்டோ. ஆமிர் காயம் காரணமாக 2 ஓவர்களையே வீசினார் ஆனால் அதில் 25 ரன்களை வாரி வழங்கினார்.

ஷதாப் கான் அபாரம், மோர்கனுக்கு நடுவர் கொடுத்த ‘வாழ்வு’

7வது ஓவரில் லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் வந்த பிறகு பாகிஸ்தானின் இருண்ட கதவுகளுக்கு இடையில் ஒளி லேசாக தன் கிரணங்களை வீசியது. 2வது பந்தில் பேர்ஸ்டோ ஸ்வீப் ஆடி இமாத் வாசிமிடம் ஆன் திசையில் கேட்ச் ஆகி வெளியேற, எதிர்முனையில் இருந்த டாம் பேண்ட்டன் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்து அடுத்த பந்தே, நேராக வந்த பந்தை ஸ்வீப் ஆட முயன்று பிளம்ப் எல்.பி.ஆனார். ஷதாப் ஹாட்ரிக் வாய்ப்பில் இருந்தார்.

ஸ்லிப் நிறுத்தப்பட்டது. மோர்கன் இறங்கி அந்தப் பந்தை தடுத்தாடினார். அடுத்த பந்து ஸ்லிப் இருப்பதால் கூக்ளியாக இருக்க வேண்டும் என்று மோர்கன் நினைத்திருப்பார், ஆனால் பந்து லெக் ஸ்பின் ஆக நேராக வாங்கினார் மோர்கன், எந்த அணியின் கேப்டனுக்கும் அந்தந்த நாட்டில் அவுட் கொடுக்கக் கூடாது என்ற விதியின் படி நடுவர் நாட் அவுட் என்றார். ஷதாப் கான் ரிவியூ செய்தார், ‘அம்பயர்ஸ் கால்’ என்று வந்தது, தப்பினார் மோர்கன்.

இதற்கு முன்பு அவுட் ஆன டாம் பேண்ட்டனுக்கும் பந்து ஸ்டம்புக்கு வெளியேதான் பிட்ச் ஆனது. நியாயப்படி அதை நாட் அவுட் என்று கூறியிருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம், அதை அவுட் என்றார், இங்கிலாந்து பேட்ஸ்மென் ரிவியூ செய்தபோதும் அவுட் ஆனது. அதே போல்தான் மோர்கனுக்கு வீசப்பட்ட பந்தும் லேசாக ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆகி பேடை ஸ்டம்ப் லைனில் தாக்கியது பந்து மிடில் ஸ்டம்பை பெயர்க்கும் பந்து. நாட் அவுட் என்கிறார் நடுவர். பேண்டன் அவுட் என்றால் மோர்கனும் அவுட். பேண்ட்டன் நாட் அவுட் என்றால் மோர்கனும் நாட் அவுட் தான் என்ற தர்க்கத்துக்குத்தான் நாம் வர முடியும். எப்படியோ நடுவர் கொடுத்த வாழ்வில் பிழைத்த மோர்கன் அதன் பிறகு வெளுத்து வாங்கினார். இங்கிலாந்து 66/2 என்ற நிலையில் இப்திகார் என்ற இன்னொரு ஸ்பின்னரும் டைட்டாக்கினார்.

8 ஓவர்களில் 74/2 என்ற நிலையில் மோர்கன் புகுந்தார், ஷதாப் கானை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ். பிறகு பவுலர் கையை வைத்திருந்தால் விரல் தெறிக்கும் ஒரு நேர் பவுண்டரி என்று 9வது ஓவரில் 14 ரன்கள். 10 வது ஓவரில் இப்திகார் 6 ரன்களையும் 11வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பிரமாதமாக வீசி 5 ரன்களையும் கொடுக்க 11 ஓவர்களில் 99/2 என்ற நிலையில் இங்கிலாந்துக்கு தேவைப்படும் ரன் விகிதம் 10.77 என்று ஆனது.

ஆனால் இனி பொறுக்க முடியாது என்று முடிவெடுத்த மோர்கன் இப்திகார் ஓவரில் ஒரு பெரிய சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று விளாச மலானும் இவரும் அந்த ஓவரில் 18 ரன்களை குவித்தனர். மீண்டும் ஹாரிஸ் ராஃப் வந்தார், ஆனால் மோர்கன் அவரை ஒரு ஸ்டன்னிங் சிக்ஸ் விளாசினார், மணிக்கு 145 கிமீ வேகம் வீசும் ராஃப் வீசிய குட் லெந்த் பந்தை ஸ்லாக் ஸ்வீப் ஆடி டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் ஸ்டாண்டுக்கு அனுப்பினார் மோர்கன். பிறகு புல்டாஸ் ஒன்ற பளார் என்று அறைந்து நான்கிற்கு அனுப்ப அந்த ஓவரில் 13 ரன்கள்.

14 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து 142/2, மோர்கன் 47, மலான் 28, இந்நிலையில் ஷாஹின் ஷா அஃப்ரீடியைக் கொண்டு வந்தது பாகிஸ்தானின் எதிர்விதியை தீர்மானித்தது. ஒரு வைடை வீசினார், ஆனால் இது வைடு அல்ல, இது மட்டும் வைடு கொடுக்கப்படாமல் இருந்தால் அதே லைனில் அவர் வீசியிருப்பார், வைடு என்று நடுவர் தவறாக அழைக்க, மோர்கன் அடுத்த பந்தை தனது ட்ரேட்மார்க் ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்து அரைசதம் எடுத்தார். அதற்கு அடுத்ததாக அப்ரீடி புல்டாஸ், ஆஃப் வாலி என்று வீச மோர்கன் மேலும் 3 பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் வந்தது.

கடைசியில் 33 பந்துகளில் 66 ரன்கள் என்று மோர்கன் ராஃப் பந்தில் ஆட்டமிழக்கும் போது இங்கிலாந்து 178/3 என்று வெற்றிக்கு அருகில் வந்தது.

மொயின் அலி இங்கிலாந்துக்காக கடைசி போட்டியில் ஆடுகிறார் என்று கூறலாம், ஏனெனில் வந்தவுடன் ஷதாப் பந்தில் நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். சாம் பில்லிங்ஸ் 10 ரன்களில் ராஃபிடம் ஆட்டமிழக்க கடைசியில் மலான் வெற்றிக்கான பவுண்டரியை அடித்து 54 நாட் அவுட் என்று இருந்தார். ஷதாப் கான் 34/3. ராஃப் 34/2. ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆஸம், டி20-யில் நம்பர் 1 பேட்ஸ்மென் 37 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 56 என்று முடிந்தார். இவருடன் ஃபகர் ஜமான் 22 பந்துகளில் 36 என்று இருவரும் முதல் விக்கெட்டுக்காக 72 ரன்களைச் சேர்த்தனர். இருவரையும் ரஷீத் (2/32) காலி செய்தார். மொகமது ஹபீஸுக்கு வயது 39, ஆனால் ஆட்டத்தில் துள்ளல் மாறவில்லை சகீப் மசூத் என்ற வேகப்பந்து வீச்சாளரை டீப் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் அடித்தது அவரது 4 சிக்சர்களில் ஒன்று. ஹபீஸ் 5பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். ஷோயப் மாலிக் 14 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் 195/4 என்று முடிந்தது.

பாகிஸ்தான் அணி தொடரை ட்ரா செய்ய கடைசி வாய்ப்பு செவ்வாய்க்கிழமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்