8-வது டெஸ்ட்டிலேயே அபார சதமடித்த கிராலே; பட்லர் நங்கூரம்; சிறந்த பார்ட்னர்ஷிப்பால் 3-வது டெஸ்ட்டில் இங்கி. வலுவான நிலை: பாக். திணறல்

By க.போத்திராஜ்

ஜாக் கிராலேயின் அபாரமான சதம், 2 ஆண்டுகளுக்குப் பின் பட்லர் அடித்த நம்பிக்கையான ரன்கள் ஆகியவற்றால் சவுத்தாம்டனில் நடந்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் சேர்த்துள்ளது. ஜாக் கார்லே அபாரமாக சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 171 ரன்களுடனும், துணையாக ஆடிய ஜாஸ் பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசி விரைவாக விக்கெட்டுகளை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். முதல் இரு விக்கெட்டுகளை 73 ரன்களுக்கும், அடுத்த இரு விக்கெட்டுகளை 127 ரன்களுக்குள்ளும் வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தனர்.

ஆனால், 5-வது விக்கெட்டுக்கு ஜாக் கார்லே, ஜாஸ் பட்லர் ஜோடி இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து ஆடி வருகின்றனர்.

இங்கிலாந்து மண்ணில் கிராலே, பட்லர் பார்ட்னர்ஷிப் 5-வது விக்கெட்டுக்கு10 ஆண்டுகளுக்குப் பின் அடிக்கப்பட்ட 5-வது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாகும்.

கடந்த 2-வது டெஸ்ட்டில் இதே மண்ணில் கிராலே 76 ரன்கள் அடித்த நிலையில் இந்த முறை சதம் கண்டுள்ளார். 22 வயதாகும் ஜாக் கார்லே தனது 8-வது டெஸ்ட் போட்டியில்தான் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார்.

கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து அணியில் 3-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த வீரர் எனும் பெருமையைக் கிராலே பெற்றுள்ளார். அதிலும், உள்நாட்டில் இதே வரிசையில் களமிறங்கி 4 ஆண்டுகளுக்குப் பின் சதம் அடித்த வீரர் என்ற முத்தாய்ப்பையும் கிராலே பெற்றார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்றது. 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்தால் அல்லது வென்றால் 10 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானை தங்கள் சொந்த மண்ணில் வென்ற சாதனையை இங்கிலாந்து அணி பெறும்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பர்ன்ஸ், சிப்லே களமிறங்கினர். ஷாகின்ஷா அப்ரிடியின் வேகப்பந்துவீச்சில் மூன்றாவது ஸ்லிப்பில் மசூத்திடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த கிராலே, சிப்லேயுடன் இணைந்து ஆடினார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்து வந்தனர். யாசிர்ஷா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 22 ரன்களில் சிப்லே வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரூட் களமிறங்கி, கிராலேயுடன் சேர்ந்தார். இவரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. நசீம்ஷா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் பெவிலியன் சென்றார். 4-வது விக்கெட்டுக்கு வந்த போப் வந்த வேகத்தில் 3 ரன்னில் யாசிர் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

127 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து இக்கட்டான நிலையில் இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு பட்லர், கிராலே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி பின்னர் அடித்து ஆடத் தொடங்கினர்.

இருவரையும் பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பல்வேறு பந்துவீச்சாளர்களை மாற்றியும் முடியவில்லை. இருவரும் சேர்ந்து களத்தில் நங்கூரமிட்டவுடன் பாகிஸ்தான் வீரர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டதுபோல் விளையாடினர்.

அபாரமாக பேட் செய்த கிராலே 80 பந்துகளில் அரை சதத்தையும், 170 பந்துகளில் தனது முதலாவது டெஸ்ட் சத்தையும் நிறைவு செய்தார்.

துணையாக ஆடிய பட்லர் 2 சிறந்த சிக்ஸர்களுடன் 85 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஜாஸ் பட்லர் கடந்த 2 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் உயர்ந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

சிறப்பாக ஆடிய கிராலே 233 பந்துகளில் தனது 150-வது ரன்களை நிறைவு செய்தார். சவுத்தாம்டனில் இங்கிலாந்து வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் இயான் பெல் (167), கேரி பேலன்ஸ் (156) ரன்கள் சேர்த்திருந்தனர். இருவருமே இந்தியாவுக்கு எதிராகவே இந்த ரன்களைச் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராலே 19 பவுண்டரிகளுடன் 171 ரன்களுடனும், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் என மொத்தம் 87 ரன்களுடன் பட்லரும் களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்