இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் நம்மிடையே இல்லை. கோவிட் 19க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். கவாஸ்கருக்கு நெருக்கமான தொடக்க வீரர், இருவரும் வெற்றிகரக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
1981-ல் இந்திய அணி கவாஸ்கர் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. அந்தத் தொடர் பல விதங்களில் நினைவுகூரத்தக்க தொடராக அமைந்தது, டெஸ்ட் தொடரை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 1-1 என்று ட்ரா செய்தது. சந்தீப் பாட்டீல் அடிலெய்டில் அடித்த, இன்று வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்களால் மிகச்சிறந்த இன்னிங்சாக கருதப்படும் 174 ரன்கள் அதிரடி இன்னிங்ஸ் லென் பாஸ்கோவின் கோபாவேசமான ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சின் உக்கிரம், மெல்போர்னில் வலிநிவாரணை ஊசி போட்டுக் கொண்டு வந்து கபில்தேவ் ஆஸ்திரேலியாவை 81 ரன்களுக்குச் சுருட்டியது என்று அந்தத் தொடர் பல விதங்களில் மலரும் நினைவாக இன்றளவும் உள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தவறாக எல்.பி. கொடுத்ததற்காக நடுவர்களிடம் ஆத்திரம் கொப்புளிக்க கவாஸ்கர் களத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டெனிஸ் லில்லி கவாஸ்கருக்கு பெவிலியனை நோக்கி கையைக் காட்டினார். கவாஸ்கர் கோபத்தின் உச்சத்தில் வெளிநடப்பு செய்தார். அப்போது கவாஸ்கருடன் ஆடியவர் தொடக்க வீரர் சேத்தன் சவுகான். இன்று சவுகான் நம்மிடையே இல்லை. சவுகான் காலமானார்.
1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இந்த டெஸ்ட் தொடரின் 3வது, இறுதி டெஸ்ட் அது. கிரெக் சாப்பல் ஆஸ்திரேலியா கேப்டன். டாஸ் வென்ற அவர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், டெனிஸ் லில்லி, லென் பாஸ்கோவிடம் இந்திய டாப் ஆர்டர் மோசம் போனதை வைத்து அவர் இந்த முடிவை எடுத்தார். 43/3 என்று கவாஸ்கர் (10), சவுகான் (0), வெங்சர்க்கார் (12) காலியாகினர். ஜிஆர்.விஸ்வநாத் மட்டும் ஆஸி. கோபாவேச வேகத்திற்கு ஈடு கொடுத்து 222 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். 114 ரன்களை எடுத்து குண்டப்பா விஸ்வநாத் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்திய அணி 237 ரன்களுக்குச் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி ஆலன் பார்டர் 124 ரன்கள் எடுக்க 419 ரன்கள் குவித்தது. இந்தியா 2வது இன்னிங்ஸை ஆடிய போது ஆஸ்திரேலியாவின் எரிச்சலுக்கு இணங்க முதல் விக்கெட்டுக்காக கவாஸ்கர் (70), சவுகான் (85) 165 ரன்களைச் சேர்த்தனர். அப்போதுதான் எல்.பி.சர்ச்சை ஏற்பட்டு கவாஸ்கர் தன்னுடன் சவுகானையும் சேர்த்து வெளிநடப்பு செய்தார். பெரிய சர்ச்சை மூண்டது. கடைசியில் எப்படியோ ஆட்டம் தொடங்கி வெங்சர்க்கார் 41 ரன்கள், சந்தீப் பாட்டீல் 26 பந்துகளில் 36 ரன்கள், விஸ்வநாத் மீண்டும் ஒரு 30. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு ஆல் அவுட்.
ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 143 ரன்கள். கபில்தேவ் காயம் காரணமாக வீச முடியாத நிலை. கர்சன் காவ்ரி, சந்தீப் பாட்டீல் திலிப் தோஷி ஆகிய 3 பவுலர்கள்தான் 4ம் நாள் மதியம் இருந்தனர். ஆனால் காவ்ரி சற்றும் எதிர்பாரா விதமாக ஜான் டைசனையும் வந்து இறங்கியவுடன் கிரெக் சாப்பலை டக்கில் பவுல்டும் செய்து வீழ்த்தினார். அப்பொதெல்லாம் கிரெக் சாப்பல் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. கிரேம் உட், திலிப் தோஷி பந்தில் கிர்மானியிடம் ஸ்டம்ப்டு ஆனார். 4ம் நாள் முடிவில் ஆஸி. 24/3 என்று இந்திய அணிக்கு ஒரு ஹோப் இருந்தது. ஆனால் அதற்குக் கபில் வரவேண்டும். கபிலுக்கு வலிநிவாரணை ஊசி மருந்து செலுத்தி கவாஸ்கர் 5ம் நாள் களமிறக்கினார்.
கபில் வந்தார் யார்ட்லி, ஆலன் பார்டர், ராட்னி மார்ஷ், டெனிஸ் லில்லி, ஹிக்ஸ் ஆகியோரை காலி செய்ய ஆஸ்திரேலிய அணி 143 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 83 ரன்களுக்கு சுருண்டது. கபில்தேவ் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டை வீழ்த்தினார். தொடரை இந்தியா சமன் செய்தது. ஆட்ட நாயகனாக 114 எடுத்த குண்டப்பா விஸ்வநாத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் டெனிஸ் லில்லி.
இந்த டெஸ்ட், அந்தத் தொடர் பற்றி இன்று நம்மிடையே இல்லாமல் மறைந்த சேத்தன் சவுகான் அப்போது கூறியது, “சுனில் என்னையும் அவருடன் வெளியேறுமாறு கோரினார், இருவருமே எல்லைக் கோட்டைக் கடந்து சென்று விட்டால் அது ஆட்டத்தை கைவிட்டதாகி விடும். ஆனால் மேலாளர் என்னை மைதானத்திலேயே நிற்குமாறு பணித்தார். சூழ்நிலை சரியானது, அந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத அளவுக்கு ஒரு வெற்றியப் பெற்று சமன் செய்தோம். ஜி.ஆர்.விஸ்வநாத் மறக்க முடியாத 114 ரன்களை அடித்தார்.
ஆனால் இதற்கு முந்தைய அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நான் என் ஷாட்களை அடிக்க முடிவெடுத்தேன். லில்லி பயங்கர கோபாவேசமாக வீசிக் கொண்டிருந்தார். நான் அப்போது லில்லியை வீற வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஒரே ஓவரில் வரிசையாக 4 பவுண்டரிகளை பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினேன், ஒவ்வொரு முறை லில்லி பந்து எல்லைக் கோட்டைக் கடக்கும் போதும் என்னை முறைத்துப் பார்த்து ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னுடைய அடிலெய்ட் இன்னிங்ஸ் 97 ரன்களில் முடிந்தது. சதம் எடுத்திருக்க வேண்டியது, ஆனால் எடுக்கவில்லை. ஆனால் பிரச்சினையில்லை, கடவுள் கருணை இருந்தது.” என்று முன்னொரு முறை கூறியிருந்தார் சேத்தன் சவுகான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago