அபாரமான பார்ட்னர்ஷிப்: வெற்றிக்கு வித்திட்ட பட்லர், வோக்ஸ்: முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்த இங்கிலாந்து

By க.போத்திராஜ்

ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபாரமான பார்ட்னர்ஷிப், ஆர்ப்பரிப்பான அரை சதத்தால் ஓல்ட் டிராபோர்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

277 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கி இருந்தது. ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் சென்றது. ஆனால், அந்நேரத்தில் கைகோர்த்த ஜோஸ்பட்லர், கிறிஸ்வோக்ஸ் கூட்டணி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

82.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது வென்ற கிறிஸ் வோக்ஸ் : படம் உதவி | ஐசிசி

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் 84 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

கடுமையாகப் போராடியும் வெற்றியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கைநழுவவிட்டனர். தொடக்கத்தில் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றிருந்தால், பாகிஸ்தானின் இளம் பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால், பட்லர், வோக்ஸ் கூட்டணி பாகிஸ்தானின் வெற்றியைப் பறித்தது என்றுதான் சொல்ல முடியும்.

5 நாட்கள் நடைபெற வேண்டிய முதலாவது டெஸ்ட் போட்டி 4-வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் ஷா மசூதின் (169 ரன்கள்) அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தான் அணி ஆடத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆன்டர்ஸன், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்திருந்தது.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. யாசிர் ஷா 12 ரன்னிலும், முகமது அப்பாஸ் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கூடுதலாக 32 ரன்கள் சேர்த்த நிலையில் பாகிஸ்தான் அணி மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பெற்ற 107 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் சேர்த்த 169 என இரண்டையும் சேர்த்து 277 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

277 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் இளம் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். இதனால் முக்கிய வீரர்களான ஜோ பர்ன்ஸ் (10), சிப்லி (36), கேப்டன் ரூட் (42), ஸ்டோக்ஸ் (9), போப் (7) என விரைவாக ஆட்டமிழந்தனர்.

அதிலும் குறிப்பாக யாசிர் ஷா வீசிய கூக்ளி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பென் ஸ்டோக்ஸ் நெளிந்து ஆட அவரின் பேட்டில் பட்டுச் சென்ற பந்தை விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அருமையாகப் பிடித்து நம்பிக்கை நாயகர் ஸ்டோக்ஸை வெளியேற்றினார்.

86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் ஆடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.

6-வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க முடியாமல் அனுபவமில்லா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். மெல்ல மெல்ல இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று, இருவரும் அரை சதம் அடித்தனர்.

6-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. யாஷிர் ஷா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 256 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 7வது விக்கெட்டை இழந்தது. வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசினர். அடுத்துவந்த ஸ்டூவர்ட் பிராட் 7 ரன்னில் யாசிர் ஷா சுழற்பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

ஆனால், மற்றொருபுறம் தூணாக நின்ற கிறிஸ்வோக்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வோக்ஸ் 84 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக யாஷிர்ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்