2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுவிடும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி வருவாய் உள்ள போட்டி என்பதால் எப்படியாவது நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் சூழல் அதற்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.
ரசிகர்களை அனுமதிக்காமல் மூடப்பட்ட மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டது. குறிப்பாக மும்பையில் நடத்தத் திட்டமிட்டபோது, மும்பையில் கரோனா பாதிப்பு உச்ச கட்டத்தில் இருந்ததால், அது கைவிடப்பட்டது.
இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்வு ஐக்கிய அரபு அமீரகமாகவே இருந்தது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஆனால், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படலாம் என்று மட்டும் முதல்கட்ட தகவல்கள் வந்தன. ஐபிஎல் நிர்வாகக்குழுக் கூடித்தான் தேதிகளை முடிவு செய்ய வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 13-வது ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 8-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ 13-வது ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குவதற்கு(சனிக்கிழமை) திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 8-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், எங்கள் முடிவு இறுதியானது அல்ல. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக்குழு அடுத்தவாரம் கூடி ஆலோசிக்கும் அப்போதுதான் தேதிகள் முடிவாகும். ஏறக்குறைய 51 நாட்கள் நடத்தப்படுவது என்பது 8 அணிகளின் நிர்வாகங்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
ஐபிஎல் போட்டிகளை முதலில் செப்டம்பர் 26-ம் தேதி நடத்துவதாகவே பேசப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து இந்திய அணி நவம்பர் இறுதியில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா செல்லும் போது அங்கு 14 நாட்கள் தனிைமப்படுத்திக்கொள்கிறது. அதற்கான காலம் தேவை என்பதால், முன்கூட்டியே ஐபிஎல் நடத்தப்படுகிறது.
ஐபிஎல் போட்டித் தொடரில் இந்த முறையும் அதிகமான அளவு ஒரேநாளில் இரு போட்டிகள் நடத்துவது இருக்கும், பெருமளவு குறைக்கப்பட வாய்ப்பில்லை.ஐபிஎல் போட்டிக்காக 8 அணிகளும் ஆகஸ்ட்20-ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுவிடும் “ எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி, துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago