மாற்றி யோசித்த ஜோ ரூட்: பழிதீர்த்தது இங்கிலாந்து- 2வது டெஸ்ட்டில் மே.இ.தீவுகள் தோல்வி

By இரா.முத்துக்குமார்

பென் ஸ்டோக்ஸின் அட்டகாசமான ஆல்ரவுண்ட் திறமை, ஸ்டூவர்ட் பிராடின் அற்புதப் பந்து வீச்சினால் ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்தது.

5ம் நாளான நேற்று 312 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள் 70.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சாம் கரன், வோக்ஸ், பெஸ், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக 182 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், தன் பாணியிலிருந்து சற்றே விலகி மாற்றி யோசித்து டி20 பாணியில் ஆட பென் ஸ்டோக்ஸையும் ஜோஸ் பட்லரையும் தொடக்க வீரர்களாக 2வது இன்னிங்ஸில் இறக்கினார். ஆனால் இதில் பட்லர் சோபிக்கவில்லை கிமார் ரோச் பந்தில் டக்கில் கிளீன் பவுல்டு ஆனார்.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் தன் முதல் இன்னிங்ஸ் பொறுமைத் திலக 176 ரன்களுடன் 2வது இன்னிங்சில் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்களை விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதனையடுத்து மே.இ.தீவுகளுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

3வது நாள் முழுதும் மழையால் பாதிக்கப்பட்டு ஒரு பந்து கூட வீசப்படவில்லை எனினும் பென் ஸ்டோக்சின் அதிரடி இன்னிங்ஸ் பந்து வீச்சில் தேவைப்படும் போது கூட்டணிகளை உடைப்பது என்று இங்கிலாந்து வெற்றி உந்துதலை முன்னோக்கி நகர்த்துவதில் பெரும் பங்கு வகித்தார்.

ஸ்டூவர்ட் பிராட் என்னையா உட்கார வைத்தீர்கள்? என்ற ரீதியில் முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகளின் 3 விக்கெட்டுகளை ஒரு கட்டத்தில் 1 ரன்னுக்குக் கைப்பற்றினார். புதியபதின் புதிய கூட்டளிகளாக பிராட்-வோக்ஸ் கூட்டணி திகழ்ந்தது, வோக்ஸ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

5ம் நாள் காலை 37/2 என்று தொடங்கிய இங்கிலாந்து அணியை தனது அதிரடி மூலம் பெரிய முன்னிலைக்குக் கொண்டு சென்றார் பென் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் அவர் 78 ரன்களை விளாச 11 ஓவர்களில் டி20 போல் 92 ரன்கள் விளாசப்பட்டது. இதனையடுத்து 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மே.இ.தீவுகள் ட்ரா செய்யும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் அதியற்புத ஆக்ரோஷ ஸ்பெல் ஒன்றை வீசி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க மே.இ.தீவுகள் 2வது இன்னிங்சில் சடுதியில் 37/4 என்று ஆனது.

ஷம்ரா புரூக்ஸ் (62), பிளாக்வுட் (55) பிரமாதமாக ஆடி சதக்கூட்டணி அமைத்தனர். ஆனால் அப்போதுதான் பென் ஸ்டோக்ஸ் தேநீர் இடைவேளையின் போது முக்கிய பிரேக் த்ரூ அளிக்க (2/30) மே.இ.தீவுகள் கதை முடிந்தது, பிளாக்வுட்டை பவுன்சரில் காலி செய்தார் பென் ஸ்டோக்ஸ்.

பென் ஸ்டோக்ஸ்தான் ஒரே டெஸ்ட் போட்டியில் 250 ரன்களையும் ஒன்றுக்கும் அதிகமான விக்கெட்டுகளையும் எடுத்த முதல் இங்கிலாந்து ஆல்ரவுண்டர். கிறிஸ் வோக்ஸ் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் ஷேன் டவ்ரிச் விக்கெட்டும் அடங்கும், டவ்ரிச் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்கோர் குறிப்பவரை தொந்தரவு செய்யவில்லை.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் 35ரன்களுக்கு தன்னால் முடிந்தவரை தடுத்துப் பார்த்தார். அப்போது ஆஃப் ஸ்பின்னர் பெஸ்-க்கு ஒரு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி விரைவில் திரும்ப ஹோல்டர் பவுல்டு ஆனார். 198 ரன்களுக்கு மே.இ.தீவுகள் கதை முடிந்தது.

ஆட்ட நாயகன் பென் ஸ்டோக்ஸ். 3வது டெஸ்ட் போட்டி இதே ஓல்ட் ட்ராபர்டில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்