மறக்க முடியுமா இந்த நாளை? நாட்வெஸ்ட் நாயகர்கள், சட்டையைக் கழற்றிய கேப்டன்; லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை 

By க.போத்திராஜ்

மகிழ்ச்சியை அடக்க முடியாமல் சவுரவ் கங்குலி சட்டையைக் கழற்றிச் சுற்றியது, முகமது கைஃப், யுவராஜ் சிங்கின் ஆகச்சிறந்த பேட்டிங் என்றவுடன் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது 2002-ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டம்தான்.

ஆம், கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்கமுடியாத, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாக இருக்கிறது. அது குறித்த சின்ன ரீவைண்ட்.

‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணி நாட்வெஸ்ட் தொடரைக் கங்குலி தலைமையில் சேஸிங் செய்து வென்று இன்றுடன் 18 ஆண்டுகள் முடிகின்றன.

கிரிக்கெட்டில் சிறந்த, வெற்றி பெறக்கூடியதாக ஒரு அணி ஓர் நாள் இரவில் உருவாகிவிட முடியாது. பல ஆண்டுகளாக, பல அனுபவங்களைப் பெற்று, கடினமான தோல்விகள் மீது நடந்துதான் வரமுடியும். திறமையான வீரர்கள், புத்திசாலியான பயிற்சியாளர்கள், அதிர்ஷ்டம், சிறந்த திட்டமிடல் அனைத்தும் ஒன்று சேரும்போது ஓர் அணி வெற்றிகரமான அணியாக மாறுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை நாட்வெஸ்ட் தொடருக்கு முன்பெல்லாம் வெளிநாடுகளில் சென்று சேஸிங் செய்து வெற்றி பெற்றது என்பது கல்லில் நார் எடுப்பது போன்றுதான் இருந்தது.

1990களின் காலகட்டத்தில் சேஸிங்கில் மோசமான அணி என்றுதான் இந்தியா அழைக்கப்பட்டது. அதிலும் ஒட்டுமொத்த சுமையும் சச்சின் தோள் மீதுதான் இருக்கும். கடந்த 1996,1999-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் போன்றவற்றின் சச்சின் என்ற ஒற்றை பேட்ஸ்மேனை நம்பித்தான் இந்திய அணி களமிறங்கும் என்று பேசப்பட்டது.

நம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாக இருந்த சச்சின் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால், தொலைக்காட்சிப் பெட்டியை ஆஃப் செய்துவிட்டு வெளியேறிய ரசிகர்கள் பட்டாளம் இருந்த காலம்.

இந்திய அணியை வீழ்த்துவதற்கு திட்டம் போடுவதற்குப் பதிலாக சச்சினை மட்டும் ஆட்டமிழக்க வியூகம் வகுத்த எதிரணிகள் அப்போது அதிகம். ஏஎனன்றால், சச்சினை மட்டும் விரைவாக வீழ்த்திவிட்டால், இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று எதிரணிகள் வியூகம் அமைத்த காலம் அது.

சேஸிங்கில் கங்குலியின் பங்களிப்பு அவ்வப்போது இருந்தாலும் பெரும்பாலான வீரர்கள் சேஸிங்கில் நிலைத்து ஆடுவது என்பது அரிதான நிகழ்வு.

1990களில் இந்திய அணி சேஸிங் செய்யும் காலத்தில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியே அடைந்தது. குறிப்பாக 1999 ஜனவரி 31 முதல் 2002 ஜூலை 13 வரை தொடர்ந்து 9 ஒருநாள் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் 5 போட்டி சேஸிங் எடுத்து வெற்றியைப் பறிகொடுத்தது.

ஆகவே, சேஸிங் என்றாலே இந்திய அணி “தொடை நடுங்கிகள்” தோல்வி அடைந்துவிடும் என்று ரசிகர்கள் தலையில் கைவைத்து டிவி முன் அமர்ந்து போட்டியைப் பார்த்த காலகட்டம் உண்டு.

விளையாடும் வீரர்களுக்கு ரத்தக்கொதிப்பு எகிறுமோ தெரியாது, ஆனால், இந்திய சேஸிங் செய்யும் பல ரசிகர்களுகு ரத்தம் “ஜிவ்”வென்று தலைக்கு ஏறும்.

அதுபோன்ற ஆட்டம்தான் நாட்வெஸ்ட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டம் அமைந்திருந்தது.

சேஸிங்கில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தாலே திணறும் அணிகளுக்கு மத்தியில் இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் அடித்தவுடனே இந்திய அணிக்கு தோல்வி உறுதி என்று பந்தயம் கட்டிய ரசிகர்களும் இருந்தார்கள்.

ஆனால், அனைவரின் கணிப்பையும், எண்ணத்தையும் மாற்றி, இந்திய அணிக்கு சேஸிங்கை கற்றுக்கொடுத்த, இந்திய அணி சேஸிங்கை கற்றுக்கொண்ட ஆட்டமாக இந்த இறுதி ஆட்டம் அமைந்திருந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நசர் ஹூசைன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டிரஸ்கோத்திக், நைட் களமிறங்கினர். நைட் 14 ரன்னில் ஜாகீர் கான் பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆனால் அதன்பின் வந்த நசர் ஹூசைன், டிரஸ்கோத்திக்குடன் சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார்.

இருவரையும் ஆட்டமிழக்க வைக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர், கங்குலி பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனில்லை. இருவரும் சதம் அடித்து முடித்துதான் செல்வோம் என்று பிடிவாதமாக களத்தில் நங்கூரம் பாய்ச்சினர்.

2-வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டிரஸ்கோத்திக் சதம் அடித்து 109 ரன்களில் வெளியேறினார். நசர் ஹூசேன் 115 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஃபிளின்டாப் 40 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணியின் ஜாகீர் கான், நெஹ்ரா, கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், கங்குலி, யுவராஜ் சிங் என 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விக்கெட்டையும் தேவைப்படும் நேரத்தில் தகர்த்த முடியவில்லை.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது. இந்திய அணித் தரப்பில் ஹெஹ்ரா மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

326 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நிச்சயம் அன்றைய காலக்கட்டத்தில் தரமான ஆடுகளம், உயர்தரமான பந்துவீச்சு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த இலக்கு கடினமானது என்பதை மறுக்க முடியாது.

இப்போது கிரிக்கெட் விளையாட்டை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற ஆடுகளம் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றப்படுகிறது. ஆனால், அப்போது லார்ட்ஸ் போன்ற மைதானத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது கடினமானது.

இந்திய அணிக்கு சேவாக், கங்குலி இருவருமே நல்ல தொடக்கம் அளித்து, அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதிரடி சேவாக் வழக்கமான ஷாட்களை ஆட, கங்குலியின் ஆஃப் சைடு பவுண்டரிகள் பறக்க இந்திய அணி ரன்ரேட் வேகமாக உயர்ந்தது.14 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்களுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் பீறிட்டது. இந்திய அணி சேஸிங் அருமையாக இருக்கிறது எனப் புகழ்ந்தனர். 60 ரன்கள் சேர்த்த நிலையில் கங்குலி ஆட்டமிழந்தார். அதன்பின்புதான் திருப்புமுனை நடந்தது.

அடுத்து வந்த தினேஷ் மோங்கியா (9), நம்பிக்கை நாயன் சச்சின்(14) விக்கெட் கீப்பர் ராகுல் திராவிட் (5) என சொற்ப ரன்னில் வெளியேற இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தனியாகப் போராடிய சேவாக்கும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி அவ்வளவுதான். சேஸிங்கிற்கும், இந்திய அணிக்கும் சரிவராது என்று கூறிவிட்டு அன்றைய தினம் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு புறப்பட்ட ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால், 106 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைப் பார்த்து வேதனைப்படாமல் என்ன செய்ய முடியும்.

அதன்பின் முகமது கைஃப், யுவராஜ் சிங் கூட்டணி 6-வது விக்கெட்டுக்குச் சேர்ந்தனர். இருவரின் தொடக்க ஆட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை. ஆனால், நேரம் செல்லச் செல்ல விக்கெட்டை ஸ்திரப்படுத்தி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். இந்திய அணி தோல்வியின் பிடியிலிருந்து மெல்ல விலகி, நம்பிக்கை முனை நோக்கி நகர்ந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியை ஆஃப் செய்துவிட்டுப் போன ரசிகர்கள் பலர் சாலை ஓரக் கடைகளில் கைஃப், யுவராஜ் ஆட்டத்தைக் கேள்விப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைக் காண வீட்டுக்கு வந்திருந்தார்கள். இருவரின் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 250 ரன்களைக் கடந்தது.

யுவராஜ் சிங் சிறப்பாக பேட் செய்து அரை சதம் அடித்து 69 ரன்னில் கோலிங்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 121 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் 8 ஓவர்களில் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறத் தொடங்கியது.

ஹர்பஜன் சிங்கை வைத்து மெல்ல காய்நகர்த்திய முகமது கைஃப் அரை சதம் அடித்தார். முடிந்தவரை போராடிய ஹர்பஜன் சிங் 15 ரன்னில் வெளியேறினார், அடுத்து வந்த கும்ப்ளே டக்அவுட்டில் ஆட்டமிழக்க போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்தது.

314 ரன்களில் இந்திய அணி 8 விக்கெட்டை இழந்திருந்தது. ஜாகீர்கான், கைஃப் களத்தில் இருந்தனர். ஜாகீர்கானுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்காமல் முகமது கைஃப் திறமையாகச் செயல்பட்டு ரன்களைச் சேர்த்தார்.

ஃபிளின்டாப் வீசிய கடைசி ஓவரில் கைஃப் வெற்றிக்கான ரன்களை அடிக்க 3 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி 2 விக்கெட் வித்திாயசத்தில் வெற்றி பெற்றது.

முகமது கைஃப் 87 ரன்களுடனும், ஜாகீர்கான் 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகமது கைஃப் வின்னிங்ஷாட் அடித்தவுடன் கேலரியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் கங்குலி தனது சட்டையைக் கழற்றி சுற்றியது கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.

முந்தை பயணத்தில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோது, மும்பை வான்ஹடே மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஃபிளின்டாப் தனது சட்டையைக் கழற்றிச் சுற்றினார்.

அதற்குத் தகுந்த பதிலடியை தாதா கங்குலி லார்ட்ஸ் மைதானத்தி்ல் கொடுத்தார். இந்திய ரசிகர்களால் கங்குலியின் செயல் ரசிக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் விமர்சனங்களும் எழுந்தன.

ஆட்டநாயகனாக முகமது கைஃபும், தொடர் நாயகனாக டிரஸ்கோத்திக்கும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்