மறக்க முடியுமா? 1983 ‘கபில்ஸ் டெவில்ஸ்’ உ.கோப்பை வென்ற நாள்- ஜாம்பவான்கள் எங்கு இருக்கிறார்கள்?

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போட்ட பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த 1983 உலகக்கோப்பையை வென்று 37 ஆண்டுகள் இன்று நிறைவடைகிறது. லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் வலுவான கிளைவ் லாய்ட் தலைமை மே.இ.தீவுகள் அணிக்கு கபில்தலைமை ‘கபில்ஸ் டெவில்ஸ்’ அணி அதிர்ச்சி அளித்த நாள், இந்திய ரசிகர்களுக்கோ அது இன்ப அதிர்ச்சி தந்த நாள்.

அந்த வீரர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சுனில் கவாஸ்கர்: இப்போதும் கிரிக்கெட்டை ஆர்வத்துடன் பின் தொடர்கிறார், வர்ணனையில் அசத்த்தி வருகிறார். ஸ்போர்ட்ஸ் பத்தி எழுதுகிறார், சில வேளைகளி கிரிக்கெட்டின் பற்றுதலுடன் சில வேளைகளில் காட்டமான விமர்சனங்களுடன். லாக்டவுன் காலத்தில் வீட்டில் புத்தகங்களுடன் பொழுதைக் கழித்து வருகிறார். “என்னிடமிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளார்” என்கிறார் மகன் ரோஹன் கவாஸ்கர்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 1983 உலககக்கோப்பை இறுதிப் போட்டியின் ஸ்டார் என்றால் அது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான். உலகமே அஞ்சும், சுனில் கவாஸ்கரே மிகவும் எச்சரிக்கையாக ஆடும் ஆன்டி ராபர்ட்ஸ் பந்தை இடது முட்டியை தரையில் மடக்கிப் போட்டு பாயிண்டில் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் அப்போதைய தி இந்து ஆங்கிலத்தின் பிரதான வைரல் புகைப்படம். பிளிக் சிக்ஸ், ஹூக் ஷாட்களை மறக்க முடியாது. இரண்டாம் முறை தோனியின் கீழ் இந்தியா உலகக்கோப்பையை மும்பையில் வென்ற போது அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான். இப்போது ஸ்டார் தமிழில் கிரிக்கெட் வர்ணனையில் தனது நகைச்சுவையினாலும் உற்சாகத்தினாலும் கலக்கி வருகின்றார். கிரீஸில் பரபரப்பாகக் காணப்பட்டாலும் மனதளவில் அமைதியானவர்.

‘ஜிம்மி’ அமர்நாத்: 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் மொஹீந்தர் அமர்நாத். 26 ரன்கள் 3 விக்கெட்டுகள். வேடிக்கையான இவரது ஆக்ஷனில் பந்து கட்டர்ஸ் ஆக அச்சுறுத்தும். 1983 உலகக்கோப்பை மே.இ.தீவுகளுக்கு எதிரான குரூப் மட்ட 2ம் ஆட்டத்தில் மே.இ.தீவுகளின் 290 ரன்கள் இலக்கை விரட்டும் போது 81 ரன்களை எடுத்தார், அப்போது மார்ஷலின் ஒரு பந்து தாவாங்கட்டையைத் தாக்கியது, ஓரமாகப் போய் தேய்த்து விட்டுக் கொண்டு சிரித்தபடியே மீண்டும் வந்து கிரீசில் அடுத்த பந்துக்குத் தயாரானார், சைலண்ட் கில்லர். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியில் கவனம் செலுத்தினார், பரோடாவில் அகாடமி ஒன்றைத் தொடங்கினார். எப்போதும் அதிகாரத்துக்கு எதிராகப் பேசுபவர், சேவாகைத்தான் கேப்டனாக்க வேண்டும், தோனியைக் கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற இவரது குரலுக்கு ஆதரவில்லாமல் போனது. கோவாவில் தன் குடும்பத்துடன் இப்போது நேரம் செலவிட்டு வருகிறார்.

யாஷ்பால் ஷர்மா: 1983 உலகக்கோப்பை முதல் அதிர்ச்சி நிகழ்ந்த போது, அதாவது இந்திய அணி முதல் போட்டியிலேயே மே.இ.தீவுகளை வீழ்த்திய போட்டியில் 87 ரன்களை விளாசினார், அதுவும் கடைசி 4 ஒவர்கள் ஜொயெல் கார்னரை அடித்து நொறுக்கினார். அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக பாப் வில்லிஸ் பந்தை ரிச்சர்ட்ஸ் பாணியில் ஆஃப் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு ஸ்கொயர்லெக்கில் ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் அடித்ததை மறக்க முடியுமா? பயிற்சியாளராகவும், நடுவராகவும் பிறகு காலத்தை செலவிட்டார், நல்ல பீல்டர். இந்தியா டிவி-யில் பணியாற்றினார், இப்போது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

சந்தீப் பாட்டீல்: மிகப்பிரமாதமான வீரர், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவின் அச்சுறுத்தும் டெனிஸ் லில்லி, லென் பாஸ்கோ பவுலிங்குக்கு எதிராக 174 ரன்களைக் குவித்தவர். இந்திரா காந்தி சுட்டிக்கொல்லப்பட்ட அன்று பாகிஸ்தானில் நடந்த ஒரு போட்டியில் பாக் பவுலர்களை இவரும் வெங்சர்க்காரும் தூக்கித் தூக்கி மைதானத்துக்கு வெளியே அடித்துக் கொண்டிருந்தனர், இந்திரா மரணத்தினால் அந்தப் போட்டியும் தொடரும் கைவிடப்பட்டது. உலகக்கோப்பை அணியில் இவரது பங்களிப்பு அபாரம். பாப் வில்லிஸையும், டெனிஸ் லில்லியையும் டெஸ்ட் போட்டிகளில் விளாசியவர். ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் மாஸ்டர். இவர் கென்யாவின் பயிற்சியாளராக 2003 உலகக்கோப்பையில் அந்த அணியை அரையிறுதி வரை இட்டுச் சென்றார். தற்போது அவர் ‘நான் லவாஸாவில் இருக்கிறேன்’ என்கிறார். தன் பேரப்பிள்ளைகள் உட்பட பலருடனும் குடும்ப மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

கீர்த்தி ஆசாத்: அந்தக் காலத்து ரஞ்சி போட்டிகளில் இவர் இறங்கினாலே சரவெடிதான், ஒரு முறை ஆஸ்திரேலியாவின் கார்ல் ரெக்கமன் என்ற வேகப்பந்து வீச்சாளரை ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசியதும், பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த பகலிரவு போட்டியில் வெற்றி பெற முடியாத நிலையிலிருந்து இவர் வெற்றி பெறச் செய்ததும் (36 பந்துகளில் 72) கீர்த்தி ஆசாத்தை மறக்க முடியாத ஒரு வீரராக்கியுள்ளது. கிரிக்கெட்டை விட்டு அரசியலுக்குச் சென்றார். எம்.பி.ஆனார். டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார்.

சையத் கிர்மானி: ஜாலி மேன் என்றால் அது சையத் கிர்மானிதான், துல்லியமான விக்கெட் கீப்பிங், 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கபிலின் அந்த பிரமிப்பூட்டும் 175 நாட் அவுட் இன்னிங்ஸில் அவருக்கு உறுதுணையாக நின்றவர். கபிலைப் போலவே கால்ஃப் ஆடினார். பழைய நண்பர்களுடன் தற்போது பழைய நினைவுகளை அசைப்போட்ட படி வீட்டிலிருந்து வருகிறார்.

கபில்தேவ்: இவரைப்பற்றி சொல்வதற்கு ஒரு புத்தகம் எழுத வேண்டியிருக்கும். இந்தியாவில் வேகப்பந்து வீச்சா என்று கேலி பேசிய போது அதிக விக்கெட்டுகளுடன் பதிலடி கொடுத்தார். 1991-92 ஆஸி தொடருக்கு முன்பாக இந்தத் தொடரில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி 400ஐக் கடப்பேன் என்றார், கடந்தார். இவரது ஆங்கிலத்தை பிஷன் பேடி உள்ளிட்டவர்கள் கேலி செய்தனர், அதையும் ஒரு கைப்பார்த்தார். டீப்பில் பீல்ட் செய்வார், நெருக்கமாக நிற்பார், ஸ்லிப்பில் அசத்துவார் கபில் ஒரு உண்மையான ஆல்ரவுண்டர். இவர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சோஷியல் மீடியாவில் இன்னமும் பெரிய அளவில் பின் தொடரப்படுபவர்களில் கபிலும் ஒருவர். உலகக்கோப்பையை வென்றதை விட ரஞ்சியில் மும்பையை வீழ்த்தியதை பெரிதாகக் கூறுவார்.

ரோஜர் பின்னி: அருமையான ஒரு அத்லீட். தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர். ஓய்வு பெற்ற பிறகு அணியின் தேர்வுக்குழு தலைவராக பணியாற்றியிருக்கிறார். பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளார், ஆனால் பெரும்பாலும் பந்திபூர் தேசியப் பூங்காவில் உள்ள தனது பண்ணை வீட்டில் பெரும்பாலும் நேரம் செலவிட்டு வருகிறார். இவர் ஒரு இயற்கை ரசிகர். பிரமாதமான ஸ்விங் பவுலர், கவாஸ்கரும் விஸ்வநாத்தும் ஒழுங்காகக் கேட்ச் எடுத்திருந்தால் இவர் கபிலை விடவும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று கூறப்படுவதுண்டு.

பல்வீந்தர் சிங் சாந்து: இவர் மும்பை ஸ்விங் பவுலர், பெரிய ஸ்விங் பவுலர். 1983 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி 1982-ல் மே.இ.தீவுகளுக்குச் சென்ற போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது ரசிகர்கள் இருவர் பந்தயம் கட்டினர், இந்த டெஸ்ட்டில் கவாஸ்கர் எடுப்பதை விட கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ் ஒரு ரன் குறைவாகவே எடுப்பார்கள் என்று ஒருர் பந்தயம் கட்டினார். ஆனால் கவாஸ்கர் அந்த மேட்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். நண்பரிடம் பந்தையக் காசைக் கொடுத்து விட்டார் அந்த நபர், ஆனால் என்ன ஆச்சரியம், பல்வீந்தர் சாந்துவிடம் கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ் இருவருமே அந்த டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினர். இறுதிப் போட்டியில் கார்டன் கிரீனிட்ஜை இன்ஸ்விங்கரில் பவுல்டு எடுத்த அந்தப் பந்தை எந்நாளும் மறக்க முடியாது. ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஒரு நாள் கூட பயிற்சியளிக்காமல் அவரால் இருக்க முடியாது என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.

மதன்லால்: ஓவருக்கு 8 பந்துகள் இருந்த காலத்திலிருந்து வீசுகிறார். 1978-ல் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்ற போது சிட்னியில் இந்தியா வென்ற போது இந்திய வெற்றியை தடுத்துக் கொண்டிருந்த டூஹி என்ற ஆஸி வீரருக்கு இவர் பிடித்த கேட்சை யாரும் மறக்க முடியாது. 1983 உலகக்கோப்பையில் டைட்டாக வீசியதோடு மிடில் ஆர்டர் விக்கெட்டுகளையும் கைப்பற்றி பங்களிப்பு செய்தவர். ஒருமாதிரி பொட்டலத்தைச் சுற்றி விட்டெறிவது போன்ற ஆக்‌ஷன். பைனலில் விவ் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை கபிலின் அந்த புகழ்பெற்ற கேட்சுக்கு வீழ்த்தியவர். அகாடமி நடத்துகிறார், இந்தி வர்ணனையில் இவருக்கு தனி இடம் உண்டு.

ரவிசாஸ்திரி: இன்றைய தலைமைப் பயிற்சியாளர் அன்றைய மிஸ்டர் கிரிக்கெட். 1983 உலகக்கோப்பை முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கடைசியில் வீழ்த்தி மே.இ.தீவுகளுக்கு முதல் அதிர்ச்சியளித்ததில் இவரது பங்களிப்பை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இரும்பு மனிதர் என்று பெயர் பெற்றவர். 8ம் நிலையிலிருந்து தொடக்க வீரராக முன்னேறியவர் 1985 மினி உலகக்கோப்பையில் தொடர் நாயகன். ஆடிகார் பரிசு வென்றார். லாக்டவுனில் அலிபாகில் உள்ள தன் பண்ணை வீட்டில் நேரம் செலவிட்டு வருகிறார்.

சுனில் வால்சன்: இவர் ஒரு விசித்திரமான வீரர், வேகப்பந்து வீச்சாளர், உலகக்கோப்பை 1983 அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டதே பலருக்கும் தெரியாது காரணம் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை, செய்ல் நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ராஜினாமா செய்தார். டெல்லி டேர் டெவில்ஸ் அணி நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

திலிப் வெங்சர்க்கார்: 1983 உலகக்கோப்பையில் காயம் காரணமாக அதிகமாக ஆட முடியவில்லை. தோனியின் தலைமைப் பண்புகளை அடையாளம் காட்டியவர். மும்பையில் அகாடமி தொடங்கி, பிம்பிரிக்கு மாற்றியுள்ளார். கீழ்மட்ட அளவில் கிரிக்கெட் திறமைகளை கண்டுபிடித்துள்ளார். லார்ட்ஸில் தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்த பெருமை இந்த ‘கலோனலுக்கு’ உண்டு.

- தி இந்து ஸ்போர்ட்ஸ்டாரில் வெளியான விஜய் லோகபாலியின் கட்டுரை..

கூடுதல் நினைவுகளுடன்.. தமிழில் : இரா.முத்துக்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்