மறக்க முடியுமா? 1999 ஆஸி. vs தெ.ஆ. அரையிறுதிப் போட்டி; தோல்வியடைய வேண்டிய ஆஸி. இறுதிக்கு முன்னேறிய அதிசயம்!  

By டி. கார்த்திக்

உலகக் கோப்பை கிரிக்கெட் நாக் அவுட் போட்டிகளில் எத்தனையோ மறக்க முடியாத ‘கிளாஸிக்’ ஆட்டங்கள் இருந்தாலும், 2019 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்கு முன்புவரை மகுடம் வைத்த ஆட்டம் என்றால், அது 1999-ல் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டிதான். மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கும், கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு சென்றிருக்க வேண்டிய தென் ஆப்பிரிக்க அணி தலை கவிழ்ந்து ஊருக்குக் கிளம்பியதும் நடந்த ஆட்டம் அது.

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வலுவான அணி, கோப்பை வெல்லும் அணி எனக் கணிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா. லீக் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகளைக் கடந்து அரையிறுதிக்கு வேகமாக முன்னேறியது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. அதற்கு முன்பே தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதி ‘பர்த்’ ரெடியாகிவிட்டது. என்றாலும் ஆஸ்திரேலியாவை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களைக் குவித்தது.

272 என்னும் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ‘கூல் கேப்டன்’ ஸ்டீவ் வாஹ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெல்ல உதவினார். ஸ்டீவ் வாஹ் 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை கிப்ஸ் தவறவிட்டார். ரீபிளேயில், அவர் பந்தைப் பிடித்த அடுத்த வினாடியே, அதைத் தூக்கிப்போட முயற்சித்து, அது கீழே விழும். ஆனால், ஆட்டப்போக்கோடு பார்க்கும்போது கிப்ஸ் அந்த கேட்ச்சைத் தவறவிட்டது போலவே இருக்கும். கிப்ஸ் செய்த இந்தத் தவறு கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையிலிருந்தே வெளியேற வைக்கும் என்று அப்போது தென் ஆப்பிரிக்க அணி நினைத்துப் பார்த்திருக்காது.

அந்த கேட்ச்சைத் தவறவிட்டபிறகு, கிப்ஸிடம் ஸ்டீவ் வாஹ் இப்படிச் சொன்னார். “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று. அது உண்மையானது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிப் போட்டியில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்தித்தது. எட்ஸ்பாஸ்டன் நகரில் இதே நாளில் (ஜூன் 17) நடைபெற்ற போட்டியில் அரையிறுதியில் இரு அணிகளும் மல்லுக்கட்டின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களை மட்டுமே சேர்க்க, எளிதில் வெல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்தது. ஆனால், 61 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியின் கிப்ஸ், காலீஸ், ரோட்ஸ், பொல்லாக் ஆகியோர் அமைத்த சிறு சிறு பார்ட்னர்ஷிப் அந்த அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தது.

கடைசிக் கட்டத்தில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய முழு பாரமும் குளூஸ்னர் தலையில் ஏறியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட் நின்றார். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர். அந்த உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டம் காட்டி அவர் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வென்று மிரட்டியதால், குளூஸ்னர் அந்த ரன்னை எட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தனர். அதுபோலவே,முதல் இரு பந்துகளிலும் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அதிசயம் நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்காக குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், சுதாரித்து ஓடத் தொடங்கினார். வழியில் தடுமாறி டொனால்ட் மட்டையைக் கீழே போட்டுத் தடுமாறினார். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் மார்க் வாஹ், பந்தை பவுலரிடம் வீசினார். பவுலர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில்கிறிஸ்ட். ஆட்டம் சமனில் முடிந்தது. ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்ததால், அதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா ‘சர்ப்ரை’ ஸாக நுழைந்தது. தென் ஆப்பிரிக்கா ஊருக்குக் கிளம்பியது.

தொடக்கத்திலிருந்து அற்புதமாக விளையாடி, கடைசியில் நம்ப முடியாத வகையில் சொதப்பி ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழியோடு தென் ஆப்பிரிக்கா வெளியேறிய நாள் இன்று. 21 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்தப் போட்டியை இப்போது யூடியூபில் பார்க்க நேர்ந்தாலும், அதே பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொள்வதை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசையாக ஒட்டியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்