தன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பிறந்த நாள்!

By த.இளங்கோவன்

ஜூன் 1-ல் தனது 35-வது வயதை நிறைவு செய்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். நயன் மோங்கியாவுக்கு பிறகு பந்துவீச்சாளர்களின் தன்னம்பிக்கையை தூண்டும் இந்திய விக்கெட் கீப்பர். இந்திய அணியில் இடம்பிடிக்க திறமை மட்டும் போதும் என இன்னும் நம்புகிற வினோதமான கிரிக்கெட் வீரர். அதெல்லாம் லெமூரியா கண்டத்துடன் அழிந்தது எனும் உவமையை போல இதுவும் சச்சின் காலத்துடன் காலாவதி ஆகிவிட்டது.

தனது 19-வது வயதில் லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் மைக்கேல் வாகனை பறந்து சென்று சென்று ஸ்டம்பிங் செய்தபோது சர்வதேச கவனத்தை ஈர்த்தார். 2006-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் சேவாக் தலைமையில் ஆடியது. அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக தேர்வானார். சச்சின் இந்திய அணிக்காக ஆடிய ஒரே டி20 போட்டி அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக ஆடி மொத்தம் 263 ரன்களை குவித்து, நமது அணி சார்பில் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்தியா வென்ற தொடர் அது. பிரபலமான நிதகாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இக்கட்டான நிலையில் இறங்கி போட்டியின் முடிவை மாற்றியதை யாரும் மறக்க முடியாது. ஒருநாள் போட்டிகளில் இவர் அரைசதம் அடித்த 9 போட்டிகளையும், சர்வதேச டி20-களில் சேஸிங்கில் இவர் ஆட்டமிழக்காமல் இருந்த 9 போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இவை தனக்காக ஆடாமல் அணிக்காக ஆடும் வீரர் இவர் என்பதை புரிய வைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு தொடர்கள் சோடை போயிருந்த தமிழக அணிக்கு 2019-ல் மீண்டும் தலைமையேற்று விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி டி20 தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டி வரை கொண்டுசென்று மாநில அணிக்கு இழந்த உற்சாகத்தை மீட்டு தந்திருக்கிறார்.

ஐபில் போட்டிகளில் தொடர்ந்து மில்லியன் டாலர்மேனாக வலம் வருகிறார். கடந்த ஐபில் துவங்கும் வரை அதிக ஆட்டமிழப்பு செய்த ஐபிஎல்லின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக இருந்தார் (167 போட்டிகளில் 131 பேர்), தொடரின் இறுதியில் 184 போட்டிகளில் ஆடியிருந்த தோனி 132 பேரை ஆட்டமிழக்க செய்து முந்தியுள்ளார். மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டிய சவால் வரும் ஐபில்லில் காத்திருக்கிறது.

2018-ல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக கேகேஆர் நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கியது. இரண்டு முறை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்த கம்பீருக்கு பிறகு கேப்டன் பதவியை ஏற்றதால் அழுத்தம் அதிகம் இருந்தது, விமர்சனங்களுக்கும் குறைவில்லை. மற்றவர்களின் ஏளனங்களை தவிடுபொடியாக்கி தனது அசத்தலான கேப்டன்சியினால் அரையிறுதி வரை வந்து அசத்தினார். மற்ற வீரர்களுக்கு ஐபிஎல்லில் ஜொலித்தால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளபோதும், தனது தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டையை சுழற்றாமல் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் ஆடுகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் அணிக்குள்ளேயே ஏற்பட்ட புகைச்சல்கள் காரணமாக சீனியர் வீரர்களான உத்தப்பா, கிறிஸ் லின் ஆகியோரை களை எடுத்து கேகேஆர் அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக் பக்கம் உறுதுணையாக நிற்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் ஆடுவதை பார்ப்பது அரிதினும் அரிதாகிக் கொண்டே செல்லும் நிலையில் தமிழக வீரர்களான எம்.சித்தார்த்தையும், வருண் சக்கரவர்த்தியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடையாளம் காட்டி தேர்வு செய்ய வைத்திருக்கிறார். கடந்த தலைமுறை தமிழ்நாடு அணி வீரர்களிடம் இல்லாத சக வீரர்களுக்கு வாய்ப்புகளை பெற்று தரும் பண்பு இவரிடம் இருக்கிறது.

அப்பண்பு மட்டுமல்ல தொடர் புறக்கணிப்புகள், அதிர்ஷ்டமின்மை ஆகியவற்றை கடந்து உற்சாகமாகவும், தோல்வியில் துவளாமலும் இருக்கும் பொறுமையும் இருக்கிறது. இவர் நிலையில் அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் இருந்திருந்தால் இந்நேரம் பலமுறை ஓய்வு அறிவிப்பும், எத்தனையோ ட்வீட்டுகளையும் தெறிக்க விட்டிருப்பார்கள். சர்வதேச டி20 போட்டிகளில் 143.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும், 2017-க்கு பிறகான போட்டிகளில் 161.62 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ள டிகே, புள்ளிவிபரங்களால் தன்னை நிரூபிக்க வேண்டிய காலத்தை கடந்துவிட்ட வீரர். ஒருவிதத்தில் இவர் கைவசம் உள்ள ஷாட்கள் இவரை 360 டிகிரி வீரரான ஏ.பி.டிவில்லியர்சுடன் லேசாக ஒப்பிட வைக்கிறது. புவர் மேன்ஸ் டிவில்லியர்ஸ் என்று டிகே.யை அழைக்கலாம். எத்தனை முறை கழற்றிவிடப்பட்டாலும் ஃபீனிக்ஸாக எழுந்து மீண்டும் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார். வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவை சிறப்பாக அமைய இப்பிறந்தநாளில் வாழ்த்துவோம்!.

தொடர்புக்கு: elangovan.t@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்