கொழும்புவில் நடைபெற்ற 2-வது, இறுதி டி20 போட்டியில் இலங்கையை த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.அதுவும் 40/5 என்ற தடுமாற்றத்துக்கு பிறகு இலங்கையின் 172 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி வென்றதோடு தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது பாகிஸ்தான்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 172/7 எடுத்தது. தொடர்து ஆடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானின் நம்பர் 9 வீரர் அன்வர் அலி இறங்கி 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 46 ரன்களை விளாச நிச்சயமான உதையை வெற்றியாக மாற்றியது பாகிஸ்தான், முன்னதாக கேப்டன் ஷாகித் அப்ரீடி, 22 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்ததும் வெற்றியில் மிக முக்கியமான பங்களிப்புச் செய்தது.
173 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய பாகிஸ்தான் முக்தர் அகமது, அகமது ஷெசாத், ஹபீஸ், உமர் அக்மல், ஷோயப் மாலிக் ஆகியோரை 8-வது ஓவருக்குள் இழந்து 40/5 என்று தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இருந்தது.
3-வது ஓவரில் ஷெசாத், முக்தர் அகமது ஆகியோரை பெர்னாண்டோ வீழ்த்தினார். ஷெசாத் ஆஃப் கட்டரில் பவுல்டு ஆக, முக்தர் அகமது பவுன்சரை ஹூக் செய்து டாப் எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹபீஸ் 11 ரன்களில் தில்ஷனின் அபாரமான பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆனார். உமர் அக்மலும் டிசில்வா, பெரேரா கூட்டணியில் ரன் அவுட் ஆனார்.
ஷோயப் மாலிக் 8 ரன்களில் சிரிவதனா என்கிற இடது கை சுழற்பந்து வீச்சாளர் பந்தை மேலேறி வந்து ஆட முயன்றார். ஸ்டம்ப்டு ஆனார்.
7.2 ஓவர்களில் பாகிஸ்தான் 40/5 என்று தோல்வி உறுதியான நிலையிலிருந்து மீண்டது வேறொரு கதை.
10-வது ஓவரில் பூம் பூம் அப்ரீடி, சிரிவதனாவை ஒரு பவுண்டரியும், டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சரையும் அடித்து மிரட்டினார். 10-வது ஓவரில் 61/5.
மலிங்காவின் பந்து வீச்சு அதோகதிக்குச் சென்று விட்டது மீண்டும் இந்தப் போட்டியில் நிரூபிக்கப்பட்டது. அவரும் ஒரு ஷார்ட் பிட்சை வீச அப்ரீடி டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தார்.
12-வது ஓவரை ஜேஃப்ரி வாண்டர்சே என்ற லெக் பிரேக் பவுலர் வீச ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரும், மீண்டும் அதே ஷார்ட் பிட்ச் பந்தில் மற்றொரு சிக்சரும் அடித்தார். 10-வது ஓவரில் 61/5-லிருந்து 12-வது ஓவரில் 88/5 என்று உயர்ந்தது. மறுமுனையில் ரிஸ்வான் 17 ரன்களில் பெரேராவிடம் பவுல்டு ஆனார்.
இமாத் வாசிம் களமிறங்க 15-வது ஓவரில் ஷாகித் அஃப்ரீடி 22 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சரக்ளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயசூரியா பந்தில் பவுல்டு ஆனார். அப்ரீடி அவுட் ஆகும் போது 15 ஓவர்கள் முடிவில் 113/7 என்று இருந்தது. 5 ஓவர்களில் தேவை 60 ரன்கள்.
அப்போதுதான் அன்வர் அலி களமிறங்கி 17-வது ஓவரில் ஜெயசூரியா ஓவரில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடிக்க இமாத் வாசிம் ஒரு 3 ரன்களை எடுக்க சிங்கிள்களுடன் 21 ரன்கள் விளாசப்பட்டது திருப்பு முனை ஓவராக அமைந்தது. 17 ஓவரில் 141/7.
18-வது ஓவரில் பெரேரா 12 ரன்களை வழங்கினார். அன்வர் அலி ஒரு புல்டாஸை ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் பிறகு அடுத்த பந்து மீண்டும் ஒரு புல்டாஸை லாங் ஆன், மிட்விக்கெட் இடையே பவுண்டரியும் விளாசினார்.
18வது ஓவர் முடிவில் 153/7. பிறகு மலிங்கா 19-வது ஓவரை வீச வந்தார் அன்வர அலி அவரை மிட்விக்கெட் சிக்ஸ் மூலம் வரவேற்றார். மீண்டும் ஒரு புல்டாஸ் விழ அதுவும் பவுண்டரிக்கு விரட்டப்பட்டது.
ஆனால் அன்வர் அலி அடுத்த ஸ்லோ பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 17 பந்தில் 46 ரன்கள் என்ற அதிரடி இன்னிங்ஸை ஆடிவிட்டுச் சென்றார்.
அடுத்த பந்தே சொஹைல் தன்வீர் ரன் அவுட் ஆனார். இமாத் வாசிம் 18 ரன்களுடன் களத்தில் இருக்க, 19-வது ஓவரில் 14 ரன்களை மலிங்கா வழங்க ஸ்கோர் 167/9 என்று ஆனது. கடைசி த்ரில் ஓவர், பாகிஸ்தானுக்குத் தேவை 6 ரன்கல், இலங்கைக்குத் தேவை ஒரு விக்கெட்.
பெர்னாண்டோ வீச வந்தார். மொகமது இர்பான் ஒரு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை இமாத் வாசிமிடம் கொடுத்தார். 2-வது பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி பெறச் செய்தார். இலங்கை அணியில் கேப்டன் மலிங்காதான் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்த வீச்சாளரானார்.
முன்னதாக இலங்கை அணியில் தில்ஷன், பெரேரா ஆகியோர் 4-வது ஓவரில் ஸ்கோர் 32 ஆக இருக்கும் போது வெளியேறினர். ஜெயசூரியா 32 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். சிரிவதனா 23 ரன்களையும், கடைசியில் கபுகேதரா 25 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 48 ரன்களையும் விளாச இலங்கை 172 ரன்களை எட்டியது.
பாகிஸ்தான் தரப்பில் மாலிக் சிக்கனமாக வீசி 16 ரன்களுக்கு 2 விகெட்டுகளையும், அப்ரீடி 30 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், அன்வர் அலி, சோஹைல் தன்வீர், மொகமது இர்பான் ஆகியோரும் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக அன்வர் அலி தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago