கால்பந்து வரலாற்றில் 1930-ம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-ல்தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு வழங்கியது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா). 13 நாடுகள் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வட அமெரிக்காவில் இருந்து இரு நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன.
ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக மற்ற அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்க முன்வரவில்லை. உருகுவே தலைநகர் மான்டிவிடி யோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. உலகக் கோப்பை போட்டிக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட எஸ்டாடியோ சென்டினரியோ மைதானத்தில்தான் பெரும்பாலான ஆட்டங்கள் நடை பெற்றன.
ஒரே நேரத்தில் இரு போட்டிகள்
உலகக் கோப்பையில் பங்கேற்ற 13 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இதில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும், அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தன.
குரூப் சுற்றின் முடிவில் ஆர்ஜென்டீனா, உருகுவே, அமெரிக்கா, யூகோஸ் லேவியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் அமெரிக்காவும் ஆர்ஜென்டீனாவும் மோதின. அமெரிக்க அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில் 6 பேர் பிரிட்டனில் பிறந்தவர்கள். ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அமெரிக்க மிட்பீல்டர் ரபேல் டிரேஸியின் கால் உடைந்தது.
ஆர்ஜென்டீன வீரர் மான்டி கோலடிக்க, அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் உருகுவே அணி 6-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவைத் தோற்கடித்தது. உருகுவே வீரர் பெட்ரோ சீ ஹாட்ரிக் கோலடித்தார்.
படையெடுத்த ஆர்ஜென்டீனர்கள்
ஜூலை 30-ல் எஸ்டாடியோ சென்டினரியோவில் நடை பெற்ற இறுதிச்சுற்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென் டீனாவை வீழ்த்தி சாம்பி யனாகியிருந்ததே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
வெற்றி அல்லது வீரமரணம் என்ற போர்க் கோஷத்தை முழங்கியவாறு ஆர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து மான்டிவிடியோவுக்கு நதி வழியாக வந்தனர் ஆர்ஜென்டீன ரசிகர்கள். அவர்களை அழைத்து வருவதற்கு படகுகள் போது மானதாக இல்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வந்ததால் மான்டிவிடியோ துறைமுகமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, கடுமையான சோதனைக்குப் பிறகு ஆர்ஜென்டீன ரசிகர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
93 ஆயிரம் பேர்
93 ஆயிரம் பேர் மைதானத்திற்கு வந்திருந்த இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாதைத் தொடர்ந்து முதல் பாதியில் ஆர்ஜென்டீனா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன.
உருகுவே அணியைப் பொறுத்த வரையில் அரையிறுதியில் விளையாடிய அன்செல்மோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி யில் அவருக்குப் பதிலாக கேஸ்ட்ரோ சேர்க்கப்பட்டார்.
மான்டிக்கு கொலை மிரட்டல்
ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடிய மான்டிக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக தனி படகு ஒன்றும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாப்லோ டொராடோ அடித்த கோலால் உருகுவே முன்னிலை பெற்றது. இதன்பிறகு தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனா ஸ்கோரை சமன் செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, அந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த கில்லர்மோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
உருகுவே சாம்பியன்
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் உருகுவே மெதுவாக ஆட்டத்தின் வேகத்தை துரிதப்படுத்த, ஆர்ஜென்டீனாவின் மான்டி அற்புதமான கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனிடையே உருகுவேயின் பெட்ரா சீ கோலடித்து, ஸ்கோரை சமன் செய்ய, அடுத்த 10-வது நிமிடத்தில் 3-வது கோலையும், கடைசி நிமிடத்தில் காஸ்ட்ரோ 4-வது கோலையும் அடிக்க, உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது.
அரசு விடுமுறை
ஒலிம்பிக் சாம்பியனான உருகுவே உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் தோல்வியால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்ஜென்டீன ரசிகர்கள் பியூனஸ் அயர்ஸில் இருந்த உருகுவே தூதரகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உலகக் கோப்பையில் முதல் கோலடித்தவர்
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் பிரான்ஸின் லூசியன் லாரன்ட். உலகக் கோப்பையின் முதல் நாளில் நடைபெற்ற மெக்ஸிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த கோலை அடித்தார். அமெரிக்காவின் ஜிம்மி டக்லஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் எதிரணியிடம் கோல் வாங்காத முதல் கோல் கீப்பர். முதல் நாளில் நடைபெற்ற பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணியின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் ஜிம்மி தகர்த்தார்.
முதல் உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் கடைசியாக காலமானவர் எமெஸ்டோ மாஸ் செரோனி. இவர் 1984 ஜூலை 3-ம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 76. அதே அணியில் இடம்பெற்றிருந்த மாற்று பின்கள வீரரான எமிலியோ ரெகோபா தனது 87-வது வயதில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி காலமானார். இவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. 1930 உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவரான ஆர்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ வரல்லோ தனது 108-வது வயதில் 2010 ஆகஸ்ட் 30-ல் காலமானார்.
ஹாட்ரிக் சாதனைகள்
முதல் ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற பெருமை அமெரிக்காவின் பெர்ட் படேநாடிடம் உள்ளது. 1930-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் பராகுவே அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோலடித்தார்.
அதிவேக ஹாட்ரிக்: உலகக் கோப்பையில் அதிவேக ஹாட்ரிக் கோலடித்த சாதனை இன்றளவும் ஹங்கேரியின் லேஸ்லோ கிஸ்ஸிடம் உள்ளது. 1982 உலகக் கோப்பையில் சல்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லேஸ்லோ 8 நிமிடங்களில் (69, 72, 76-வது நிமிடங்களில்) மூன்று கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதேபோல் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி ஹாட்ரிக் கோலடித்தவர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது.
அதிக ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் 4 பேர் இருமுறை ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்துள்ளனர். ஹங்கேரியின் சன்டோர் கோசிஸ் 1954-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியா மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்தார். பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் 1958 உலகக் கோப்பையில் பராகுவே மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்து இருமுறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் 1970 உலகக் கோப்பையில் பல்கேரியா மற்றும் பெரு அணிகளுக்கு எதிராகவும், ஆர்ஜென்டீனாவின் கேபிரியேல் பாட்டிஸ்டுட்டா 1994 மற்றும் 1998 உலகக் கோப்பை போட்டிகளில் முறையே கிரீஸ் மற்றும் ஜமைக்கா அணிகளுக்கு எதிராகவும் ஹாட்ரிக் சாதனை படைத்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 40 பேர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
1930 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 70
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.88
ரெட் கார்டு - 1
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4, 34, 500
டாப் ஸ்கோர்
8 கோல்கள் - கில்லர்மோ ஸ்டைபைல் (ஆர்ஜென்டீனா)
5 கோல்கள் - பெட்ரோ சீ (உருகுவே)
4 கோல்கள் - கில்லர்மோ சுபியாப்ரே (சிலி)
4 கோல்கள் - பெர்ட் பெடேநாட் (அமெரிக்கா)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago