மறைந்த ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங்; எதிரணியினரை தன் நிழலைத் துரத்த விட்டவர், அது ஹாக்கி ஸ்டிக் அல்ல மந்திரக்கோல்

By விஜய் லோகபாலி

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டித் தொடர்களில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய அணியில் ஆடி தங்கம் வெல்ல பெரும்பங்காற்றியவர், ஒருமுறை துணைக்கேப்டனாகவும், கேப்டனாகவும் இருந்து வழிநடத்திய ஹாக்கி ஜாம்பவான் முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்திய ஹாக்கியில் பல்பீ்ர் சிங் என்றொரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு வயது 96.

இவர் கையில் ஹாக்கி ஸ்டிக் என்பது மந்திரக் கோல் ஆகும். பந்தை ட்ரிபிளிங் செய்து பிரமாதமாக அதைப் பாஸ் செய்து, தனக்கு வரும் பாஸை கோலாக மாற்றுவது உட்பட எதிரணியினர் பலரை தன் நிழலை விரட்ட வைத்தவர் பல்பீர் சிங் என்றால் அது மிகையானதல்ல.

களத்தில் எதிர்பாரா புள்ளியிலிருந்து கோலை அடிப்பவர் மறைந்த பல்பீர் சிங் சீனியர். தயான் சந்துக்கு அடுத்த படியாக மின்னல் வேக ஹாக்கி லெஜண்ட் என்றால் அது பல்பீர் சிங் தான்.

இவர் ஆட்டம் பற்றி நேரில் பார்த்தவர்கள் கூறக்கேட்பதுதான் பல்பீர் சிங்கின் அருமை பெருமையாகும். இவரிடம் உள்ள தனிச்சிறப்பு இவர் கிரிக்கெட் வீரர்களை மதித்தார், கிரிக்கெட் வீரர்களும் பல்பீர் சிங்கை மதித்தனர்.

1947-48-ல் டான்பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸி மண்ணில் நடைபெற்ற தொடரில் விஜய் ஹசாரே அடிலெய்ட் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். எப்போது உரையாடினாலும் பல்பீர் சிங், விஜய் ஹசாரேயின் இந்தச் சாதனையை குறிப்பிடாமல் இருக்க மாட்டார். ஆனால் லண்டனில் 1948-ல் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றதை பல்பீர் சிங் சீனியர் குறிப்பிடமாட்டார். அவரது தன்னடக்கம் அவரது மிகப்பெரிய சாதனைகளைக் கூட கூறிக்கொள்ள தடை செய்தது.

ஆனால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது பற்றி பல்பீர் எழுதியிருக்கிறார். குறிப்பாக லண்டன் ஒலிம்பிக்ஸில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக தன் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் சாதனையுடன் 6 கோல்களை அடித்தும் இவரை இருமுறை விளையாடும் 11 வீரர்கள் அணியில் தேர்வு செய்யாமல் விடுத்தனர். அந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது இந்திய அணி, அந்தப் போட்டி ஒரு த்ரில்லராக அமைந்தது. கிஷன் லால், கே.டி.சிங் பாபு மழைக்குப் பிறகு ஷூ போடாமல் வெறுங்காலுடன் ஆடினர். பல்பீர் சிங் 2 கோல்களை அடிக்க இந்திய அணி 4-0 என்று வெற்றி பெற்று தங்கம் வென்றது. பாம்பேயில் சிகப்பு கம்பள வரவேற்பு இந்திய அனிக்குக் கிடைத்தது.

“ஹாக்கி மட்டுமே இந்திய நாட்டுக்கு தங்க நம்பிக்கைக்கான கீற்றை அளித்தது. ஹாக்கி மட்டுமே நாம் கத்தி ஆரவாரம் செய்ய சிலவற்றை அளித்தது” என்று எழுதினார் பல்பீர் சிங். அதன் பிறகே பல்பீர் சிங் மற்றும் ஃபிளையிங் சீக் என்று அழைக்கப்படும் மில்கா சிங் இருவரும் பிரதமர் நேருவைச் சந்திக்க வேண்டுமெனில் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் பிரதமர் நேருவைச் சந்திக்கலாம். “ஆம், நேரு ஹாக்கியை பெரிதும் விரும்பினார்” என்று பல்பீர் சிங் ஒருமுறை கூறினார்.

பல்பீர் சிங் இந்தியர்களின் இதயங்களை வென்று கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் ஹாக்கி பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. பல்பீர் சிங் நேர்மையாக தனது ஹாக்கியை ஆடினார். அசைக்க முடியாத ‘ஸ்பிரிடி’ என்பது பல்பீர் ஹாக்கியின் தனித்துவம். அணியில் உடற்தகுதியில் முன்னிலை வகித்தவர் பல்பீர் சிங், புதியன புகுத்துவதிலும் பல்பீர் ஆட்டம் போற்றத்தக்கதாக இருந்தது. இவர் ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள், பந்தை அவர் ஸ்டிக்கிலிருந்து நழுவ விடாமல் எடுத்துச் செல்லும் லாவகத்தை வர்ணிக்கத் தவறியதில்லை.

சுதந்திர இந்தியா நம்மை ஆண்ட இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தையே தோற்கடித்ததில் பல்பீர் சிங்கின் பங்களிப்பை அவ்வளவு சுலபமாக தேசம் மறப்பதற்கில்லை.

லண்டன் (1948), ஹெல்சிங்கி (1952), மெல்போர்ன் (1956), 3 ஒலிம்பிக் தங்கங்களை இந்திய அணி வென்று ஹாக்கியில் இந்திய அணி கால்பந்தில் பிரேசில் போல் கொடி உயர்த்திய காலத்தில் பல்பீர் சிங் ஒரு மகா ஹாக்கி வீரர் என்ற உச்சத்தை எட்டினார். 1975ல் இந்திய அணி கோலாலம்பூரில் உலகக்கோப்பையை வென்ற போது பல்பீர் சிங் தான் இந்திய அணியின் பயிற்சியாளர். அதன் பிறகு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவில்லை.

இந்திய அணி ஹாக்கியில் தோற்றால் சாப்பிட மாட்டார்..

ஹாக்கியுடன் பல்பீர் சிங்கின் பிணைப்பு உணர்வுபூர்வமானது. ஹாக்கியில் இந்தியா தோற்றால் அவர் சாப்பிட மாட்டார் என்பதற்காகவே குடும்பத்தினர் அந்தச் செய்தியை பலமுறை அவரிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளனர்.

தன்னுடைய The Golden Hat Trick என்ற சுயசரிதை நூலில் ஹாக்கி தன்னுடன் எப்படிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். “ஹாக்கிக்கு என் மீதான காதல் காலாதீதமானது, எங்கள் காதல் லண்டனில் பூத்தது. ஹெலிசிங்கியில் எங்களுக்குத் திருமணம் நடந்தது. மெல்போர்னில் எங்களுக்கு ஹனிமூன். 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு 11 ஆண்டுகள் சென்று 1975ல் கோலாலம்பூருக்கு என்னை அழைத்துச் சென்றாள், நாம் மீண்டும் உலகின் டாப் அணியானோம். நான் அவளுக்காகக் காத்திருக்கிறேன், என் ஹாக்கி தேவதை” என்று மிகவும் ரொமாண்டிக்காக கவிதை மனோநிலையில் எழுதினார்.

ஆம்! 3 ஒலிம்பிக் தங்கம் வென்ற நாயகனான பல்பீர் சிங், 1975ல் இந்தியா ஹாக்கி உலகக்கோப்பையை வென்ற போது இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தார், அதன் பிறகு இந்திய ஹாக்கி அணி பல்பீர் சிங் காத்திருந்த அந்த ஹாக்கி தேவதையை இந்தியாவுக்கு அழைத்து வரவில்லை, பல்பீர் சிங் சீனியரின் கனவு இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.

-விஜய் லோகபாலி, தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்,

தமிழில் சுருக்கமாக..: இரா.முத்துக்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்