சகாப்தம் முடிந்தது: ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்; முறியடிக்கப்படாத சாதனைக்குச் சொந்தக்காரர்

By க.போத்திராஜ்

சீக்கியர்களில் தலைசிறந்த வீரர் எனும் விருது கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு அளிக்கப்பட்ட போது அந்த விருது வாங்க அந்த முதிய வீரர் மறுத்துவிட்டார். “ தான் ஒரு மதச்சார்பற்ற வீரர், மனிதன். “சீக்கியம்” என்ற மதத்துக்குள் என்னை அடக்காதீ்ர்கள், வீரர்கள் யாரையும் மதரீதியாக பிரிக்காதீர்கள் என்றுகூறி விருதைப் பெற அந்த வீரர் மறுத்துவிட்டார்.

அதன்பின் பல்வேறு சமாதானத்துக்குப்பின் அந்த விருதை அந்த ஜாம்பவான் வீரர் பெற்றுக்கொண்டார். அவர் வேறுயாருமல்ல பஞ்சாப் சிங்கம் ஹாக்கி வீரர் பல்பீர் சிங்தான்.

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ல மூன்று முறை தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர், ஒருமுறை துணைக்கேப்டனாகவும், கேப்டனாகவும் இருந்து வழிநடத்திய ஹாக்கி ஜாம்பவான் முன்னாள் வீரர் பல்பீர் சிங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்திய ஹாக்கியில் பல்பீ்ர் சிங் என்றொரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு வயது 96

மொஹாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பல்பீர் சிங்கிற்கு மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கட்டு இருந்து தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து பல்பீர் சிங்கிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை 6.30மணிக்கு இந்த உலகை விட்டு மறைந்தார். மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்ற இரு வாரத்தில் 3 முறை மாரடைப்பு ஏற்பட்டு அதில் தப்பித்த பல்பீர் சிங் இன்று காலமானார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்று இதுவரை மூன்று முறை தங்கம் வென்றுள்ளார் பல்பீர் சிங். கடந்த 1948-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக், 1952ம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக், 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் இந்த ஆண்டுகளில் மட்டுமே இந்தியா தங்கம் வென்றது. இந்த மூன்று முறை தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்த தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர் பல்பீர் சிங்

பஞ்சாப் மாநிலம், ஹரிபூர் கல்சாவல் கடந்த 1923-ம்ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பல்பீ்ர் சிங் பிறந்தார். இளைமையிலிருந்தே ஹாக்கி வீரராக உருவாக வேண்டும் என்ற வேட்கையில் பயிற்சி எடுத்த பல்பீர்சிங் பள்ளி, கல்லூரிகளில் ஹாக்கி அணியில் சிறந்த வீரராக விளங்கினார். அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது சிறந்த வீரராக பட்டைத்தீட்டப்பட்ட பல்பீர் சிங், மாநில அணியிலும் அதன்பின் பஞ்சாப் போலீஸ் அணியிலும் இடம் பெற்றார்.

பஞ்சாப் போலீஸ் அணிக்கு கடந்த 1941 முதல் 1961-ம் ஆண்டு வரை கேப்டனாக பல்பீர் சிங் இருந்தார். இதற்கிடையே இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற பல்பீர் சிங் மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்று கொடுத்தார். இதில் ஒரு கேப்டனாக அணியை வழிநடத்திய பல்பீர் , மற்றொருமுறை துணைக்கேப்டனாக இருந்தார்.

மார்டன் ஹாக்கியின் தலைசிறந்த வீரராக தயான் சந்த் குறிப்பிடப்படுகிறார் என்றால் ஹாக்கியில் எந்த காலத்திலும் சிறந்த வீரராக பல்பீர் சிங்கைத்தான் குறிப்பிட முடியும். ஹாக்கியில் சென்டர்-ஃபார்வேட் வீரராக களமிறங்கும் பல்பீர் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை படைத்துள்ள சாதனையை எந்த சர்வதேச வீரரும் முறியடிக்க வில்லை.

1952-ம்ஆண்டு ஒலிம்பிக்க போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கணக்கில் வென்றது இதில் 5 கோல்களை பல்பீர்சிங் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரேபோட்டியி்ல் 5 கோல்கள் அடித்த வீரர் எனும் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

கடந்த 1975-ம் ஆண்டு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பயி்ற்சியாளரகாவும் மேலாளராகவும் இருந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்தார், 1971-ம் ஆண்டில் பல்பீர் சிங் பயிற்சியில் உலகக்கோப்பை ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, ஒலிம்பிக் அருங்காட்சியகம் கண்காட்சியில் பல்பீர் சிங் பெருமைகளை வைத்து மரியாதை செய்யப்பட்டது. உலகளவி்ல் 16 சிறந்த ஒலிம்பிக் வீரர்களில் பல்பீர் சிங்கும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அரசு கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பல்பீர் சிங்கை கவுரவித்தது. 2015-ம் ஆண்டு மேஜர் தயான் சந்த் விருது வழங்கி மத்திய அரசு பல்பிர் சிங்கை கவுரவித்தது

பல்பீர் சிங்கிற்கு சுஷில் என்ற மனைவி உள்ளார். இவர் பாகிஸ்தானின் லாகூர் மாடல்டவுனைச் சேர்ந்தவர். இவர்களுக்கு சுஷ்பிர் எனும் மகளும், கால்வால்கபீர், கரண்பீர், குர்பீர் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். அனைவரும் கனடாவில் குடிபெயர்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்