நான் சச்சின் டெண்டுல்கரை முதலில் சந்திக்கும் போது எனக்கு வயது 8
அவர்தான் எனக்கு எல்லாம், அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.
சச்சின் வழிகாட்டுதலில் என் பயணம் மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது.
இவ்வாறு கூறுகிறார் இந்தியாவின் இளம் நட்சத்திரம் பிரித்வி ஷா.
இந்தியன் ஆயில் நிர்வாகிகளுடன் லைவ் சாட்டில் பேசிய பிரித்வி ஷா, “நான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்த போது எனக்கு வயது 8. அன்று முதல் இன்று வரை அவர்தான் எனக்கு எல்லாமே, அவர்தான் என் நம்பிக்கை ஆசான். களம், களத்திற்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை எல்லாமே அவரிடமிருந்து கற்றுக் கொண்டு வருகிறேன்.
இப்போது கூட நான் பயிற்சியில் ஈடுபடும்போது அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் பேட்டிங் செய்வதை பார்க்க வருவார். என்னுடன் பேசுவார், பேட்டிங் உத்தி குறைவாகவே இருக்கும், மனரீதியாக சில விஷயங்களைப் பேசுவார். எனவே சச்சின் டெண்டுல்கர் சார் வழிகாட்டுதலில் என் பயணம் சிறப்பாக அமைந்துள்ளது” என்றார்.
சச்சின் டெண்டுல்கரும் சமீபத்திய தனது பிடிஐ பேட்டியில், “ஆம் உண்மைதான், நான் ஷா-வுடன் நிறைய அளவளாவி வருகிறேன். அவர் திறமைசாலி, எனவே அவருக்கு உதவுவதில் மகிழ்ச்சி. நான் அவரிடம் கிரிக்கெட் பற்றியும், கிரிக்கெட்டுக்கு அப்பாலான வாழ்க்கை பற்றியும் பேசினேன்” என்றார்.
சமீபத்தில் நியூஸிலாந்தில் டெஸ்ட் போட்டியில் கடினமான ஆடுகளத்தில் தொடக்க வீரராக இறங்கி அதிரடி அரைசதம் அடித்த போது பின் காலில் சென்று ஆடிய புல் ஷாட், கட் ஷாட் நேர் ட்ரைவ் ஆகியவை சச்சினை நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.