15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா

ஆஷஸ் டெஸ்ட் தொடர் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் இந்திய நேரம் 3.30 மணிக்குத் தொடங்கியது. 5.10 மணிக்குள் 18.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 60 ரன்களுக்குச் சுருண்டது. உதிரிகள் வகையில் 14 ரன்கள் வந்ததே அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

1898-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த துவம்சத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார் பிராட்.

ஆஸ்திரேலியாவைச் சுருட்ட 100 நிமிடங்களே எடுத்து கொண்டார் பிராட். இன்னிங்ஸ் முழுதும் 5 ஸ்லிப்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். கிறிஸ் ராஜர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியவுடனேயே அவர் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட்டார். தற்போது 307 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து முன்னாள் வீரர் பிரெட் ட்ரூமென்னை சமன் செய்துள்ளார்.

ஆண்டர்சன் விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் இந்த மைதானத்தில் காயம் காரணமாக அவர் இடம்பெறாததையடுத்து ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகளை அள்ளினார். இந்த மைதானத்தில் சிறந்த பவுலிங் இதுவே என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இன்னும் கூறப்போனால், அடுத்த பேட்ஸ்மெனுக்கு கால்காப்பு உள்ளிட்டவைகளை கட்டிக் கொள்ள நேரமிருந்திருக்குமா என்பதே சந்தேகம், அந்த வேகத்தில் விக்கெட்டுகள் மடம்டவென சரிந்தன.

எப்போதும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் டிரெண்ட் பிரிட்ஜ் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார்.

முதல் ஓவரை பிராட் வீச 3-வது பந்து கிறிஸ் ராஜர்ஸ் கிரீஸில் தேங்கி நின்றார், ஃபுட்வொர்க் இல்லை, பிராட் பந்து ஆங்கிளாக உள்ளே வந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக அதுவே எட்ஜ் எடுத்துக்கொண்டு சென்றது. முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

அதே ஓவரில் 6-வது பந்தில் புதிதாக களமிறங்கிய ஸ்மித்துக்கு ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் சற்றே நல்ல அளவுக்கு கொஞ்சம் முன்னதாக பந்து பிட்ச் ஆக அவர் நின்ற இடத்தில் அப்படியே நேராக திரும்ப வேண்டியதாயிற்று, அதாவது கிரிக்கெட் மொழியில் ஸ்கொயர் ஆனார் என்று கூறப்படுவதுண்டு. பந்து ஸ்மித்தை மதிக்காமல் மட்டையின் விளிம்பைத் தட்டிச் சென்று ரூட் கையில் அடைக்கலமானது.

2-வது ஓவரில் டேவிட் வார்னர், மார்க் உட் வீசிய நல்ல வேகமான பந்தை தன் உடலிலிருந்து சற்றே தள்ளி ஆடி மட்டையை தொங்கவிட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. 3 விக்கெட்டில் இரண்டு டக் அவுட்.

ஷான் மார்ஷ் களமிறங்கினார் 4 பந்துகள் ஆடினார், மீண்டும் பிராடின் அருமையான ஆஃப் ஸ்டம்ப் லெந்த்துக்கு மட்டை விளிம்பைக் கொடுத்தார், வெளியேறினார்.

5-வது ஓவரில் பிராட், வோஜஸையும் ஒரு அருமையான ஸ்விங் பந்துக்கு வீழ்த்தினார், இம்முறை 5-வது ஸ்லிப்பில் ஸ்டோக்ஸ் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்தார், ஆஸ்திரேலியா 21/5.

கிளார்க் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் இருந்த போது பிராட் வீசிய வெளியே சென்ற பந்தை, விட்டு விட வேண்டிய பந்தை கால்களை நகர்த்தாமல் சேவாக் பாணி ஸ்லேஷ் செய்தார் எட்ஜ் ஆனது குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டுக்கும் தலையை எதிர்மறையாக ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் கிளார்க்.

விக்கெட் கீப்பர் நெவிலும் ஃபுட்வொர்க் இல்லாமல் மார்க் உட் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் பிராட் மீண்டும் ஸ்டார்க், ஜான்சன் ஆகியோரை காலி செய்தார். இரண்டுமே குட் லெந்த், எட்ஜ், வழக்கமான மட்டை தொங்கவிடல், அவுட்.

நேதன் லயன் 9 ரன்கள் எடுத்தார். ஆனானப்பட்டவர்களுக்கே சட்டென எட்ஜ் எடுக்கும் போது இவர் மட்டும் என்ன செய்வார்? ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன் அதிகபட்சமாக 13 ரன்கள் எடுத்தார், உதிரிகள் 14 ரன்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்