யார் இந்த சேவாக்கை விடவும் பயங்கர காட்டடி மன்னன்? - விபத்தில் பறிபோன கண்- சடுதியில் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை

சில வீரர்கள் பெயரும் திறமையும் வெளியே தெரியாமலேயே முடிந்து விடும், இந்தியாவில் எண்ணற்ற வீரர்களை அப்படிப் பட்டியலிட முடியும். எந்த ஒரு நாட்டு அணியிலும் பட்டியலிட முடியும். சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது, சிலருக்கு துரதிர்ஷ்டம் கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்து விடுகிறது.

இப்படி அதிர்ஷ்டம் இல்லாமல் போன, விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்த ஒரு முன்னாள் இங்கிலாந்து வீரரின் பேட்டிங்கை ஒரு முறை தான் நேரில் கண்டதைத்தான் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் கிரிக்கெட் பண்டிதருமான இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தி ஒன்றில் வர்ணிக்கிறார்.

அவர்தான் இங்கிலாந்து வீரர் கொலின் மில்பர்ன், இவரது செல்லப்பெயர் ‘ஓலி ’, அதாவது கொலின் ஓலி மில்பர்ன் என்றும் அழைக்கப்படுவார்.

இவர் இங்கிலாந்துக்காக 9 டெஸ்ட் போட்டிகளையே ஆடியதன் காரணம் அந்தக் காலத்திய இங்கிலாந்தின் மரபான அணித்தேர்வு கொள்கையே என்கிறார் இயன் சாப்பல். 9 டெஸ்ட் போட்டிகளில் 654 ரன்களை 46.71 என்ற சராசரியில் 2 சதங்கள், 2 அரைசதங்களுடன் எடுத்துள்ளார் கொலின் மில்பர்ன். இதில் 91 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் என்று 654 ரன்களில் பாதிக்கும் மேற்பட்ட ரன்களை பவுண்டரி, சிக்சர்களிலேயே விளாசியுள்ளார்.

255 முதல் தர கிரிக்கெட்டில் 13,262 ரன்களை 23 சதங்கள் 75 அரைசதங்களுடன் அவர் எடுத்துள்ளார். இவரது இன்னொரு தனிச்சிறப்பு என்னவெனில் அரிதாக கிடைக்கும் வாய்ப்பாக மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக ஷெஃபீல்ட் ஷீல்டு போட்டியில் ஆடியுள்ளார்.

அதில் குவீன்ஸ்லாந்து அணிக்காக 1968-ம் ஆண்டு கடினமான பிரிஸ்பன் பிட்சில் ஆடியதைத்தான் இயன் சாப்பல் அந்தப் பத்தியில் வர்ணிக்கிறார்.. இனி இயன் சாப்பல்:

1930-ல் டான் பிராட்மேன் ஹெடிங்லேயில் அடித்த 309 ரன்களை நான் கூறவில்லை, இதில் இரண்டு செஷன்களிலும் இரண்டு சதங்களை பிராட்மேன் அடித்தார்.

2009-2010-ல் சேவாக் இலங்கைக்கு எதிராக மும்பை பிரபர்ன் மைதானத்தில் 207 பந்துகளில் 250 ரன்களைக் கடந்து தன்னுடைய அதிவேக டெஸ்ட் 250 ரன் சாதனையை தானே உடைத்ததையும் நான் கூறவில்லை.

நான் கூறவருவது 1968-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கொலின் மில்பர்ன் ஆடிய ஒரு சரவெடி இன்னிங்ஸைப் பற்றித்தான்.

அதிவெயில் நாளொன்றில் மில்பர்ன், டெரிக் சாத்விக்குடன் தொடக்கத்தில் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இவர் மட்டும் 61 நாட் அவுட் என்று இருந்தார், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி 92/0 என்று இருந்தது.

ஆனால் தேநீர் இடைவேளையின் போது ஸ்கோரைக் கேட்டால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 327க்கு நோ-லாஸ். உணவு இடைவேளையின் போது கொலின் மில்பர்ன் 242 நாட் அவுட். என்ன வர்ணனையாளர் குடித்திருக்கிறாரா? ஒரு வீரர் எப்படி 2 மணி நேர ஆட்டத்தில் 181 ரன்களை எடுக்க முடியும்? ஒரு அணியே 181 எடுப்பது கடினம் எப்படி ஒரு தனி வீரரால் சாத்தியம் என்று ஆச்சரியமடைந்தேன்.

இதோடு மட்டுமல்ல 181 ரன்களை மில்பர்ன் 131 பந்துகளில் விளாசியதுதான். போட்டியை நேரில் பார்த்த ராட்னி மார்ஷிடம் கேட்ட போது, “ஒவ்வொரு ஷாட்டையும் பவுண்டரிக்குச்செல்லுமாறு விளாசினார் கொலின், இதில் சிலதை குவீன்ஸ்லாந்து தடுக்கவும் செய்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இந்த இன்னிங்ஸில் கொலின் 38 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசினார் இதில் ஒரு புல் ஷாட் என்ன பவர் என்றால் பீல்டரின் நெஞ்சை வேகமாகத் தாக்கியது பிறகு பவுண்டையைத் தாண்டி விழுந்து சிக்சர் ஆனது. அந்த பீல்டர் ஜெய்ஃப் கேரி பீல்டிங் கொலின் மில்பர்ன் நினைவாக நெஞ்சில் சில தையல்களை தாங்க வேண்டியதாயிற்று.

இப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மென் இங்கிலாந்தின் மரபான அணித்தேர்வு நடைமுறைகளால் 9 டெஸ்ட் போட்டிகளையே ஆடினார். கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இங்கிலாந்து அணியில் தன் இடத்தை நிரந்தரம் செய்வதற்கு முன்பாக அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது, கார் விபத்தில் ஒரு கண்ணை இழந்தார்.

1968 ஆஷஸ் தொடரில் நான் 2 டெஸ்ட் போட்டிகளில் மில்பர்னுடன் ஆடியிருக்கிறேன். லார்ட்சில் மறக்க முடியாத ஒரு 83 ரன்களை அவர் எடுத்தார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும். இதில் முதல் சிக்ஸர் நன்றாக நினைவிலிருக்கிறது. கிராண்ட்ஸ்டாண்ட் ஸ்கோர்போர்டை சிக்சர் தாக்கியது. அந்த எண் பலகைகள் பார்வையாளர்கள்மீது தடதடவென விழுந்தது.

1989 ஆஷஸ் தொடரின் போது கொலின் மில்பர்னை மான்செஸ்டர் மதுபான விடுதியில் ஒருமுறை சந்தித்தேன். 1990-ல் 48 வயதில் அவர் மாரடைப்பில் காலமானதைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். பிரித்தானியா மதுபான விடுதியின் கார்பார்க்கிங்கில் அவர் மரணமடைந்ததாக எனக்கு ஒரு நண்பர் தெரிவித்தார். உள்ளே செல்லும் போதா? வெளியே வரும்போதா என்று நான் கேட்டேன். வெளியே வரும்போதுதான் என்று நண்பர் கூறினார், ’நல்லது அவர் இறக்கும் போது மகிழ்ச்சியாக இருந்திருக்கக் கூடும்.

ஒரு செஷனில் 181 ரன்கள் இதுவரையிலும் யாரும் செய்ய முடியாதது, இனிமேலும் கடினமே. ஒரு செஷனின் மிகச்சிறந்த பேட்டிங் கொலின் மில்பர்னின் அந்த இன்னிங்ஸாகவே இருக்க முடியும் என்கிறார் இயன் சாப்பல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE