அபாரமான சச்சின் - கங்குலி ஓப்பனிங் இணை எப்படி உருவானது? ஒரு டைம்லைன் டிராவல்!

By டி. கார்த்திக்

சச்சின் டெண்டுல்கர் + சவுரவ் கங்குலி

பார்ட்னர்ஷிப்புகள்: 176

மொத்த ரன்: 8,227

சராசரி: 47.55

- ஒரு நாள் போட்டிகளில் வேறு எந்த இணையும் 6 ஆயிரம் ரன்களைக் கூட கடந்ததில்லை என்று இரு நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இட்ட ஒரு ட்வீட்தான் கடந்த இரு தினங்களாக சமூக ஊடங்களில் ட்ரெண்டிங். ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் - கங்குலி இணைக்கு ஈடு இணை ஏதும் இதுவரை இல்லை என்பதே நிதர்சனம். இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் - கங்குலி இணை, ஓபனிங் இடத்தை எப்படிப் பிடித்தது?

1980-களில் ஒரு நாள் போட்டிகளில் ஆபத்தான ஓப்பனர்கள் என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்டன் கிரீனீச் - டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ்தான். உலகின் எந்தப் பந்துவீச்சையும் துவம்சம் செய்து இந்த இணை அணியை வெற்றிக்குப் பக்கத்தில் கொண்டுவந்துவிடும்.

இவர்களுக்குப் பிறகு, அந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்கு அச்சுறுத்திய இணை என்றால், அது ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் - ஜெஃப் மார்ஷ் இணைதான். 1980-களில் இந்தியாவின் சிறந்த ஓப்பனர்களாக கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் இணை கவனம் பெறத் தொடங்கின. ஆனால், 1987 உலகக் கோப்பையோடு கவாஸ்கர் ஓய்வு பெற, தொடக்க ஆட்டக்காரர்களாக, ஸ்ரீகாந்த், சித்து, ராமன் லம்பா, ரவி சாஸ்திரி, மனோஜ் பிரபாகர் என மாறிமாறி பலரும் ஓப்பனர்களாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் கோதாவில் 1980-களின் இறுதியில் அறிமுகமான டபுள்யு ராமன், வினோத் காம்பிளி, 1990-களின் தொடக்கத்தில் அறிமுகமான அஜய் ஜடேஜா போன்றோரும்கூட சோதித்துப் பார்க்கப்பட்டார்கள். 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஸ்ரீகாந்த்-ரவி சாஸ்திரி-அஜய் ஜடேஜா குழுதான் ஓப்பனர்களாக இருந்தது. ஆனால், எத்தனை வீரர்கள் மாறினாலும் இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனர்கள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவும் கனவாகவுமே இருந்தது. சிறந்த ஓப்பனர் ஒருவர் உருவாகமாட்டாரா என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகரையும் துளைத்தெடுத்தது.

அப்போது 1994. இந்திய அணி நியூசிலாந்து சென்றது. இந்திய அணியின் ஓப்பனர்களாக சித்து-ஜடேஜா இணைதான் விளையாடியது. ஆக்லாந்தில் நடந்த ஒரு போட்டியில் சித்து விளையாட முடியாமல் போகவே, அந்த இடத்தில்தான் சச்சின் முதன் முதலாக ஓப்பனராக களமிறங்கினார். அதற்கு முன்பு 5 ஆண்டுகள் 4, 5, 6-ம் நிலைகளில்தான் சச்சின் விளையாடி வந்தார். இந்த ஓப்பனர் வாய்ப்புகூட சச்சினுக்கு எளிதில் கிடைக்கவில்லை. கேப்டன் அசாரூதினிடமும் பயிற்சியாளர் கெய்க்வாட்டிடமும் கெஞ்சி, கூத்தாடி வாய்ப்பைப் பெற்றார் சச்சின். முதல் பரிசோதனையில் தேறவில்லையென்றால், எக்காரணம் கொண்டும் ஓப்பனர் வாய்ப்பு கேட்டு வரமாட்டேன் என்று உறுதியளித்துதான் சச்சின் ஓப்பனர் வாய்ப்பைப் பெற்றார். முதல் போட்டியில் ஜடேஜாவுடன் இணைந்து களமிறங்கினார் சச்சின். அந்தப் போட்டியில் 143 என்ற இலக்கை விரட்டும்போது சச்சின் மட்டும் அதில் 82 ரன்களை விளாசினார். அதுவும் 49 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு. அந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் என்ற அந்தஸ்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் சச்சின்.

1994-ம் ஆண்டு தொடங்கி, ஒரு முனையில் சச்சின் மட்டுமே நிரந்தர ஓப்பனராக இருந்தார். அவருடன் சித்து, ஜடேஜா, மனோஜ் பிரபாகர் என வீரர்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். 1996 உலகக் கோப்பையில் சச்சின் - ஜடேஜா- சித்து ஆகியோர் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். அந்தத் தொடருக்குப் பிறகு சில சமயங்களில் நயன் மொங்கியா, டபுள்யு ராமன், சோமசுந்தர், மஞ்சரேக்கர் என வேறு சிலரும் சச்சினோடு ஓப்பனராக களமிறங்கிப் பார்த்தார்கள். ஆனால், சச்சினுக்கு இணையாக வேறு எந்த ஒரு வீரரும் ஓப்பனராக உருவாகவில்லை.

அந்த சமயத்தில்தான் 1992-ம் ஆண்டிலேயே அறிமுகமாகி அணியில் ஓரங்கட்டப்பட்டிருந்த சவுரவ் கங்குலி மீண்டும் 1996-ம் ஆண்டில் வாய்ப்பு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த சவுரவ் கங்குலி, ஒரு நாள் போட்டிகளிலும் வாய்ப்பு பெற்றார். கங்குலியும் எடுத்த எடுப்பிலேயே ஓப்பனர் வாய்ப்பைப் பெறவில்லை. 5, 6-ம் நிலைகளில்தான் விளையாடி வந்தார். 1996-ம் ஆண்டின் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக உயர்ந்தார். 1997-ம் ஆண்டில் தொடக்கத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரில் முக்கிய மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. வலுவான தொடக்க ஜோடி தேவை என்ற அடிப்படையில் சச்சின் டெண்டுல்கருடன் சவுரவ் கங்குலி ஓப்பனராக களமிறங்கினார். அந்தத் தொடரில்தான் சச்சின் - சவுரவ் ஓப்பனிங் சாம்ராஜ்ஜியம் தொடங்கியது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற தடுமாறிக்கொண்டிருந்தது. சில சந்தர்ப்பங்களில் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் 4-ம் நிலையில் விளையாட நேர்ந்தது. அப்போதெல்லாம் சவுரவ் கங்குலியுடன் ஜடேஜா, சித்து ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஆனால், 1998 ஜனவரியில் கேப்டன் பொறுப்பைத் துறந்த சச்சின் டெண்டுல்கர், மீண்டும் கங்குலியுடன் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு சச்சினும் கங்குலியும் களத்தில் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் மாயாஜாலங்கள்தான். எதிரணிகளைக் களங்கடிக்கும் வகையில் இருவரும் ஓப்பனராக அதிரடி பாணிகளைக் கையாண்டார்கள். சச்சினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்களும், கங்குலியின் கிளாசிக் ஸ்கொயர் கட்களும் அவர்களுடைய ஓப்பனிங் கேரியரை அடுத்தடுத்த ஆண்டுகளில் எங்கோ கொண்டு சென்றன. 1997-ம் ஆண்டு தொடங்கி 2002-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்திய அணியின் ஓப்பனர்களாக இருவரும் நிலைப் பெற்றார்கள். 2001-ம் ஆண்டில் சேவாக் இந்திய அணியில் அறிமுகமாகி, அவரும் தொடக்க வீரராக உருவான பிறகே, சச்சின் - சவுரவ் கங்குலி ஓப்பனிங்கிற்கு மாற்று வந்தது.

அதன் பிறகும்கூட 2007-ம் ஆண்டு வரை சச்சினும் - கங்குலியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஓப்பனராக களமிறங்கியிருக்கிறார்கள். ஆனாலும் 1997-2002ம் ஆண்டு காலகட்டத்தில் இவர்கள் ஓப்பனர்களாக நிகழ்த்திய காட்டிய வாணவேடிக்கைகள் ரசிகர்களின் மனங்களில் நங்கூரமிட்டு நினைவில் நிற்கின்றன; அது என்றும் மனதில் நிலைத்து நிற்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்