சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ரயில்வே அணி 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்த ரயில்வே 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரயில்வே ஸ்டிரைக்கர் ரிஜு மீண்டும் அணிக்கு திரும்பியது அந்த அணியின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவர் ரெட் கார்டு பெற்றதன் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத குறையை, இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி தீர்த்தார். அசத்தலாக ஆடிய ‘லெப்ட் விங்கர்’ ஸ்வராஜ் சுமார் 35 யார்ட் தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை போலீஸ் கோல் கீப்பர் மனோஜ் துல்லியமாக தகர்த்தார்.
இளமுருகன் சொதப்பல்
ரயில்வே அணிக்கு ரிஜுவின் வருகை மிகப்பெரிய பலமாக இருந்தபோதிலும் மற்றொரு ஸ்டிரைக்கர் இளமுருகன் தொடர்ந்து சொதப்பியது பின்னடை வாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு கோல் வாய்ப்புகளை வீணடித் தார் இளமுருகன். அதில் முதல் வாய்ப்பில் பின்கள வீரர் சந்தோஷ் குமார் கொடுத்த அசத்தலான ‘கிராஸை’ நேரடியாக தலையால் முட்டி கோலடிக்காமல், ரிஜுவுக்கு ‘பாஸ்’ செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் போலீஸ் அணி வீரர்கள் சூழ்ந்துவிட்டதால் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இதன்பிறகு கோல் கம்பத்தை நோக்கி வேகமாக பந்தை எடுத்துச் சென்ற ரிஜுவை விரட்டிய போலீஸ் வீரர் தனசேகரன், அவருடைய முகத்தில் கையால் தட்டினார். இதையடுத்து தனசேகரனுக்கு ‘யெல்லோ கார்டு’ கொடுத்தார் நடுவர்.
சார்லஸ் கோல்
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ரயில்வே ‘லெப்ட் விங்கர்’ ஸ்வராஜ் வலது புறத்தில் இருந்து பந்தை ‘கிராஸ்’ செய்ய, 6 ‘யார்ட் பாக்ஸு’க்கு வெளியில் இருந்த மற்றொரு மிட் பீல்டர் சார்லஸ் ஆனந்தராஜ் மிக எளிதாக கோலடித்தார்.
போலீஸ் அணி யின் கோல் கீப்பர் மனோஜ் மட்டுமின்றி, ஏராளமான வீரர்கள் கோல் கம்பத்தின் முன்னர் இருந்த போதும், சார்லஸ் அடித்த பந்தை தடுக்காமல் கோட்டைவிட்டனர்.
ரிஜு அபாரம்
அடுத்த 8-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது ரயில்வே. ‘ரைட் விங்கர்’ சிராஜூதீன் கொடுத்த ‘பாஸை’ சரியாகப் பயன் படுத்திய ரிஜு, இடது புறத்தில் இருந்து மிகத்துல்லியமாக கோலடித்தார். அவர் அடித்த அதிவேக ஷாட்டை போலீஸ் கோல் கீப்பரால் கொஞ்சம்கூட கணிக்க முடியவில்லை. போலீஸ் அணியில் ஸ்டிரைக்கர் பட்சிராஜன், மிட்பீல்டர் கோபிநாத் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடியபோதும், அவர்களுக்கு மற்ற வீரர்களின் உதவி கிடைக்காதது ஏமாற்றமாக அமைந்தது. எஞ்சிய வீரர்கள் பந்தை துல்லியமாக ‘பாஸ்’ செய்வதை விட்டுவிட்டு, முரட்டுத் தனமாக ஆடி வீணடித்தனர்.
கோலில்லாத 2-வது பாதி
முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரயில்வே அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் விழவில்லை. 2-வது பாதி ஆட்டத்தில் ரயில்வே வீரர் ஜான் அருள்ராஜா கொடுத்த ‘பாஸில்’ மிக எளிதாக கோலடிக்க வேண்டிய நிலையில், இளமுருகன் பந்தை வெளியில் அடித்தது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
அவரின் மோசமான ஆட்டம் ரயில்வேயின் பொறுமைசாலி பயிற்சியாளரான சௌந்தருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இளமுருகன் வெளி யேற்றப்பட்டு அனிருத் குமார் களமிறக்கப்பட்டார். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. அனிருத் வேகம் காட்டினாலும், சந்தோஷ் குமார், சிராஜுதீன் கொடுத்த இரு கோல் வாய்ப்புகளை வீணடித் தார்.
ஆட்டம் முழுவதும் அசத்தலாக ஆடிய ரிஜு ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சென்னை லீக்கில் அவர் பெற்ற 2-வது ஆட்டநாயகன் விருது இதுவாகும். தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்துள்ள போலீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
முதல் டிவிசன் லீக் போட்டியில் வருமான வரித்துறை அணி 2-0 என்ற கணக்கில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணியைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago