அனுபவமிக்க சர்வதேச வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் - தோனி கடும் சாடல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு அனுபவமிக்க சர்வதேச வீரர்களே காரணம் என்று கேப்டன் தோனி சாடியுள்ளார்.

இருபது ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய அணி சென்னையே என்ற பெருமையை நேற்று அந்த அணி தவறவிட்டது.

"அந்த இலக்கை நாங்கள் சுலபத்தில் எட்டியிருப்போம். காரணம் ரெய்னா அப்படித்தான் பேட் செய்தார், ஆனால் நடு ஓவர்களில் அனுபவமிக்க சர்வதேச வீரர்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் ஆடினர். இதனை நாம் பார்க்கவேண்டும். இது போன்ற முக்கியப் போட்டிகளில் அதுவும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் வேளையில் தவறுகள் செய்யக்கூடாது.

இது தவிர பவுலிங் மேம்பாடு அடைய வேண்டும். அதுவும் ஃபிளாட் பிட்ச்களில் சுழற்பந்து வீச்சு இன்னும் சற்று முன்ன்றேற வேண்டும்.

எங்கள் பந்து வீச்சு எப்படியும் அவர்களை 200 ரன்களுக்கு மேல் அடிக்கவிடும் என்ற எனது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. ஆனால் பஞ்சாப் பேட்ஸ்மென்கள் சிறப்பாகவே ஆடினர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எங்களது முக்கிய வீரர் (டிவைன் பிராவோ) காயமடைந்து நாங்கள் நாக் அவுட் சுற்று வரை முன்னேறியதே பெரிய சாதனைதான். இந்த ஆட்டத்தில் பிராவோ இருந்திருந்தால் கொஞ்சம் தெம்பாக இருந்திருக்கும்.

விரு (சேவாக்) விளையாடத் தொடங்கி விட்டால் அவரை அவ்வளவு சுலபத்தில் கட்டுப்படுத்தி விட முடியாது. எங்களிடமும் அவரை பின்னால் தள்ளும் வேகப்பந்து வீச்சும் இல்லை. நேற்று அவர் ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்தினார். எங்களை எந்த வித நம்பிக்கைக்கும் வரவிடாமல் செய்தார் சேவாக்"

இவ்வாறு கூறினார் தோனி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE