2001-ல் ஆஸ்திரேலியாவை இங்கு 2-1 என்று நெருக்கமான தொடரில் கொல்கத்தா திருப்பத்துக்குப் பிறகு வென்ற இந்திய அணி அதன் பிறகு அயல்நாட்டு தொடர்களில் கங்குலி கேப்டன்சியில் அணிகளை என்ன சேதி என்ற கேட்டுக் கொண்டிருந்த காலம்.
விரேந்திர சேவாக் அணிக்குள் வந்து தொடக்க வீரராக டெஸ்ட் போட்டிகளி களமிறங்கத் தொடங்கிய போது ராகுல் திராவிடின் பேட்டிங் வரைபடம் ஏறுமுகம் கண்டது என்பதை இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் அலசல்வாதிகளும் கூறாத ஒன்று. ஏனெனில் சேவாக் தொடக்க வேகப்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கியதில் நம்பர் 3இல் இறங்கும் திராவிட்டுக்கு பந்து கொஞ்சம் தேய்ந்த நிலையில் அவரது பேட்டிங் உத்திக்கு பெரிய அளவில் உதவி புரிந்தது.
2002 இங்கிலாந்து தொடரிலேயே இதற்கான உதாரணத்தைக் காட்ட முடியும் முதல் டெஸ்ட் லார்ட்ஸில் நாம் தோற்றாலும் சேவாக் தொடக்க வீரராக இறங்கி 96 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 84 ரன்கள் விளாசியதில் ராகுல் திராவிடும் இவரும் இணைந்து 126 ரன்களை 2வது விக்கெட்டுக்குச் சேர்க்க முடிந்தது. இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது சேவாக் 84, திராவிட் 46 லஷ்மண் 43 என்று 173 ரன்களை இவர்களே அடிக்க சச்சின் 16 ரன்கள், பாக்கி எல்லாம் ஒற்றை இலக்கம். ஏற்கெனவே இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் நாசர் ஹுசைனின் 155 உடன் 487 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி மைக்கேல் வான் (100) கிராலி (100) ஆகியோரின் சதங்களுடன் 301/6 என்று டிக்ளேர் செய்ய இந்திய அணி 2வது இன்னிங்சில் 568 ரன்கள் இலக்கை எதிர்த்து டெண்டுல்கர், கங்குலி சொற்பமாக வெளியேர வாசிம் ஜாஃபர் (63), சேவாக் (27), லஷ்மண் (74) என்று பிரமாதமாக ஆடினாலும் அஜித் அகார்க்கர் அன்று அடித்த சதம் இந்திய அணியின் ஸ்பிரிட்டையே தட்டி எழுப்பியது. 190 பந்துகளில் அவர் 109 ரன்களை எடுக்க இந்திய அணி 397 ரன்களை எடுத்து தோல்வி கண்டது.
» இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயருக்கேற்பவே நடத்தலாமே: ராஜஸ்தான் ராயல்ஸ் சி.இ.ஓ. புதிய யோசனை
2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது இதில் சேவாக் மிகப்பிரமாதமாக ஆடி சதம் எடுக்க கங்குலி 68, கடைசியில் இறங்கி ஹர்பஜன் சிங் 37 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாச இந்திய அணி 357 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. தொடர்ந்து இங்கிலாந்து மைக்கேல் வானின் 197 ரன்களுடன் 617 ரன்களைக் குவித்தது, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பி தோற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் திராவிட் 115, சச்சின் 92, கங்குலி 99 என்று வெளுத்துக் கட்ட 424 /8 என்று ஆட்டம் ட்ரா ஆனது, அஜித் அகார்க்கரின் சதம் சச்சின், திராவிட், கங்குலியின் ஆன்மாவைத் தட்டி எழுப்பியது.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளின் பின்னணியில் குறிப்பாக நாட்டிங்கம் பேட்டிங் எழுச்சிக்குப் பிறகு இந்திய அணி கங்குலியின் பாசிட்டிவ் கேப்டன்சியில் 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்தது வாசிம் ஜாபருக்குப் பதில் சஞ்சய் பாங்கர் எங்கிருந்தோ வந்து தொடக்க வீரராக சேவாகுடன் இறங்கினார்.
டாஸ் வென்ற கங்குலி தைரியமாக முதலில் பேட்டிங் என்றார். சேவாக் 8 ரன்களில் வெளியேற சஞ்சய் பாங்கர் மிகப்பிரமாதமான ஒரு இன்னிங்சில் 236 பந்துகளைச் சந்தித்து 68 ரன்களை எடுத்தார், இது ஹோகார்ட், கேடிக், டியூடர், பிளிண்டாஃப் ஆகிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் இங்கிலாந்து சற்றும் எதிர்பாராதது. பாங்கர் ஆட்டமிழக்கும் போது இந்தியா 185/2. திராவிடும் சச்சினும் இணைந்து 40 ஓவர்களில் 150 ரன்கள் கூட்டணி அமைத்தனர். திராவிட் 148 ரன்கள் சேர்த்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 236/2 எனும் போது திராவிட் 110 நாட் அவுட், சச்சின் 18 நாட் அவுட். அடுத்த நாள்தான் திராவிட் 148 ரன்களில் 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு கங்குலியும் சச்சினும் இணைந்து இங்கிலாந்தின் வலுவான பந்து வீச்சை நாலாப்பக்கமும் லீட்சில் சிதறடித்தனர். சுமார் 60 ஓவர்களில் 249 ரன்களைச் சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் நடுவர் போதிய வெளிச்சம் இல்லை ஆட்டத்தை முடிக்கலாமா என்றனர், ஆனால் கங்குலி இல்லை ஆடுகிறோம் என்று கூற சச்சினும் சரியென்று கூற ஒரு 8-10 ஓவர் அன்று இங்கிலாந்துக்கு டெஸ்ட் அதிரடி என்னவென்று சச்சினும், கங்குலியும் காட்டினர். ஆண்ட்ரூ கேடிக், பிளிண்டாப், ஹோகார்ட், டியூடர் பந்துகளை இருவரும் ஒதுங்கி ஒதுங்கி வெளிச்சமின்மையிலும் தூக்கித் தூக்கி அடிக்க நாசர் ஹுசைன் விழிபிதுங்கினார். சச்சின் 193 ரன்களில் 19 பவுண்டரி 3 சிக்சர்கள், கங்குலி 167 பந்துகளில் 128 ரன்களை 14 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் வெளுத்து வாங்க 2ம் நாள் ஆட்டத்தில் மட்டும் 83 ஓவர்களில் 348 ரன்களை விளாசித் தள்ளினர். இந்திய அணி 3ம் நாள் காலை 628/8 என்று டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, ஒரு புதிய நெருப்பு இந்திய அணியைப் பற்றி கொள்ள ஜாகீர் கான், அஜித் அகர்க்கர், கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வெரைட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 273 ஆல் அவுட் ஆனது.
கங்குலி தைரியமாக பாலோ ஆன் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கும்ப்ளே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 309 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்துக்கு அதன் மண்ணிலேயே இந்திய அணி முதல் முறையாக இன்னிங்ஸ் தோல்வி என்பதை ருசிக்கச் செய்தது. ஆட்ட நாயகன் ராகுல் திராவிட்.
இதற்கு அடுத்த டெஸ்ட் போட்டி ஓவலில் இங்கிலாந்து வெறியுடன் இறங்குகிறது, இந்திய அணியும் சளைக்கவில்லை தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் வெளுத்து வாங்கின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்து 515 ரன்களைக் குவித்தது. இந்தியா இறங்கியது சுவர் ராகுல் திராவிடை ஒன்றும் செய்ய முடியவில்லை 468 பந்துகளைச் சந்தித்து 217 ரன்களை குவித்து இரட்டைச் சத நாயகனானார். சச்சின், கங்குலி இருவரும் அரைசதங்களை அடிக்க இந்தியாவும் பதிலுக்கு 508 ரன்களைக் குவிக்க ஆட்டம் ட்ரா ஆக தொடரை கங்குலி கேப்டன்சியில் 1-1 என்று ட்ரா செய்து விட்டு வந்தோம். தொடர்நாயகனாக ராகுல் திராவிட் தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டில் மட்டை பிட்ச்களில் வாள் சுழற்றுபவர்கள் என்ற இமேஜை மாற்றி அமைத்தார் கங்குலி கேப்டனாக பாசிட்டிவ் திங்கிங் என்றால் என்ன என்பதை நிரூபித்துக் காட்டினார், இப்போதெல்லாம் பாசிட்டிவ் என்று உதட்டளவில் மட்டுமே பேசி வருகின்றனர். நடைமுறையில் ஒன்றுமில்லை என்பதைத்தான் இங்கிலாந்து தொடரிலும் சமீபத்திய நியூஸிலாந்து தொடரிலும் பார்த்து வருகிறோம், அயல்நாட்டு மண்ணிலும் வலுவான அணியை வென்று காட்ட முடியும் என்பதை கங்குலி நிரூபித்துக் காட்டினார்.
அந்தத் தொடரை மறக்க முடியாத தொடர் என்று கூறிய ராகுல் திராவிட் அந்தத் தொடர் முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய பேட்டிங் என்பது நான், சச்சின், கங்குலி பற்றியது மட்டுமல்ல, சேவாக் ஒரு கிரேட் சதம் ஒன்றை அடித்தார். லஷ்மண் சவாலாக ஆடினார். லார்ட்ஸில் அகார்க்கர் அடித்த சதம் அணியையே தட்டி எழுப்பியது.
சஞ்சய் பாங்கர் மிகப்பிரமாதமாக ஹெடிங்லேயில் தொடக்கத்தில் இறங்கி அரைசதம் கண்டார். நாங்கல்தான் மூத்த உறுப்பினர்கள் அதனால் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். ஆனால் நாங்கள் மூன்று பேரும் பார்மில் இருந்து நன்றாக ஆடினால் எங்களை வீழ்த்த முடியாது என்ற சவால் அளிக்க முடியும் என்பதை நம்பினோம்.
கங்குலி டாஸ் வென்று பேட்டிங் என்றார். 628 ரன்கள் குவித்து இங்கிலாந்தை இருமுறை ஆல் அவுட் செய்தோம். அது ஒரு கனவு மேட்ச். முதலில் பேட் செய்தது மட்டுமல்ல இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்க முடிவெடுத்தது ஒரு பெரிய விஷயம். மிகப்பெரிய விஷயம். காளையை அதன் இருகொம்புகளை பிடித்து உலுக்க முடிவெடுத்தோம். இந்த முடிவு பின்னடைவாகக் கூட போயிருக்கலாம் ஆனால் தொடரை வெல்ல வேண்டுமெனில் இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். பாசிட்டிவ் சிந்தனை என்பதன் ஆகர்ஷண சக்தியைக் கண்கூடாகக் கண்டோம். இது போன்ற ஒரு டெஸ்ட் போட்டிக்கு மேல் நாம் எதுவும் ஆடிவிட முடியாது, இதுதான் சிறந்த டெஸ்ட் மேட்ச், அருமையான தொடர் அது.
இவ்வாறு அப்போது கூறினார் திராவிட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago