மறக்க முடியுமா  இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி

By க.போத்திராஜ்


1990-களுக்குப்பின் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப்பின் மீ்ண்டும் அங்கு காலடி வைத்தது. அந்த பயணம் , எப்படி இருக்கப் போகிறதோ, முடிவு எப்படிஇருக்குமோ என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த தொடக்க ஆட்டக்காரரின் ஆட்டம் பேரிடியாக எதிரணிக்கு அமைந்தது.

சச்சினைப் போன்ற ப்ளே, தொடக்க வீரராக களமிறங்கினால் எதிரணியின் பந்துவீச்சாளருக்கு கிலி ஏற்படும், எந்த பந்தையும் அடித்தாடும் அசாத்திய துணிச்சல், அதிலும் காட்டடி ,இரக்கமில்லாத அடி என்று சொல்வோமே அந்த ஆட்டத்துக்கு சொந்தக்காரர். இப்போது நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று தெரிந்திருக்கும்.

ஆம், வீரு… வீரேந்திர சேவாக் தான்… வீரேந்திர சேவாக் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டுமானால் டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிகளுக்கும இலக்கணம் வைத்து விளையாடிய காலத்தில் அந்த மரபுகளை உடைத்தவர் சேவாக்.

"என்னய்யா.. டெஸ்ட் போட்டியில் இப்படி அடிக்கிறார்.. நிதானமாக கட்டயபோட்டு ஆடமாட்டாரா சேவாக்" என்ற பேச்சுகளுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கான மரபுகளை சுக்குநூறாக உடைத்தவர்.

அதிலும் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களுக்குரிய இலக்கணத்தை மாற்றி எழுதியது சேவாக்கின் பேட்டிங். களத்தில் சேவாக் நங்கூரமிட்டுவிட்டால், மதம் பிடித்த யானை போல் செயல்படுவார்.தனகுக்கு எதிராகப் பந்துவீசுபவர் வேகப்பந்துவீச்சாளரா அல்லது சுழற்பந்து வீச்சாளரா என்பதையெல்லாம் சேவாக் பார்க்கமாட்டார். பந்துகள் பவுண்டரிக்கும், சிஸ்கருக்கும் பறக்கும் வகையில்தான் சேவாக்கின் பேட் சுழன்று அடிக்கும்.

தொடக்க ஓவரை பந்துவீச வரும் பந்துவீச்சாளர் பல்வேறு கற்பனைகளுடன், விக்கெட்டை வீழ்த்தலாம், பல்வேறு வித்தைகள் காட்டலாம் என்று பந்துவீசுவார். ஆனால், பல பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைத்து சேவாக் தூள் தூளாக்கி இருக்கிறார்.
அப்படி ஒரு ஆட்டம்தான் கடந்த 2004, மார்ச் 28-ம் தேதி முல்தான் நகரில் நடந்தது. பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி முல்தானில் முதல் டெஸ்டில் விளையாடியது.

போட்டி தொடங்கிய 2-வது நாளே சேவாக் முச்சதம் அடித்து "முல்தானின் சுல்தானாக" வலம் வந்தார். அதுநாள்வரை டெஸ்ட் போட்டிகளில் எந்த இந்திய வீரரும் முச்சதம் அடித்திராத வரலாறு இருந்தது. அந்த வரலாற்றை திருத்தி எழுதியவர் வீரேந்திர சேவாக்.

முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் ருத்ரதாண்டவம் ஆடியதை அப்போது இருந்த ரசிகர்கள்யாரும் எளிதாக மறக்க மாட்டார்கள். "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார் சேவாக்.

அக்தர் மட்டுமல்ல முகமது ஷமி, சபீர் அகமது, சக்லைன் முஷ்டாக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத் என யார் பந்துவீசினாலும் சேவாக் கிழித்து எறிந்தார். மதம் பிடித்த யானை போன்று சேவாக் களத்தில் நிற்பதையும், மகாபாரத்தில் பீமன் கடத்தை தோளில் வைத்துக்கொண்டு நிற்பது போல், சேவாக் தனது தோளில் பேட்டை வைத்துக்கொண்டு பவுண்டரி லைனைப் பார்த்தால் பந்து வீ்ச்சாளருக்கு அடிவயி்ற்றில் ஏதோ ஒன்று உருளும். அந்த மாதிரி ஈவு இரக்கமின்றி சேவாக் ஷாட்கள் இருந்தன.

கங்குலி்க்கு காயம் ஏற்பட்டதால் இந்தபோட்டியில் டிராவிட் கேப்டன் பொறுப்பே ஏற்றிருந்தார். டாஸ்வென்ற டிராவிட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆகாஷ் சோப்ரா, சேவாக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆகாஷ் சோப்ரா ஆமை வேகத்தில் ஆட, சேவாக்கின் பேட் களத்தில் சீறியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீ்ச்சை சேவாக் நொறுக்கி அள்ளினார். முதல் விக்கெட்டுக்கு 40 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்து ஜோடி பிரந்தது. சோப்ரா 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் திராவிட் 6 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு சச்சின், வந்த சேவக்குடன் சேர்ந்தார். இரு மாஸ்டர்களும் சேர்ந்து பாகிஸ்தான் வீரர்களை திணறடித்தனர். இருவரின் அதிரடி பேட்டிங், ஷாட்களைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எப்படி பந்துவீசுவதென்றே தெரியவில்லை.
அப்போது உலகளவில் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக கருதப்பட்ட சக்லைன் முஷ்டாக் ,தனது ஓவரை, சச்சினும், சேவாக்கும் மாறி,மாறி வெளுத்து எறிவதைப் பார்த்து தலையில் கைவைத்து அமர்ந்தது நினைவிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் 203 ரன்கள் கொடுத்தார் முஷ்டாக்.

முதல் நாள் ஆட்டநேர முடிவிலேயே சேவாக் இரட்டை சதம் அடித்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்திருந்தது. சேவாக் 228, சச்சின் 60 ரன்களுடன் இருந்தனர்.

மார்ச் 29-ம் தேதி, 2-வது நாள் ஆட்டத்திலும் சேவாக்கின் அதிரடி ஆட்டம் மாறவில்லை. பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசி பவுண்டரிகளாக நொறுக்கினார். சேவாக் ஒருபோதும் சாதனையைப் பற்றி கவலைப்பட்டதில்லை என்பதற்கான சாட்சி இந்த போட்டியில் நடந்தது.

என்னவென்று கேட்கிறீர்களா........ 300 ரன்களை எட்டும் சூழலில் சக்லைன் முஷ்டாக் பந்தவீச்சில் சிக்ஸர் அடித்து முச்சதத்தை நிறைவு செய்தார்.இதுவே வேறு பேட்ஸ்மேனாக இருந்தால், 300 ரன்களை எட்டும் மிகுந்த கவனத்துடன் பந்துகளை வீணாக்கி ரன்களைச் சேர்ப்பார்கள். ஆனால் சேவாக் அதுபோல் செய்யவில்லை.

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலே டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக முச்சதம் அடித்த வீரர் எனும பெருமையை சேவாக் பதிவு செய்தார். களத்தில் புழுதி பறக்க ஆடிய சேவாக் 375பந்துகளில் 309 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 39 பவுண்டரிகள் அடங்கும். சேவாக்-சச்சின இருவரும் சேர்ந்து 336 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்

அடுத்து வந்த லட்சுமண் 29, யுவராஜ் சிங் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர் சச்சின் 194 ரன்களுடன் இரட்டை சதம் அடிக்க 6 ரன்களுக்காக காத்திருந்தார். ஆனால் டிக்ளேர் செய்வதாக கேப்டன் திராவிட் அறிவித்தார். சச்சின் 21 பவுண்டரிகள் உள்பட 194 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.சச்சினை இரட்டை சதம் அடிக்கவிடாமல் திராவிட் தடுத்துவிட்டார் என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பின.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 161.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 675 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 126.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக யாசிர் அகமது 91, கேப்டன் இன்சமம் உல் ஹக் 77 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் முதல் இன்னிங்ஸில் இர்பான் பதான் 4 விக்கெட்டுகளையும், சச்சின், கும்ப்ளே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி அனில் கும்ப்ளேயில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. அணியில் அதிகபட்சமாக முகமது யூசுப் சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல் ஆட்டமிழந்தனர்.

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 77 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 52 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தியத்தரப்பி்ல கும்ப்ளே 6 விக்கெட்டுகளையும், பதான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக வீரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டார். 15 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் கால்பதித்து முதல் டெஸ்ட் போட்டியே இன்னிங்ஸில்வித்தியாசத்தில் சேவாக், சச்சின் ஆட்டத்தால் வென்றதை யாரும் மறக்க முடியாது.

அடுத்த 4 ஆண்டுகளுக்குப்பின் 2008-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சேவாக் 319 ரன்கள் சேர்த்ததும் 2008, மார்ச்28-ம்தேதி என்பது பலருக்கும் நினைவிருக்கம். சேவாக்கின் முச்சதம் இரண்டும் வெவ்வேறு ஆண்டுகளில் அடிக்கப்பட்டதே தவிர ஒரே மாதத்தில், ஒரு நாள் இடைவெளியில் அடிக்கப்பட்டதாகும்.

வீரு...வின் இரு முச்சதங்களையும் மறக்க முடியுமா……….

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்