2011 உலகக்கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில் வென்று, 2வது முறையாக உலகக்கோப்பையை வென்ற 3வது அணியாகத் திகழ்ந்தது. இந்த உலகக்கோப்பையில் ஆடிய இந்திய அணியை இந்திய ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாது.
இந்த 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகனான யுவராஜ் சிங் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக பிரமாதமான ஒரு இன்னிங்ஸை உடல் நலம் சரியில்லாத நிலையிலும் வெளுத்து வாங்கி ஆடி சதம் கண்டதை ரசிகர்கள் மறக்க முடியுமா? சதம் கண்டதோடு பவுலிங்கில் முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி (2/18) இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்ததைத்தான் மறக்க முடியுமா?
டாஸ் வென்ற தோனிக்கு இரட்டை மன நிலை எப்போதும் இருந்ததில்லை, உடனே முதலில் பேட்டிங் என்றார், கம்பீரும், டெண்டுல்கரும் இறங்கினர். சேவாக் காயம் காரணமாக இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே. சென்னையில் எப்போதும் வெளுத்துக் கட்டும் சச்சின் டெண்டுல்கர் ரவி ராம்பால் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், ஒட்டுமொத்த ஸ்டேடியமும் மவுனத்திற்குச் சென்றது, நடுவர் அவுட் கொடுக்கவில்லை, ஆனால் சச்சின் டெண்டுல்கர் தான் அவுட் என்று தெரிந்தவுடன் நேர்மையாக அவரே வெளியேறினார்.
3ம் நிலையில் கோலி இறங்கினார், இருவரும் சேர்ந்து ஸ்கோரை 51 ரன்களுக்கு உயர்த்திய போது 22 ரன்களில் இருந்த கம்பீர், ரவி ராம்பால் பந்துக்கு தடதடவென மேலேறி வந்தார் பந்து வெளியே செல்ல அடித்தார் தேர்ட் மேனில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா 51/2 என்று இருந்தது.
விராட் கோலி அப்போதே கடினமான பிட்சில் கடினமான சூழ்நிலையில் பிரமாதக் கட்டுப்பாட்டுடன் ஆடினார், 76 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களை எடுத்ததோடு பார்மில் இருக்கும் யுவராஜ் சிங்குக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தவண்ணம் இருந்தார். இருவரும் 122 ரன்களைச் சேர்த்தனர், யுவராஜ் சிங்குக்கு 2 கேட்ச்களை விட்டு மேஇ.தீவுகள் சகாயம் செய்தது. கடும் வெயிலில் உடல் நீர் வற்ற இருமுறை சோர்ந்துதான் போனார் யுவராஜ், ஆனாலும் புல்ஷாட்கள் மிட்விக்கெட்டில் பறந்தன, தரையோடு தரையாக ஆடிய கவர் ட்ரைவ்கள், லெக் ஸ்பின்னர் தேவேந்திர பிஷூவை ஸ்வீப் ஷாட்கள் என்று அசத்தியதோடு, டேரன் சமி பந்தை லாங் ஆனில் அடித்த ஸ்டைலிஷ் சிக்சரையும் மறக்க முடியாது. 60 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங் 112 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் கண்டார், பிறகு மேலும் ஒரு சிக்சர் அடித்து 113 ரன்களில் போலார்ட் பந்தில் காட் அண்ட் பவுல்டு ஆனார். முன்னதாக கோலி 59 ரன்களில் ரவி ராம்பால் பந்தில் பவுல்டு ஆனார்
தோனி இறங்கி 30 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெறுப்பில் பிஷூ பந்தை மேலேறி வந்து அடிக்கும் முயற்சியில் ஸ்டம்ப்டு ஆக இந்திய அணி 218/4 என்பதிலிருந்து 50 ஓவர்கள் முடிக்காமலேயே 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அதிரடி வீரர் யூசுப் பத்தான் 11 ரன்களையும் அஸ்வின் 10 ரன்களையும் எடுத்தனர். மே.இ.தீவுகளில் ரவி ராம்பால் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று பிரமாதமாக வீசினார். ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஜாகீர் கான், அஸ்வின், யுவராஜ் அசத்தல்:
இலக்கை விரட்ட மே.இ.தீவுகள் களமிறங்கியது. தோனி, ஜாகீர் கான், அஸ்வின் என்று பவுலிங்கைத் தொடங்க அஸ்வின் கிர்க் எட்வர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். டேரன் பிராவோ (22) இறங்க மற்றொரு தொடக்க வீரர் டெவன் ஸ்மித் (81) ஒரு முனையில் வெளுத்துக் கட்டினார். டேரன் பிராவோ ரெய்னா வீசிய ஊர்ப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து ஹர்பஜன்சிங்கிடம் கேட்ச் ஆக்க, முதல் திருப்புமுனை ஏற்பட்டது.
ஆனால் சர்வான் (39), டெவன் ஸ்மித் கூட்டணி இணைந்து 30 ஓவர்களில் ஸ்கோரை 154 ரன்களுக்குக் கொண்டு செல்ல மே.இ.தீவுகள் அணி இந்திய இலக்கை எளிதாக எட்டி விடும் என்ற நிலையில்தான் ஜாகீர் கான் புகுந்தார். 81 ரன்களில் அச்சுறுத்திய டெவன் ஸ்மித்தை அருமையான இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு செய்தார்.
அதிரடி வீரர் கெய்ரன் போலார்டை ஹர்பஜன் ஒரு ரன்னில் வீழ்த்தினார். டெவன் தாமஸ் 2 ரன்களில் யுவராஜ் பந்தில் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார். டேரன் சாமி 2 ரன்களில் முனாஃப்,ரெய்னா கூட்டணியில் ரன் அவுட் ஆனார். முனாப் படேல் தனது மோசமான முறையால் ரன் அவுட்டை ஏறக்குறைய கோட்டைவிட்டிருப்பார், ஆனாலும் எப்படியோ சமாளித்து ஸ்டம்பைப் பெயர்க்க சாமியின் டைவ் பயனளிக்கவில்லை.
அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் கிரீசிற்கு வந்தார், ஆனால் அவருக்கு யுவராஜ் சிங் ஒரு பந்தை திருப்பி எழுப்ப இவரது கட் ஷாட் பாயிண்டில் நேராக யூசுப் பத்தானிடம் கேட்ச் ஆனது. கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்த மே.இ.தீவுகள் இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்க 188 ரன்களுக்கு சுருண்டு சரணடைந்தது. அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் ஜாகீர் கான் 3 விக்கெட்டுகளையும் யுவராஜ் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்தியா 80 ரன்களில் வென்றது. பெரிய ஸ்கோர் இல்லாமலேயே தோனியின் அருமையான கேப்டன்சியில் இந்த வெற்றியைச் சாதித்தது இந்திய அணி, ஆனால் யுவராஜ் சிங் மீண்டும் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்தார். இந்த உலகக்கோப்பையில் 362 ரன்களுடன் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறந்த ஆல்ரவுண்டராக தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago