மறக்க முடியுமா? ஸ்டீவ் வாஹின் திமிரை அடக்கிய இந்திய அணி: ஹர்பஜன் ஹாட்ரிக்குடன் கலக்கல்- ஆஸி. கொட்டத்தை முடித்து வைத்த லஷ்மண், திராவிடின் மிகப்பெரிய இன்னிங்ஸ்

By இரா.முத்துக்குமார்

மார்ச் 15ம் தேதி, இன்றைய தினம் அன்றைய நாளில், அதாவது 2001ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டை புரட்டிப் போட்ட வெற்றி அளித்த மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களால் மறக்க முடியுமா?

ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் வெற்றிகளை ஸ்டீவ் வாஹ் தலைமையில் குவித்து உலக சாதனை நிகழ்த்தவிருந்த சமயத்தில் மும்பையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்று மார்ச் 11ம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸில் பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தின் முன்பு சாதனை படைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினர்.

ஸ்டீவ் வாஹின் அபார சதம், 9வது விக்கெட் சதக்கூட்டணி, ஹர்பஜன் சிங் ஹாட்ரிக்:

டாஸ் வென்ற ஸ்டீவ் வாஹ் முதலில் பேட் செய்ததோடு கேப்டன் இன்னிங்ஸில் 110 ரன்களை எடுக்க, ஹெய்டன் 97 ரன்கள் எடுக்க 269/8 என்ற நிலையில் ஜேசன் கில்லஸ்பியுடன் (46) 133 ரன்களை ஸ்டீவ் வாஹ் சேர்த்து சதம் கண்டதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்தது. அப்போது கலக்கி வந்த ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளை 123 ரன்களுக்குக் கைப்பற்றினார். இதில் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹர்பஜன் அபார ஹாட்ரிக் சாதனை புரிந்து வரலாறு படைத்தார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களில் ஆட்டமிழக்க லஷ்மண் மட்டுமே அரைசதம் கண்டு 59 ரன்களை எடுத்து இந்திய அணி 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அதிர்ச்சிகரமாக இழந்தது. சரி ஆஸ்திரேலியா தொடர் வெற்றிக்கான உலக சாதனையை நிகழ்த்தி விடும் என்று இந்திய ரசிகர்கள் கடும் சோகத்திலும் வேதனையிலும் ஆழ்ந்திருந்த நேரம்.

ஸ்டீவ் வாஹின் ஒரு முடிவு அவரது வாழ்க்கையையும் சவுரவ் கங்குலி தலைமை இந்திய அணியின் வாழக்கையையும் நேர் எதிர் திசையில் மாற்றிப் போட்டது. ஆம்! ஸ்டீவ் வாஹ் இந்திய அணி கேப்டன் கங்குலியிடம் சென்று ‘நீங்கள் ஃபாலோ ஆன் ஆட வேண்டும் மேட்” என்றார். எந்த நேரத்தில் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. ஏனெனில் 274 ரன்கள் முன்னிலையல்லவா? இந்திய அணியை ஒரு 350 ரன்களில் சுருட்டினாலும் 76 ரன்கள் இலக்கு ஒன்றும் பெரிதல்லவே? ஸ்டீவ் வாஹ் கணக்கு அப்படி வேலை செய்தது.

சடகோபன் ரமேஷ், எஸ்.எஸ். தாஸ் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் இருவரும் இருவரும் வெளியேறும் போது ஸ்கோர் 97/2. சச்சின் டெண்டுல்கர் மீண்டும் 10 ரன்களில் கில்லஸ்பி பந்தில் கில்கிறிஸ்ட்டிடம் கேட்ச் ஆகிச் சென்ற போது இந்திய அணி 115/3. 6ம் நிலையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த லஷ்மண் கங்குலியின் முடிவினால் 3ம் நிலையில் இறக்கப்பட்டு ஒருமுனையில் ஆடி வந்தார்.

அப்போதுதான் கேப்டன் கங்குலி, லஷ்மனுடன் இணைய லஷ்மண் ஒரு முனையில் பவுண்டரிகளாக வெளுத்துக் கட்ட கங்குலியும் அபாரமாக ஆடி 8 பவுண்டரிகளுடன் 48 ரன்களை எடுத்த நிலையில் மெக்ராவிடம் கில்கிறிஸ்டிடம் கேட்ச் ஆகி வெளியேற இந்திய அனி 232/4. அடுத்து திராவிட், அடுத்து நியான் மோங்கியா, விரைவில் இவர்களை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வெளிச்சம் தெரிந்தது.

ஆனால் அப்போதுதான் உலகமே அதிசயிக்கும் அந்த உலகப்புகழ்பெற்ற லஷ்மண் - திராவிட் கூட்டணி கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்தது. இருவரும் மெக்ரா, வார்ன், கில்லஸ்பி, காஸ்பரோவிச் அடங்கிய பந்து வீச்சை நாலாப்பக்கமும் சிதறடிக்க ஈரன் கார்டன்ஸ் எழுச்சி பெற்றது. சுமார் 104 ஒவர்களில் இருவரும் 376 ரன்கள் கூட்டணி அமைத்தனர் ராகுல் திராவிடும், லஷ்மணும். சுமார் 631 நிமிடங்கள் கிரீஸில் நின்ற லஷ்மண் 452 பந்துகளில் 44 பவுண்டரிகளுடன் 281 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்தார், ராகுல் திராவிட் மிகப்பிரமாதமான ஒரு உலகத்தர இன்னிங்சில் கடும் அழுத்தத்தில் 20 பவுண்டரிகளுடன் 180 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 657/7 டிக்ளேர். ஒரு நாள் முழுக்க விக்கெட்டே கொடுக்காமல் ஆஸி.யைக் கதறடித்தனர் லஷ்மணும், திராவிடும். 5ம் நாளில்தான் 2வது இன்னிங்ஸை முடித்தது. ஜாகீர் கான் இறங்கி தன் பங்குக்கு அதிரடி 23 ரன்களை எடுத்தார்.

ஸ்டீவ் வாஹ் என்ன செய்து பார்த்தும் உடைக்க முடியாத கூட்டணியாக லஷ்மண்- திராவிட் கூட்டணி அமைய அவர் மார்க் வாஹ், பாண்டிங், ஹெய்டன், ஸ்லேட்டர், லாங்கர் என்று அனைவரையும் பயன்படுத்தி மொத்தம் 9 பவுலர்களைப் பயன்படுத்தியது ஆஸ்திரேலிய எதிர்மறைச் சாதனையாக அமைந்தது. மெயின் பவுலர்களான மெக்ரா, வார்ன், கில்லஸ்பி, காஸ்பரோவிச் அனைவரும் பவுலிங்கில் சதமெடுத்தனர்.

மீண்டும் ஹர்பஜன் ஆதிக்கம், டெண்டுல்கரின் 3 முக்கிய விக்கெட்டுகள்:

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு 384 ரன்கள், இது சாத்தியமேயல்ல, ட்ராதான் செய்ய முடியும். மார்ச் 15ம் தேதிதான் அந்த வரலாற்று நாளில் இந்திய அணி அதிசய வெற்றியை நிகழ்த்தியது. ஹெய்டன் (63), ஸ்லேட்டர் (47) நல்ல தொடக்கம் கொடுத்து முதல் விக்கெட்டுக்காக 74 ரன்கள் சேர்த்தனர். ஸ்லேட்டர், லாங்கரை ஹர்பஜன் காலி செய்ய மார்க் வாஹை வெங்கடபதி ராஜு டக் அவுட் ஆக்கினார். அபாய வீரர் ஸ்டீவ் வாஹை 24 ரன்களில் ஹர்பஜன் மீண்டும் வீழ்த்தினார். பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்ன் ஆகியோர் டக் அவுட் ஆகினர். சச்சின் டெண்டுல்கர் மிக முக்கிய விக்கெட்டுகளான ஹெய்டன், கில்கிறிஸ்ட், வார்ன் ஆகியோரை வீழ்த்த ஹர்ஜபன் சிங் 6 விக்கெட்டுகளையும் சச்சின் 3 விக்கெட்டுகளையும் ராஜு ஒருவிக்கெட்டையும் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி பாலோ ஆனுக்குப் பிறகு ஆஸி.யை வீழ்த்தி ஸ்டீவ் வாஹ் கொட்டத்தை அடக்கியது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாலோ ஆன் வாங்கிய பிறகு எதிரணியை வீழ்த்திய 3வது அணியாக இந்திய அணி திகழ்ந்து வரலாறு படைத்தது.

இந்த டெஸ்ட் போட்டி கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது, காரணம் அதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்று இந்திய அணி பெரிய சூதாட்ட சர்ச்சையில் சிக்கி திக்குமுக்காடிக் கொண்டிருந்த காலம். இந்நிலையில் கொல்கத்தா புகழ்பெற்ற வெற்றியுடன் அடுத்ததாக சென்னையிலும் ஒரு படபடப்பு தரும் நெருக்கமான போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் பரம வைரியானது இந்தியா. கங்குலி மீது ஆஸ்திரேலியர்களின் எரிச்சல் தொடங்கியது, இந்த எரிச்சல் 2004 தொடரில் அங்கு சென்று தொடரை 1-1 என்று சமன் செய்ததும் அதிகரித்து வயிற்றெரிச்சலாக மாறியது.

எனவே விவிஎஸ் லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் போக்கை மாற்றியதோடு விஸ்டனின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்