கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல்: ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்?- விசா பிரச்சினையால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

By செய்திப்பிரிவு

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்13-வது சீசன் வரும் 29-ம் தேதிமும்பையில் தொடங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவிட் 19 வைரஸ் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவி வருவதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

இதற்கிடையே விளையாட்டு போட்டிகளை காண மைதானங்களுக்கு பெருந்திரளாக மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான விசா வழங்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடுவதற்காக 60 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பிசினஸ் விசா மூலமாக இந்தியாவுக்கு வந்து விளையாடி வருகின்றனர். தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஏப்ரல் 15-ம்தேதி வரை இந்தியா வர முடியாது. ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு நாளை மும்பையில் நடைபெறுகிறது. இதில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள், போட்டியை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

கோவிட் 19 வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60-ஐ தாண்டி உள்ளது. இதைத் தொடர்ந்தே வரும் ஏப்ரல்15-ம் தேதி வரை வேலை வாய்ப்பு மற்றும் அரசு முறை பயணம் தவிர்த்து மற்ற அனைத்து விசாக்களையும் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கெனவே மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த அம்மாநில அரசுகள் தயக்கம் காட்டிவருகின்றன. ஏனெனில் போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இவர்களில் யாருக்காவது கோவிட்19 வைரஸ் தொற்று இருந்தால் அதுமற்றவர்களுக்கும் எளிதாக பரவக்கூடும் என மகாராஷ்டிரா, கர்நாடகா அரசுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்த இரு மாநிலங்களையும் மையமாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டால் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களில் பெரும்பாலானோரை ஏப்ரல்-மே மாதத்துக்கு பிறகு அணுக முடியாது. மேலும் போட்டி அட்டவணைகளில் இடமும் இருக்காது. எல்லா அணிகளும் ஏற்கெனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாட சென்றுவிடும். இப்போதைக்கு ரசிகர்களை அனுமதிக்காமல் மைதானத்தின் கதவுகளை மூடியவாறு வேண்டுமானால் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்கள் இல்லாத ஐபிஎல்?

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் எந்தவொரு விளையாட்டு நிகழ்விலும் மக்கள் பெருந்திரளாக கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், விளையாட்டு போட்டிகளை நடத்துவதை தவிர்க்க முடியாதநிலை உருவானால், பார்வையாளர்களை மைதானங்களுக்குள் அனுமதிக்காமல் போட்டிகளை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை செயலாளர் ராதே ஷியாம் ஜுலனியா நிருபர்களிடம் கூறுகையில், பிசிசிஐ உட்பட அனைத்து தேசிய விளையாட்டு ஆணையங்களும் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய ஆலோசனையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி விளையாட்டு நடவடிக்கைகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் மக்கள் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்தஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல், இந்தியன் ஓபன் கோஃல்ப் போட்டிகள் ஏற்கெனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி டெல்லியில் தொடங்கும் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கால்பந்து வீரர் பாதிப்பு

இத்தாலி கால்பந்து வீரரான டேனியல் ருகானிக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டேனியல் ருகானி, கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வரும் ஜூவென்டஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்கிறார். வைரஸ் தொற்றை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ருகானிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்