ஆஷஸ் தோல்வியின் முதல் பலி: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மைக்கேல் கிளார்க்

By ராமு

ஆஷஸ் தோல்வி மற்றும் சொந்த பேட்டிங் தடுமாற்றங்கள் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மைக்கேல் கிளார்க் ஓய்வு பெறுகிறார்..

நடப்பு ஆஷஸ் தொடரில் சொந்த பேட்டிங்கிலும் சோபிக்காமல், அணியும் தோல்வி மேல் தோல்வி கண்டு வருவதை அடுத்து மைக்கேல் கிளார்க் நடப்பு ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதென முடிவெடுத்துள்ளார்.

'தொடர்ந்து விளையாடுவேன், ஓய்வு பெறும் எண்ணமில்லை’ என்று சிலநாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார் கிளார்க், ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் படுதோல்வி ஏற்படும் சூழ்நிலையை அடுத்தும், அவரது பேட்டிங் பார்ம் தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதாலும் ஆஷஸ் முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற அவர் முடிவெடுத்ததாக தெரிகிறது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அபாரமான அரைசதம் எடுத்து கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த கிளார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அந்த முடிவை எடுத்தார். 11 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடிய கிளார்க் அதில் பாதி ஆண்டுகள் கேப்டன்சியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அவரது உடல் தகுதியும் 100% ஒத்துழைப்பு அளிக்கவில்லை, காயமடைந்த பிறகே அவரது பேட்டிங் பெரும் தடுமாற்றத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஓவலில் நடைபெறும் 5-வது டெஸ்ட் போட்டியில் அவரை அணியில் தேர்வு செய்வதே அணி நிர்வாகத்தின் கையில் உள்ளது.

கிரீஸில் வந்து நின்றது முதல் தத்தளிக்கும் மைக்கேல் கிளார்க், நேற்று முக்கியமான 2-வது இன்னிங்சில் 37 வேதனையான பந்துகளைச் சந்தித்து 13 ரன்களை மட்டுமே எடுத்து மார்க் உட் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் இன்னிங்ஸில் பிராடின் விட்டு விட வேண்டிய பந்தை அபத்தமாக ஸ்லேஷ் செய்து 10 ரன்னில் கிளார்க் வெளியேறினார். அதாவது எச்சரிக்கையான ஒரு பேட்டிங் தேவைப்படும் தருணத்தில் ஒரு கேப்டனே டெய்ல் எண்டர் பாணியில் சுழற்று சுழற்றுவது பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிபுணர்களும் ஊடகங்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்தத் தொடரில் கேப்டன் கிளார்க்கின் பேட்டிங் சராசரி 16.71. ரிக்கி பாண்டிங் 2010-11 தொடரில் இவரை விடவும் மோசமாக 16.14 என்ற சராசரியில் ரன்களை எடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லிக்கு ஒரு பெயர் உண்டு பேட்டிங் ஆடாத கேப்டன் என்று. ஆனாலும் இவருக்கு வெற்றியில் அதிர்ஷ்டம் நிரம்ப உண்டு. இவர் 2 ஆஷஸ் தொடர்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 1978-79 ஆஷஸ் தொடரில் இவரது பேட்டிங் சராசரி 16.72, 1981 தொடரில் இவரது சராசரி 17.62. ஆனாலும் இந்த 2 தொடர்களிலும் இவரது கேப்டன்சியில் இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே கிளார்க் பேட்டிங்கும் ஆடுவதில்லை, வெற்றியும் பெறுவதில்லை என்ற ஒரு கேலிப்பேச்சும் ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த 33 இன்னிங்ஸ்களில் 18 இன்னிங்ஸ்களில் கிளார்க் 20 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்துள்ளார். 2013-14 ஆஷஸ் தொடருக்கு முன்பாக கிளார்க்கின் டெஸ்ட் சராசரி 52.08. இப்போது 49.30-வாக உள்ளது.

இதனையடுத்து ‘அவர் ஓய்வு பெறும் நேரத்தை அவரே தீர்மானிப்பார்’ போன்ற வாதங்களை விமர்சித்து கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் லேலர் செய்தி ஊடகம் ஒன்றில் எழுதும் போது, “டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளார்க் முடிந்து விட்டார். இப்போது அவரை எப்படி வெளியேற்றுவது என்பதை திறம்பட நிர்வகிக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

ஆனாலும் நான் ஓய்வு பெறப்போவதில்லை என்று கிளார்க் கூறியிருப்பது, தனக்குத்தானே வழங்கிக் கொள்ளும் சலுகையா, அல்லது அவருக்கான தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

4-ம் நிலையிலிருந்து 5-ம் நிலையில் அவர் களமிறங்குவதை ஆதரிக்கும் அணி நிர்வாகம் அவரைக் காக்கும் முயற்சி என்று விமர்சனம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி குறுகிய காலமேனும், டெஸ்ட் முதலிடத்தைப் பிடித்ததற்கு கிளார்க்கின் பேட்டிங்கும், அபாரமான, புதுமை புகுத்தும் கேப்டன்சியும் என்பதை மறக்கலாகாது.

ஆனால் இப்போது அவர் தனக்குரிய மரியாதையுடன் விடைபெறுவது நல்லது என்று அங்கு எதிர்பார்க்கப்படுவதற்கிணங்க அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் போன்று நட்சத்திர அந்தஸ்து, அவரது ஸ்பான்சர்கள் போன்ற கிரிக்கெட்டுக்குப் புறம்பான விவகாரங்கள் அங்கு ஒரு கேப்டனையோ, வீரரையோ காக்காது என்பது திண்ணம். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவது போல்தான் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடுவது என்பது. அங்கு பர்பாமன்ஸ் மட்டுமே பேசும், வரலாறு, அவரது முந்தைய பங்களிப்பு பற்றிய எப்போதும் தீராத நினைவுகள் அங்கு பலிக்காது.

114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மைக்கேல் கிளார்க் 197 இன்னிங்ஸ்களில் 8,628 ரன்களை 49.73 என்ற சராசரியில், எடுத்துள்ளார். இதில் 28 சதங்கள் 27 அரைசதங்கள் அடங்கும், அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 329 நாட் அவுட். 31 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் கிளார்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்