விராட் கோலியின் பேட்டிங் உத்தியை விமர்சிப்பதா? :  அதிர்ச்சியடைந்த பாக். முன்னாள் கேப்டன்  ஆதரவுக் கரம்

By செய்திப்பிரிவு

விராட் கோலி நியூஸிலாந்து தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2, 19, 3, 14 என்ற ஸ்கோர்களில் ஆட்டமிழந்து சராசரி 9.50 ஆக முடிந்துள்ளது.

விராட் கோலியை சவுத்தி 10 முறை இதுவரை வீழ்த்தியுள்ளார், ட்ரெண்ட் போல்ட் அவரை ஒர்க் அவுட் செய்தார், அனைத்தையும் விட அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் கைல் ஜேமிசனுமே உலகின் நம்பர் 2 வீரரான கோலியை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார், இதனையடுத்து விராட் கோலியின் பேட்டிங் உத்தி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இன்றைய நிலையில் ரவி சாஸ்திரியோ, விக்ரம் ராத்தோரோ கோலியின் தவறினைச் சுட்டிக் காட்ட முடியாத நிலைதான் உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் விராட் கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். 'தி மேட்ச் வின்னர்’ என்ற யூடியூப் சேனலில் அவர் விராட் கோலி மீதான விமர்சனங்களை எதிர்த்துக் கூறும்போது, “கடந்த 11-12 இன்னிங்ஸ்களாக விராட் கோலி சரியாக பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்பதால் அவரது பேட்டிங் பற்றிய பேச்சு இந்தியாவில் அதிகரித்துள்ளது.

சிலர் கோலியின் பேட்டிங் உத்தியை விமர்சிக்கின்றனர். 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ஒரு வீரரின் உத்தி சரியில்லை என்று கூறுகிறார்கள். எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இது நடக்கும் எந்த ஒரு தொடரிலும் எந்த ஒரு ஆண்டிலும் எல்லாம் சரியாகச் செய்தாலும் எதுவும் வேலைக்கு ஆகாமல் போகும் காலக்கட்டம் அனைவரது வாழ்க்கையிலும் இருப்பதுதான்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு ஆண்டும் அவர் ஸ்கோர் செய்து கொண்டே இருக்க முடியாது. கோலி அனாயசமாக அடிப்பதற்காகவா பவுலர்கள் இருக்கிறார்கள? இப்படி எந்த வீரருக்கும் அமைந்து விடாது.

கோலிக்கு என்னுடைய அறிவுரை என்னவெனில் ‘கவலைப்பட வேண்டிய அவசியமில்லை’ என்பதே. அனைவருக்கும் இப்படி நிகழும்தான். லாபங்கள் மட்டுமே ஏற்படக்கூடிய வர்த்தகம் உலகில் இல்லை, நஷ்டமும் வர்த்தகத்தின் அங்கம்தான். கோலி தன் உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE