கிரீன் டாப் பிட்சில் நியூஸிலாந்து வீரர்களின் பவுன்ஸர்களையும், ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாத இந்திய அணி வீரர்கள் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
63 ஓவர்களில் இந்திய அணி 242 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. ஒருநாள் போட்டி போன்று நினைத்து பேட் செய்திருந்தால்கூட ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும், ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்ற பெயரில் இப்படியாக மோசமாக ஆட்டமிழப்பது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் 23 ஓவர்கள் வரை வீசியும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான சிக்கலையும் உண்டாக்கவில்லை. ஆதலால், பந்துவீச்சிலும் அடுத்துவரும் நாட்கள் இந்திய வீரர்கள் படாதபாடு படப்போகிறார்கள்.
» டி20 உலகக்கோப்பை: ஷபாலி மீண்டும் அதிரடி ஆட்டம்: இலங்கையை ஊதித்தள்ளியது இந்திய மகளிர் அணி
இந்தியாவில் சொத்தையான, தட்டை ஆடுகளத்தில் பலவீனமான அணிகளை அழைத்துவந்து அடித்துத் துவைத்தார்கள் இந்திய அணியினர். ஆனால், க்ரீன்டாப் போடப்பட்ட நியூஸிலாந்து ஆடுகளத்தில் களத்தில் நிற்க முடியாமல் திணறுகிறார்கள்.
உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் விராட் கோலியின் மோசமான பேட்டிங் இந்தப்போட்டியிலும் தொடர்ந்தது. 20 இன்னிங்ஸ்களாக விராட் கோலி தொடர்ந்து சதம் இல்லாமல் விளையாடி வருகிறார்.
அனுபவமற்ற வீரர் பிரிதிவி ஷா(54), புஜாரா(54), விஹாரி(55) ஆகிய மூவரும் சேர்ந்துதான் இந்திய அணியின் மானம் காத்தார்கள். இல்லாவிட்டால் மரியாதை நியூஸிலாந்தில் காற்றில் பறந்திருக்கும்.
ஒருகட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால், அதன்பின் 6 ஓவர்களில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதுமட்டுமல்லாமல் உணவு இடைவேளைக்கு இந்திய அணி செல்லும்போது 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், 2-வது செஷனில் 157 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
மோசமான ஷாட்கள், பவுன்ஸர்களையும், ஸ்விங் பந்துவீச்சையும் கணிக்காமல் ஆடியது போன்றவற்றுக்கு இந்திய வீரர்கள் தொடக்க நாளிலேயே விலை கொடுத்துள்ளார்கள். இந்த கிறைஸ்ட்சர்ச் ஆடுகளம் 2-ம் நாளில் இருந்து பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன.
முதல்நாளான இன்று இந்திய அணி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடி இருந்தால் அடுத்து வரும் நாட்கள் நல்ல ஸ்கோர் செய்வதற்கு ஏதுவா இருக்கும். ஆனால், நியூஸிலாந்து அடுத்து வரும் நாட்களை பயன்படுத்திக்கொண்டு, இந்திய அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்யப்போகிறார்கள்.
2-வது டெஸ்டின் முதல்நாளிலேயே நியூஸிலாந்து அணியின் கை ஓங்கிவிட்டது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. லாதம் 27 ரன்களிலும், பிளென்டல் 29 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை பிரிதிவி ஷா இந்த போட்டியில் திருத்திக்கொண்டு அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். அவரின் அதிரடியான பேட்டிங், ஷாட்களை தேர்வு செய்து அடித்தவிதம் போன்றவை பாராட்டும்வகையில் இருந்தது.
அதேபோல புஜாரா, விஹாரி ஆகியோரும் அரைசதம் அடித்து தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஓரளவுக்கு விளையாடாமல் இருந்திருந்தால், இந்திய அணியின் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
நியூஸிலாந்து அணியின் 6.8 அடி வீரர் கைல் ஜேமிஸனின் பந்துவீச்சு இந்திய அணிக்கு இந்த முறையும் கிலியாக உருவெடுத்தது. 14 ஓவர்கள் வீசிய ஜேமிஸன் 3 மெய்டன்கள் உள்பட 45 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. வெலிங்டன் டெஸ்ட்டில் பிரிதிவி ஷா கால் நகரவில்லை, ஷார்ட் பிட்ச் பந்தும் பிரச்சினைகள் கொடுத்தன. பிட்ச் பசுந்தரையாக இருந்தாலும் அதன் அடியில் வன்மை இல்லாததால் பெரிய வேகம் இல்லை, ஸ்விங்கும் பேசின் ரிசர்வ் போல் இல்லை, காற்று அங்கு போல் இங்கு இல்லை.
இதனால் பிரிதிவி ஷா காலை நீட்டி வெளுத்து வாங்கினார், ஷார்ட் ஆஃப் லெந்த் பந்துகளை பின்னால் சென்று பஞ்ச் செய்தார். சவுத்தியை முன்காலிலும் பின் காலிலும் சென்று 3 பவுண்டரிகளை ஷா விளாச ஸ்கோர் 5 ஓவர்களில் 26/0 என்று நல்ல தொடக்கம் ஆனது.
மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரியுடன் 11 பந்துகளைச் சந்தித்து 7 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்
கடந்த போட்டியில் மணிக்கு 130கிமீ வேகம் மட்டுமே வீசிய 6 அடி 8 அங்குல உயர கைல் ஜேமிசன் இந்த டெஸ்ட்டில் காற்றின் துணை இல்லாததால் வேகத்தைக் கூட்டி 135-137 கிமீ வேகம் வீசி படுத்தினார், ஆனால் இவரையும் பாசிட்டிவாகவே ஆடினார்.
19வது ஓவரில்தான் இடது கை ஷார்ட் பிட்ச் ஸ்பெஷலிஸ்ட் நீல் வாக்னர் பந்துவீச்சில் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் விளாசி தன் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் ஷா.
ஆனால் 64 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசிய பிரிதிவி ஷா, கைல் ஜேமிசன் பந்துவீச்சில் தேவையில்லாத ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்தில் சென்ற பந்தை ட்ரைவ் ஆடினார், பந்து ஸ்லிப்பில் தலைக்கு மேல் எழும்பியது, கடினமான அந்த கேட்சை டாம் லேதம் ஒரே எம்பு எம்பி ஒருகையில் பிடித்தார் மிகவும் அபாரமான கேட்ச் அது. ஷா மட்டையை ஏந்தவில்லை, முழு ஆக்ரோஷத்துடன் அதை அடித்தார் அதனால் அடர்த்தியான எட்ஜ் பறந்தது, ஆனால் டாம் லேதம் பெரிய கேட்சைப் பிடிக்க இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது.
விராட் கோலிக்கு வழக்கம் போல்தான் குட்லெந்தில் பிட்ச் செய்து வெளியே எடுக்குமாறு சில பந்துகள் பிறகு அதே இடத்தில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்வது, அதே போல் இம்முறையும் சவுத்தி செய்ய கோலி எல்.பி.ஆகி வெளியேறினார். ரஹானேவுக்கும் சவுத்தி அருமையாக வைடு ஆஃப் த கிரீசிலிருந்து அவுட்ஸ்விங்கர் வீச அதுவரை ஆடாமல் விட்ட ரஹானே தொட்டார், கெட்டார். 7 ரன்களில் வெளியேறினார்.
டெய்லர் கேட்ச் எடுத்தார்.
புஜாரா, விஹாரி நிலைத்து நின்று விக்கெட் சரிவைத்தார்கள். இருவரும் அரைசதம் அடித்து 5-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். விஹாரி 55 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ஜேமிஸன் பந்துவீச்சில் புஜாரா 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இந்திய வீரர்கள் வருவதும் போவதும் என மார்ச்பாஸ்ட் செய்தார்கள். ரிஷப்பந்த் (12) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அஸ்வினுக்கு பதிலாக பேட்டிங்கில் பிரமாதப்படுத்துவார் என்று வாய்ப்பு பெற்ற ஜடேஜா 9 ரன்னில் ஜேமிஸன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். உமேஷ் யாதவ்(0), ஷமி(16) ரன்கள் என விக்கெட்டை இழந்தனர்.
63 ஓவர்களில் இந்திய அணி 242 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஜேமிஸன் 5 விக்கெட்டுகளையும், சவுதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago