நியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி? நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

By க.போத்திராஜ்

கிறைஸ்ட் சர்ச் நகரில் நாளை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர்களின் பவுன்ஸர் பந்துவீச்சை எதிர்கொண்டு போட்டியை வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

உலக அளவில் மிகச்சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதாக இந்திய அணி கூறிக்கொண்டபோதிலும், பவுன்ஸரும், ஸ்விங் பந்துவீச்சும் சேர்ந்து குடைச்சலைச் கொடுக்கும் கிறைஸ்ட் சர்ச் போன்ற ஆடுகளத்தில் தாக்குப்பிடிப்பார்களா என்பது தெரியவில்லை. ஷாட் பந்துகளை எவ்வாறு ஆடுவது குறித்து கடந்த சில நாட்களாக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது நாளை கை கொடுக்குமா என்பது களத்தில் தெரியும்.

உள்நாட்டில் சூரப்புலிகளாக தங்களை இந்திய அணியினர் எப்போதும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பந்துவீச்சுக்குச் சாதகமான க்ரீன்டாப் களத்துக்கு வந்துவிட்டால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தலைகுனிந்து பெவிலியன் செல்லும் நிலைதான் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில் முதல் தோல்வியை வெலிங்டன் டெஸ்ட்டில் சந்தித்து மூன்று நாட்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

நாளை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கடந்த டெஸ்ட்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்.

இந்த டெஸ்ட்டில் மிகப்பெரிய ஆறுதல் காயத்தால் பிரித்வி ஷா விளையாட மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. கடந்த டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் சரியான லைன் லென்த் பந்துகளை தவறாகக் கணித்து ஆடி விக்கெட்டை இழந்தார்.

அடித்து ஆடும் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா, அகர்வால் கூட்டணி முதல் ஷெசன்ரை நின்றுவிட்டால் ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்துவிடலாம். காலை நேரத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும் என்பதால் விக்கெட்டை இழக்காமல் இருப்பது அவசியமாகும். அதேநேரத்தில் பந்துவீச்சைத் தேர்வு செய்தால், தொடக்கத்திலேயே நியூஸிலாந்து விக்கெட்டை வீழ்த்துவது அவசியமாகும்.

புஜாரா விக்கெட்டை நிலைக்க வைக்கும் நோக்கில் பந்துகளை தொடர்ந்து வீணாக்குகிறார். கடந்த டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸில் 91 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்த புஜாராவை என்னவென்று சொல்வது? இந்தப் போட்டியில் புஜாரா சிறிது ரன்களும் அடித்தால் சிறப்பாக இருக்கும்.

விராட் கோலியின் வீக் பாயிண்ட் கண்டுபிடித்துவிட்ட நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் எளிதாக வெளியே அனுப்பிவிடுகிறார்கள். இந்த முறை தனது தவறைத் திருத்திக்கொண்டு கோலி விளையாடுவது அணியின் வெற்றிக்குக் கைகொடுக்கும்.

கடந்த டெஸ்ட்டில் மிகப்பெரிய ஆறுதல் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து பேட் செய்ததுதான். அவர்களும் நடுவரிசையில் நிலைப்பது அவசியம்.

பந்துவீச்சில் நாளை 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கப்போகிறதா என்பது கடைசி நேரத்து மாறுதலுக்கு உட்பட்டது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஒருவேளை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டால், அஸ்வின் அமர வைக்ககப்படுவார்.

வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா காயம் காரணமா விலகியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இவருக்கு பதிலாக ஷைனி, உமேஷ் யாதவ் வரலாம். பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கில் அஸ்வின் இடத்துக்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

டாஸ் நாளை முக்கியப் பங்கு வகிக்கும். நாளை இந்திய அணி டாஸ் வென்றால் பேட்டிங்கைக் காட்டிலும் பந்துவீச்சைத் தேர்வு செய்து தொடக்கத்திலேயே நியூஸிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளிக்க வேண்டும். களத்தில் 12 செ.மீ. அளவுக்குப் புற்கள் இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இதை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

ஏற்கெனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டதால், 2-வது டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரைச் சமன் செய்யலாம். தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை இழக்க நேரிடும்.

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம், உள்நாட்டுச் சூழல், காற்றின் வேகம் ஆகியவை நியூஸிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்து அணியில் கடந்த போட்டியில் இடம் பெறாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் நாளை இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது. அது கூடுதலாக அந்த அணிக்குப் பலம் சேர்க்கும். ஏற்கெனவே போல்ட், சவுதி, ஜேமிஸன் இருக்கும்போது, வாக்னர் வருகை இந்திய அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்