" இந்த பூமிக்கோளின் முதல் மனிதர், சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முதலாக கிரிக்கெட் கடவுள் இரட்டை சதம் அடித்துவிட்டார்"
இந்த வர்ணனையைக் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி குவாலியரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ரவி சாஸ்திரி உச்ச சுருதியில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
யாரைப் பற்றி பேசுகிறோம் எனத் தெரிந்திருக்கும். ஆம், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த நாள்தான் இன்று.
» இந்தத் தோல்வியை பெரிதுபடுத்த விரும்பினால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை: விராட் கோலி ஆவேசம்
கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டு 39 ஆண்டுகள் கழித்து அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் சச்சின் அடித்ததுதான். கிரிக்கெட் உலகில் 2 ஆயிரத்து 692 ஒருநாள் போட்டிகள் அப்போதுவரை நடந்தபோதிலும் ஒருபோட்டியில் கூட ஒரு வீரர்கூட இரட்டை சதம் அடிக்கவில்லை. ஆனால் சச்சின் இரட்டை சதம் அடித்து உலகின் முதல் வீரராக உருவெடுத்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் முழுமையாக 50 ஓவர்கள் களத்தில் தூண் போல் நின்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்தார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த நாளுக்கு முன்பாக எந்த நாட்டு வீரரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததில்லை. இந்த மாபெரும் மைல்கல்லை சச்சின் எட்டியபோது உலக கிரிக்கெட் ரசிகர்களை இன்னும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது. சாதனைகளின் உச்ச உயரத்துக்கு சச்சின் சென்றிருந்தார்.
இந்த போட்டியில் சச்சின் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தொடக்கத்திலிருந்து அவர் அடித்த ஷாட்களும், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் ரசிகர்களைத் தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டது.
இந்த போட்டி புதன்கிழமை அன்று நடந்தது. அலுவலகத்துக்குச் சென்றவர்கள், பள்ளி, கல்லூரிக்குச் சென்றவர்கள் அனைவரும் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்து பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பிய கதையும் ஏராளமாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்டார். சேவாக்கின் ரசிகர்கள் அவரின் ஆட்டத்தை காணமுடியாமல் இருந்தபோது, அவர்களுக்கு இரட்டை விருந்தாக சச்சினின் ஆட்டமும், இரட்டை சதமும் அமைந்தது.
தோனியின் ஆட்டமும் அனைவராலும் ரசிக்கப்பட்ட நேரம். தோனிக்கென்று ரசிகர்கள் கூட்டம் அப்போதுதான் உருவாகி வந்தது. கடைசி 10 ஓவர்களில் தோனியும், சச்சினும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது
அந்த போட்டி குறித்த சுருக்கமான ஒரு நினைவுப்பாதை......
இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி காலிஸ் தலைமையில் பயணம் மேற்கொண்டிருந்தது. 2-வது ஒருநாள் ஆட்டம் குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் அரங்கில் பகலிரவாக நடந்தது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்றவுடன் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். எதிரணிக்களுக்கு அடிவயிற்றில் பெரிய உருண்டையை ஓடவைக்கும் மிரட்டல் பேட்ஸ்மேன்கள் சச்சினும், சேவாக்கும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக் 11 ரன்னில் பார்னல் பந்துவீச்சில் ஸ்டெயினிடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாகவும் பேட் செய்தார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை இப்போது பார்த்தவர்கள், ஏன் கடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இப்படி சொதப்பினார் என்றுகேட்காமல் இருக்கமாட்டார்கள்.
தினேஷ் கார்த்திக் ஆட்டம் இந்த போட்டியில் சச்சினுடன் சேர்ந்து ஆகச்சி்றந்ததாக அமைந்தது. 2-வது விக்கெட்டுக்கு சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டினர். சச்சின் 37 பந்துகளில் அரைசதத்தையும், 90 பந்துகளில் சதத்தையும் எட்டினார். தினேஷ் கார்த்திக் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களைத் தொட்டது. சச்சின் அடித்த ஷாட்களையும், வேகத்தையும் பார்த்த ரசிகர்கள் இந்திய அணி மிகப்பெரிய மைல்கல்லை எட்டும், சச்சின் சாதனை படைக்கப்போகிறார் என்ற எண்ணம் ஓடியது.
2-வது விக்கெட்டுக்கு சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து 194 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்பட 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த யூசுப்பதான், சச்சினுக்கு துணைநிற்க ருத்ரதாண்டவமாடினார். 90 பந்துகளில் சதம் அடித்த சச்சின் அடுத்த 28 பந்துகளில் அரைசதம் அடித்து 118 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். யூசுப் பதான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பிரிந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு தோனி, சச்சினுடன் சேர்ந்தார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் தோனியும், சச்சினும் அடுத்த 10 ஓவர்களை நொறுக்கி எடுத்தனர். ஓவ்வொரு ஓவரிலும் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன. அதிரடியாக ஆடிய தோனி 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
50 ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் லாங்கிவெல்ட் வீசினார். சச்சின் 199 ரன்களுடன் களத்தில் இருந்தார். தோனி 53 ரன்களுடன் பேட்டிங் செய்தார். முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து சச்சினுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார்.
3-வதுபந்தில் சச்சின் ஆப்-சைடில் அடித்தவுடன், தோனி அங்கிருந்து சத்தம்போட்டு ஓடி வாருங்கள் எனக் கூற சச்சின் அந்த மாபெரும் மைல்கல் சாதனையை எட்டினார்.
சச்சின் 200 ரன்கள் அடித்ததைப் பார்த்தவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்துநின்று கைதட்டினர். சச்சின் தனது வழக்கமான ஸ்டைலில் ஹெல்மெட்டை ஒரு கையிலும்,பேட்டை மறுகையிலும் பிடித்துக் கொண்டு வானத்தை மேல்நோக்கிப் பார்த்து ரசிகர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்தார்.
அடுத்து தோனி இரு பவுண்டரிகள் அடிக்க இந்திய அணியின் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை எட்டியது. சச்சின் 3 சிக்ஸர், 25 பவுண்டரிகள் என 147 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 35 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் உலகளவில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் எனப் பாராட்டப்பட்ட ஸ்டெயின், பார்னல், வான் டெர் மார்வி,லாங்கவெல்ட் ஆகியோர் ரன்களை வாரிக் கொடுத்தனர்.
அதிகபட்சமகா பர்னெல் 10 ஓவர்கள் வீசி 95 ரன்களும், ஸ்டெயின் 89 ரன்களும் வாரி வழங்கினர்.
402 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்கைத் துரத்தி தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தனி ஆளாக நின்று போராடிய ஏ.பி.டிவில்லியர்ஸ் சதம் அடித்து 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, யூசுப்பதான், நெஹ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago