டிரெண்ட் போல்ட் வேகப்பந்துவீச்சில் சரணடைந்த இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால், வெலிங்டனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹனுமா விஹாரி 15 ரன்களிலும், ரஹானே 25 ரன்களிலும் உள்ளனர். இன்னும் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தாலும் பேட்ஸ்மேன் என்ற வரிசையில் ரிஷப் பந்த் மட்டுமே இருக்கிறார்.
நியூஸிலாந்து அணியைக் காட்டிலும் இந்திய அணி 39 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்த ரன்களைக் கடந்து இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் மிகப்பெரிய இலக்கு வைத்தால்தான் வெற்றியை நோக்கி நகர முடியும் அல்லது சமன்செய்ய முடியும்.
இப்போதுள்ள சூழலில் ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த் ஆகிய 3 பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழக்காமல் நாளை முழுவதும் பேட்டிங் செய்தால், தோல்வியைத் தவிர்த்துவிடலாம். ஒருவேளை நாளை இந்திய அணி சொற்ப ரன்களுக்குள் முதல் செஷனுக்குள் ஆட்டமிழந்தால் தோல்வி உறுதி. கடைசி இருநாட்கள் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டு இருப்பதால் அதைப்பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடினால் டிரா செய்யலாம். இல்லாவிட்டால், எளிதாக இலக்கை நிர்ணயித்து, வெற்றியை நியூஸிலாந்து தாரை வார்க்கும் நிலை ஏற்படும்.
பிரித்வி ஷாவுக்கு ஒருநாள் போட்டியில் கொடுத்த வாய்ப்பை வீணடித்தார். டெஸ்ட் போட்டியிலும் சொதப்பி வருகிறார். தட்டையான ஆடுகளங்களில் ஆடுவதற்குத்தான் பிரித்வி ஷா சரியான பேட்ஸ்மேன். நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்துவீச்சு ஆடுகளங்களுக்கு இன்னும் பிரித்வி ஷா அதிகமான அனுபவத்தைப் பெற வேண்டும்.
அனுபவ வீரர்கள் கோலி, புஜாரா இருவருமே தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் தங்கள் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்டதுபோல் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கமாட்டார்கள் என நம்பப்பட்டது. ஆனால், டிரெண்ட் போல்ட் ஸ்விங் கலந்த வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பிரித்வி ஷா, கோலி, புஜாரா ஆகிய 3 பேரும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள். சிறப்பாகப் பந்துவீசிய டிரெண்ட் போல்ட் 16 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழக்க 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் கூடுதலாக 132 ரன்கள் சேர்த்து நியூஸிலாந்து 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, நியூஸிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அகர்வால், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸைப் போலவே பிரித்வி ஷா 2 பவுண்டரிகள் அடித்து 14 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்துவீசில் ஸ்குயர்லெல் திசையில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த புஜாரா, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். ஒருபுறம் அகர்வால் அவ்வப்போது அடித்து ஆடினாலும், புஜாரா ஆமை வேகத்தில் ஆடி பந்துகளை வீணடித்து வந்தார். 28 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே புஜாரா சேர்த்திருந்தார்.
மோசமாக பேட்டிங் செய்த புஜாரா 81 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து போல்ட் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் கோலி களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய அகர்வால் அரை சதம் அடித்தார்.
முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த கோலி இந்த முறை நம்பிக்கை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போல்ட் பந்துவீச்சில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்னில் கோலி வெளியேறினார். சவுதி பந்துவீச்சில் 58 ரன்கள் சேர்த்த நிலையில் அகர்வால் பெவிலியன் திருப்பினார்.
ரஹானே 25 ரன்களிலும், விஹாரி 15 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
விளையாட்டு
30 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago