வெற்றி தாகம் மிக்க இந்திய அணியை சந்திக்கும் சங்ககாரா இல்லாத இலங்கை அணி

By இரா.முத்துக்குமார்

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் 3-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி தாகத்துடன் இருக்கும் இந்திய அணியை சங்ககாரா இல்லாத இலங்கை அணி சந்திக்கிறது.

சங்காகரா இந்தத் தொடரில் அவரது ஓய்வு பெறும் தொடர் காரணமாக பல்வேறு உணர்வு ரீதியான விவகாரங்களினால் சோபிக்க முடியவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மிகப்பெரிய வீரர்கள் ஓய்வறையில் திடீரென இல்லாமல் போவது அணியின் உற்சாகத்தை நிச்சயம் பெருமளவு குறைக்கும், கேப்டன் மற்றும் இளம் வீரர்கள் கைவிடப்பட்டது போல் உணர்வார்கள் என்பது வழக்கமான ஒன்றே. ஏனெனில் சங்ககாரா போன்ற வீரர்கள் அணியினரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வாறானது.

இந்நிலையில் சங்ககாரா இல்லாத இலங்கை அணி தனது புதிய கிரிக்கெட் அத்தியாயத்தை நாளை தொடங்குகிறது. இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியிருந்தாலும், அவர்களது ஆட்டத்தின் தன்னம்பிக்கையினால் விளைந்த வெற்றியல்ல அது. சில பல நடுவர் பிழைகள், ஒரு 4 மணி நேர ஆட்டத்தில் இந்திய அணியின் உத்திகள் எதுவும் பலிக்காமல் போனது, 4வது இன்னிங்சில் குறைந்த இலக்கை விரட்டுவதில் உறுதியான உத்திகளை காண்பிக்காமல் பதட்டத்துடனும், தோல்வி பயத்துடனும் ஆடியது ஆகியவையே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்குக் காரணம்.

ஆனால், 2-வது டெஸ்ட் போட்டியில் விரைவில் பவுலர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்தனர், விராட் கோலி தனது களவியூகத்தில் இறுக்கம் காட்டி, இலங்கை பேட்ஸ்மென்கள் விரைவு ரன் குவிப்பில் ஈடுபடாமல் தடுத்து அவர்களை வெறுப்பேற்றி ஒரு முனையில் அஸ்வின், அமித் மிஸ்ராவை வைத்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கையை எழும்பவிடாமல் அடித்துள்ளார்.

எனவே முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை பெற்ற வெற்றியைக் காட்டிலும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் துல்லியமானது, திட்டமிடப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்சில் சுமாரான உதவியே இருந்தாலும் அருமையான கட்டுக்கோப்பான அளவு மற்றும் திசைகளில் வீசினர். இசாந்த் சர்மா தோனி காலக்கட்டத்தில் வீசியது போல் தாறுமாறாக வீசுவதில்லை. இலக்குடன் கொஞ்சம் வேகமும் கூட்டியுள்ளார், அனைத்துக்கும் மேலாக சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆக்ரோஷமாகவும் வீசுகிறார், பொறுமையைக் கடைபிடிக்கும் லைன் மற்றும் லெந்த் துல்லியம் கடைபிடிக்கும் பந்து வீச்சு முறையையும் கையாண்டார்.

எனவே ஒரு வெற்றிக்குப் பிறகே விராட் கோலி அண்ட் கம்பெனியை நிறுத்துவது இலங்கைக்கு கடினம் என்றே தெரிகிறது. மேலும் உற்சாக ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷால் ஆடுவது வேறு தற்போது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது, காரணம் 2-வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ்வின் பவுன்சர் ஒன்று அவரது வலது கை கட்டைவிரலை பதம் பார்த்ததே.

சங்ககாரா இடத்தில் களமிறக்கப்படுவது யார்? உபுல் தரங்காவா, அல்லது திரிமானேவா என்ற கேள்விகள் உள்ளது. அனைத்தையும் விட மிகப்பெரிய கேள்வி, மூத்த, அனுபவ வீரரும், முரளிதரனை வலைப்பயிற்சியில் ஏகப்பட்ட முறை எதிர்கொண்டவருமான சங்ககாராவே அஸ்வினிடத்தில் 4 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்துள்ளார் என்றால் இலங்கை அணிக்கு பெரிய அச்சுறுத்தல் அஸ்வின் என்றே கருத வேண்டியுள்ளது. அவருக்கு எதிராக என்ன உத்தியுடன் வந்தாலும் அதற்கு அஸ்வின் தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

இந்திய அணியில் பலவீனங்கள் இல்லாமல் இல்லை. விஜய் இல்லை, புஜாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு விளையாடவிருக்கிறார், அதுவும் தொடக்க ஆட்டக்காரராக, கே.எல்.ராகுல் கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்தாலும் அவரிடம் சீரான தன்மை இல்லை. தொடக்கத்தில் வீழ்த்தக் கூடிய ஒரு பேட்ஸ்மெனாகவே அவர் தெரிகிறார்.

ரஹானே அபாரமாக ஆடி வருகிறார். கோலியும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அவரைப் போன்ற வீரரெல்லாம் 30, 40-களில், 70-80களில் அவுட் ஆகக் கூடாது, நன்றாக பந்து வீச்சை பார்த்த பிறகு இவ்வளவு ரன்களை எடுத்த பிறகு நல்ல பந்துக்குத்தான் அவுட் ஆக வேண்டுமே தவிர விக்கெட்டை பரிசாக வழங்கிவிட்டுச் செல்லக் கூடாது.

ரோஹித் சர்மாவுக்கு இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட் பிடிபடவில்லை. அவர் ஆக்ரோஷத்துக்கும், தடுப்பாட்டத்துக்கும் இடையே தத்தளித்து வருகிறார். ஹெராத்துக்கு எதிராக தொடர்ந்து தவறான கால் நகர்த்தல்கள் செய்கிறார், பிறகு எப்பவும் இருக்கிறது ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே செல்லும் பந்துகள் அவரை வீழ்த்த. ஆனாலும் இந்திய பேட்டிங் வலுவாகவே உள்ளது. ஏனெனில் இந்த பேட்டிங் வரிசையில் ஒரு எதிர்பாராத் தன்மை உள்ளது. அது இலங்கை கேப்டனை நிச்சயம் குழப்பத்தில் ஆழ்த்தும்.

பிட்ச் நிலவரங்கள்:

இந்த மைதாந்த்தில் நடைபெற்ற கடைசி 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளது. ஜெயசூரியா குறிப்பிட்டது போல் இதுவும் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் வழங்கும் ‘ஸ்போர்ட்டிங் பிட்ச்’ ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், அதாவது பி.சரா ஓவல் பிட்ச் போலவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு டென்னிஸ் பந்து ரக பவுன்ஸ் கிடைக்கலாம், அதாவது முதல் ஒன்றரை நாட்களுக்கு இந்த பவுன்ஸ் இருக்கும், பிறகு பெரிய அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டாலும் சுழற்பந்து வீச்சுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும்படியான பிட்சே அமைக்கப்படும் என்று தெரிகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னமும் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் 28-வது டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்