இந்தியா முதல் இன்னிங்ஸில் 375 ரன்களை எடுக்க, 192 ரன்கள் பின் தங்கிய நிலையில் இறங்கிய இலங்கை 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
கால்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் வலுவான 192 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி கருணரத்னே மற்றும் சில்வா ஆகியோர் விக்கெட்டுகளை டக்கில் இழந்தது. தம்மிக பிரசாத்தும், சங்கக்காராவும் களத்தில் உள்ளனர். அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தவண், கோலி சதம் எடுக்க கடைசியில் விருத்திமான் சஹா அபாரமாக ஆடி தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை எடுத்து 120 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து மோசமான தீர்ப்புக்கு ஆட்டமிழந்தார். நுவான் பிரதீப் பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார் பந்து ஹெல்மெட்டில் பட்டு விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் சென்றது, ஆனால் நடுவர் அவுட் என்று தீர்ப்பளித்தார்.
இசாந்த் சர்மாவும் இவரும் சுமார் 11 ஓவர்கள் விளையாடி 22 ரன்களையே சேர்த்தனர். இது ஒரு எதிர்மறை உத்தியாகும், நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய அனுபவமிக்க அஸ்வின், ஹர்பஜன் பெவிலியன் திரும்பிய பிறகு விரைவாக ரன்களைக் குவித்து இலங்கையை சுமார் 20 ஓவர்களாவது இன்று ஆடச் செய்வதுதான் சிறந்த உத்தியாக இருக்க முடியும்.
ஏனெனில் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் சங்கக்காராவை இன்று இறக்குவதா வேண்டாமா என்ற சங்கட நிலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும். அத்தகைய நெருக்கடியில்தான் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி வாய்ப்பை இந்திய அணி எதிர்பார்க்க முடியும். ஏனெனில் 2-வது இன்னிங்ஸில் இந்தப் பிட்சில் 150 ரன்களைத் துரத்துவது கடினம்.
ஆனால், ஓவர்களை கடத்தி கடைசியில் விரயம் செய்யும் உத்தியைக் கடைபிடித்தது இந்திய அணி.
விராட் கோலி, ஷிகர் தவண் அபாரம்:
இன்று 128/2 என்று தொடங்கிய இந்திய அணியின் விராட் கோலி, ஷிகர் தவண் இருவரையும் உணவு இடைவேளை வரை இலங்கையினால் அசைக்க முடியவில்லை.
விராட் கோலி நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு டெஸ்ட் அரைசதம் கண்டு பிறகு சதமாக மாற்றினார். இன்று காலை முதல் 15 ஓவர்களில் 41 ரன்களை இருவரும் சேர்த்தனர், இந்தியா முதல் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு 169/2 என்று இருந்தது.
பிறகு இருவர் கூட்டணி 150 ரன்களைத் தொட்டது அப்போது தவண் 79 ரன்களில் இருந்தார். பிறகு ஷிகர் தவண் 178 பந்துகளில் சதம் கண்டார். உணவு இடைவேளையின் போது இந்தியா 227/2 என்று இருந்தது, தவண் 110 ரன்களுடனும் விராட் கோலி 86 ரன்களுடனும் இருந்தனர்.
3-வது விக்கெட்டுக்காக 200 ரன்களை இருவரும் அடுத்து சேர்த்தனர். பிறகு விராட் கோலி தனது சதத்தை 187 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் எடுத்தார்.
அவ்வப்போது ரங்கனா ஹெரத் பந்தில் பீட் ஆனார். ஸ்வீப் ஆட முயற்சி செய்து சிலபல அப்பீல்களையும் எதிர்கொண்டார், கடைசியில் அம்மாதிரியான ஸ்வீப் ஷாட்டில் கவுஷலிடம் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிவியூ இல்லாததால் மேல்முறையீட்டுக்கு வழியில்லை. ஆனாலும் டெஸ்ட் மட்டத்தில் பயிற்சியில்லாமல் ஒரு ஷாட்டை முயற்சி செய்தல் கூடாது என்பதை கோலி கற்றுக் கொண்டிருப்பார்.
தவண், கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்காக சேர்த்த 227 ரன்கள்தான் இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது, காரணம் ரஹானே வந்தவுடன் கால்களை சரியாக குறுக்காக நீட்டி வைக்காமல் அரைகுறையாக முன்னே கொண்டு வந்து தடுத்தாட முனைந்து கால்காப்பில் வாங்கி கவுஷலின் இன்னொரு எல்.பி.யாக முடிந்தார்.
அதன் பிறகு ஷிகர் தவணும் சஹாவும் இணைந்து 37 ரன்களை சேர்த்தனர், தவண் 134 ரன்கள் எடுத்திருந்த போது களைப்படைந்த நிலையில் கால்களை நகர்த்தாமல் நுவான் பிரதீப் பந்தை ஆட நினைத்து பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்ப்களை பதம்பார்த்தது. அருமையான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
294/4 என்ற நிலையிலிருந்து விருத்திமான் சஹாவின் அருமையான 60 ரன்கள் தவிர அஸ்வின், ஹர்பஜன், அமித் மிஸ்ரா ஆகியோர் விரைவில் வெளியேற இந்தியா 200 ரன்கள் முன்னிலைக்கு சற்று குறைவாக 375 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. இதற்கு 117 ஓவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆஃப் ஸ்பின்னர் கவுஷல் 134 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், பிரசாத், மேத்யூஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஹெராத் ஏமாற்றமளித்தார், காரணம் இவரை இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினர்.
இலங்கை மோசமான தொடக்கம்:
2-வது இன்னின்சை 4 ஓவர்களுக்காக தொடங்கிய இலங்கை அணி அஸ்வின் முதல் ஓவரை வீசும் கோலியின் அணுகுமுறையை கணிக்கத் தவறியது.
முதல் ஓவரின் 5-வது பந்தில் கருணரத்னே பவுல்டு ஆனார். அடுத்த ஓவரில் அமித் மிஸ்ரா கொண்டு வரப்பட்டார். அருமையாக அவர் சில்வாவுக்கு கூக்ளியாகவே வீசிக் கொண்டிருந்தார். மீண்டும் 5-வது பந்து நன்றாக தூக்கி வீசப்பட்ட கூக்ளியாக, டிரைவ் ஆட முனைந்தார் சில்வா, பந்து கால்காப்புக்கும் பேட்டிற்கும் இடையே புகுந்து பேடை லேசாகத் தடவிச் சென்று ஸ்டம்பை தொந்தரவு செய்தது.
ஆட்ட முடிவில் இலங்கை 5/2 என்று உள்ளது, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 188 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் சங்கக்காரா 1 ரன்னுடனும் தம்மிக பிரசாத் 3 ரன்களுடனும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago